ஸ்ரீ பிரகதீஸ்வரர் கோயில் – கங்கைகொண்ட சோழபுரம்
இறைவன் : பிரகதீஸ்வரர்
இறைவி : பெரியநாயகி ,பிருகன் நாயகி
தல விருச்சகம் : பின்னை ,வன்னி
தல தீர்த்தம் : சிம்மக் கிணறு
ஊர் : கங்கைகொண்ட சோழபுரம்
மாவட்டம் : அரியலூர்
மாநிலம் : தமிழ்நாடு
கோயிலும் சோழனும் அடிப்படை வரலாறு :
முதலாம் ராஜேந்திர சோழனால் இக்கோயில் கட்டப்பட்டது . இவர் கிபி 1012 -1044 வரை ஆண்ட சோழ மன்னன் ஆவான் . இவன் ராஜராஜ சோழனுக்கும் வானவர் மாதேவி க்கும் பிறந்தான்.ராஜராஜனுக்கு பிறகு சோழ ராஜ்யத்தை ஆண்டவன் .
இவன் போர்களில் பல வெற்றிகளை ரசித்தவன் ,தந்தை ராஜராஜனுக்கு பல போர்களில் வெற்றியை வாங்கி தந்தவன் .அவ்வாறு அவன் பெற்ற வெற்றிகளில் மகுடமாக நின்றது வடதிசையில் போர் தொடுத்து கங்கை கரை வரை சென்று வெற்றி பெற்றது ,அவ்வாறு அங்கு வெற்றி பெற்று அங்கிருந்து கங்கை நதியில் கங்கை நீரை கொணர்ந்து ,கங்கைகொண்ட சோழபுரம் என்ற புதிய நகரை உருவாக்கி அதை தன தலை நகராக மாற்றினான் .இவ்விடத்தில் தான் கங்கைகொண்ட சோழிச்சரம் எனும் பிரமாண்டமான கோயிலை நிறுவினான் .கொண்டுவந்த கங்கை நீரால் பெருவுடையாருக்கு அபிஷேகம் செய்தான்.
முதலாம் ராஜேந்திர சோழன் முதல் மூன்றாம் ராஜேந்திர சோழன் காலம் வரை (சுமார் 230 ஆண்டுகள் ) இவ்வூர் சோழர்களின் தலை நகராக விளங்கியது . ராஜேந்திர சோழன் காலத்தில் தான் சோழ பேரரசு பல பகுதிகளுக்கு விரிவடைந்தது .கடல் கடந்து பல நாடுகளை வென்றான் ,மலேசிய கடற்பகுதியாகிய கடாரம் வென்று “கடாரம் கொண்டான் ” என்ற பட்டமும்,கங்கை பகுதிகளை வென்று “கங்கை கொண்டான் ” என்ற பட்டமும் பெற்றான் .
முதன் முதலில் கங்கைகொண்ட சோழபுரத்தை உருவாக்க சுண்ணாம்பு தயாரித்த சுண்ணாம்பு குழி எனவும் ,கோட்டை இருந்த பகுதி உட்கோட்டை என்றும் ,ஆயுதசாலைகள் இருந்த இடம் ஆயிரக்கலம் என்றும் இன்றும் அழைக்கப்படுகிறது .இவ்வூருக்காக கட்டிய ஏரி சோழகங்கம் எனப்பட்டது .
முதலாம் ராஜராஜன் பலமுறை பாண்டிய நாட்டின் மீது போர் தொடுத்து மதுரையை அழித்தான்.அதனால் அவர்கள் எப்படியேனும் சோழர்களை வெல்ல வேண்டும் என்று தக்க தருணத்தை எதிர்பார்த்து காத்திருந்தனர் .மூன்றாம் குலதுங்க சோழன் (1244 -1279 ) இறந்தபிறகு பாண்டிய மன்னன் முதலாம் சடையவர்மன் சுந்தர பாண்டியன் சோழ நாட்டின் மீது படையெடுத்து அவர்களை வென்று தன் ராஜ்யத்தோடு இணைத்துக்கொண்டான் .அந்த காலத்தில் தான் கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள மாட மாளிகைகள் எல்லாவற்றையும் தரைமட்டம் ஆக்கப்பட்டன .சோழர் குலம் 1279 ஆண்டு முடிவில் அரண்மனை மற்றும் கட்டிடங்களின் செங்கற்கற்களை ஊர் மக்கள் எடுத்து பயன்படுத்த தொடங்கிவிட்டனர் .
பின்பு ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் லோயர் அணைக்கட்டில் கொள்ளிட ஆற்றிற்கு பாலம் அமைக்க இக்கோயிலின் மதிலில் இருந்து கருங்கற்களை எடுத்து சென்று பாலம் அமைத்தனர் ,அவற்றில் பல கல்வெட்டுகள் இருந்ததாகவும் அவைகள் அழிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது .கோயில்களில் இருக்கும் சில கல்வெட்டுகளும் மிகவும் சிதைந்த நிலையிலேயே உள்ளன ,அதனால் இவ் தலத்தை பற்றி பல குறிப்புக்கள் சரியாக கிடைக்கவில்லை .
சோழ அரசர்கள் வாழ்ந்த மாளிகைகள் அவைகள் அமைந்திருந்த இடங்களுக்கு ‘மாளிகைமேடு ‘ எனப்படுகிறது .
இப்பொது இவ்விடம் மிகவும் பின்தங்கிய சிற்றூராக உள்ளது.முன்பு காