ஸ்ரீ ராஜராஜேஸ்வரர் கோயில் -தளிபரம்பு
இறைவன் : ராஜராஜேஸ்வரர்
ஊர் : தளிபரம்பு
மாவட்டம் : கண்ணூர்
மாநிலம் : கேரளா
நான் என்னுடைய அலுவலக வேலை நிமித்தமாக கண்ணூர் செல்ல விழைந்தபோது அருகில் உள்ள கோயில்களுக்கு செல்லலாம் என்ற அவா என்னுள் ஏற்பட்டது , அவ்வாறு எண்ணுகையில் கண்ணுரில் உள்ள எனது நண்பர்களிடம் விசாரித்த போது அவர்கள் இக்கோயிலை சொன்னார்கள் மற்றும் அவர்கள் இக்கோயிலை ராஜராஜேஸ்வரி கோயில் என்றே அழைத்தனர் மற்றும் அதனுடைய பழமையையும் என்னுடன் பகிர்ந்துகொண்டனர் ,இக்கோயிலுக்கு நம் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் ரஜினிகாந்த் இவர்கள் வருடம் தவறாமல் வந்து செல்வார்கள் என்றும் கூறி என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தினர். நல்ல மழையின் போது கடந்த ஜூலை மாதம் 24 ஆம் தேதி இக்கோயிலுக்கு சென்றேன் . மழையின் ஈரத்தில் இந்த ஊர் மிகவும் பசுமையாகவும் மிக அழகாகவும் இருந்தது , அந்த காலை நேரம் இதமான குளிர்ச்சியான காற்று என் உடலின் தோலை ஸபரிசித்து என்னை ஒரு புது உணர்வுக்கு அழைத்து சென்றது . நான் பெற்ற இந்த உணர்வுகளையும் மற்றும் இக்கோயிலின் சிறப்புகளையும் உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் நான் மற்றட்ட மகிழ்ச்சி அடைகிறேன் .
- 1000 வருடங்கள் முற்பட்ட மிக பழமையான கோயில் ,கேரளாவில் உள்ள பிரசித்துப்பெற்ற 108 சிவாலயங்களில் இக்கோயில் மிக முக்கிய இடத்தை பெற்றதாகும் .
- பகவான் பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கம் ஆகும் .
- 11 நூற்றாண்டு முற்பகுதியில் இக்கோயில் கட்டப்பட்டதாகும் ,முதலாம் ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்ட கோயிலாகும் ,அதனாலே இக்கோயில் ராஜ ராஜேஸ்வர் என்ற பெயருடன் அவரின் ஞாபகமாக அழைக்கப்படுகின்றது .
- இக்கோயிலில் இருந்த ஏழு அடுக்கு ராஜ கோபுரம் திப்புசுல்தானால் 18 நூற்றாண்டில் இடிக்கப்பட்டது .இடிக்கப்பட்ட சிதறல்கள் இன்னும் கிழக்கு கிழக்கு வாசலில் இருக்கின்றன .
- ராமர் வழிபட்ட தலம்: ராவணனுடன் போரிட்டு சீதையை மீட்ட ராமர், இந்த வழியாக திரும்பிச் செல்லும் போது, இங்குள்ள இறைவனை வழிபட்டதாகச் சொல்லப்படுகிறது. ராமன் வழிபட்டதாகக் கருதப்படும் இக்கோவிலின் ‘நமஸ்கார மண்டபத்தினுள்‘ பக்தர்கள் யாரையும் அனுமதிப்பதில்லை. அங்கு சிவபெருமானும், விஷ்ணும் சேர்ந்து இருப்பதாக நம்பப்படுகிறது.
- வரலாறு : சிவபெருமான், பார்வதி தேவியிடம் மூன்று சிவலிங்கங்களைக் கொடுத்து வழிபட சொன்னார்,அவ்வாறு பார்வதி தேவி வழிபாடு செய்ததால், அந்த சிவலிங்கங்கள் கூடுதல் சக்திகளைப் பெற்றிருந்தன. இந்நிலையில் ‘மான்தத்தா’ எனும் முனிவர், சிவபெருமானை வேண்டிக் கடுந்தவம் செய்தார் .அவரது தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் அவரிடம், பார்வதி வழிபட்டு வந்த மூன்று லிங்கங்களில் ஒன்றைக் கொடுத்து, அந்தச் சிவலிங்கத்தை மனித உடல் தகனம் செய்யப்படாத நிலப்பகுதியில் நிறுவி வழிபடச் சொல்லி மறைந்தார்.முனிவர் பல்வேறு இடங்களில் தேடி அலைந்து, கடைசியாகத் ‘தளிப்பிரம்பாவைத்’ தேர்வு செய்து, அந்த இடத்தில் சிவலிங்கத்தை நிறுவி வழிபட்டு வந்தார். முனிவர் மறைவுக்குப் பின்பு, அந்தச் சிவலிங்கம் பூமிக்குள் சென்று மறைந்தது.அதனைத் தொடர்ந்து அம்முனிவரின் மகன் ‘முச்சுகுந்தா‘, சிவபெருமானை நோக்கிக் கடுந்தவம் மேற்கொண்டார். அவர் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான், பார்வதி தேவி வழிபட்ட லிங்கங்களில் இரண்டாவதை அவரிடம் கொடுத்து வழி படச் சொன்னார். அவரும் அந்தச் சிவலிங்கத்தை தளிப்பிரம்பாவில் நிறுவி வழிபட்டு வந்தார். அவருக்குப் பின்பு அந்தச் சிவலிங்கமும் மறைந்து போனது.பல நூற்றாண்டுகள் கடந்தன. முசாகா பகுதியை ஆண்ட ‘சடசோமன்’ எனும் மன்னன், அகத்திய முனிவரின் அறிவுரைப்படி சிவபெருமானை வழிபட்டு, பார்வதி வழிபட்ட மூன்றாவது சிவலிங்கத்தைப் பெற்றான். அவன் பெற்ற சிவலிங்கத்தைத் தளிப்பிரம்பாவில் நிறுவிக் கோவிலமைத்து வழிபாடு செய்து வந்தான். அதுவே இந்த ஆலயம் என்று தல வரலாறு தெரிவிக்கிறது.
- இந்த கோயிலில் சிவனுக்கு உகந்த வில்வ இலையால் அர்ச்சனை செய்வதில்லை அதற்கு பதில் துளசி இலையால் மட்டும் அர்ச்சனை செய்கின்றனர் .
- இக்கோயில் நெய் அமிர்து மற்றும் நெய் விளக்குக்கு பக்தர்கள் அளிக்கும் நெய்யை பயன்படுத்துகிறார்கள் ,
கோயில் திறந்திருக்கும் நேரம் :
காலை 4 .00 முதல் 12 .00 வரை , மாலை 5 .00 முதல் 8 .30 வரை
சிறப்பு தகவல்கள் :
- இக்கோவிலில் பகல் நேரத்தில் பெண்கள் வழிபாடு செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. இரவு நேரத்தில் நடைபெறும் அத்தாழ பூஜைக்குப் பின்பு, இரவு 7.45 மணிக்கு மேல் பெண்கள் இறைவனை வழிபாடு செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். சிவராத்திரி நாளில் பெண்களுக்குப் பகலிலும் அனுமதியளிக்கப் படுகிறது.
- கோயிலுக்குள் செல்லும் போது வேஷ்டி மற்றும் துண்டு மட்டுமே அணிந்திருக்கவேண்டும் . பேண்ட் மற்றும் தொலைபேசி அனுமதி இல்லை ,பெண்கள் புடவை மற்றும் கலாச்சார உடைகள் மட்டுமே அனுமதி .
Photos:
https://alayamtrails.blogspot.com/2021/06/rajarajehwara-temple-taliparamba.html
செல்லும் வழி:
கேரளாவில் உள்ள கண்ணூர் இருந்து மங்களூர் செல்லும் வழியில் சுமார் 21 km தொலைவில் உள்ளது. நிறைய தனியார் பேருந்துகள் செல்கின்றன .
Location: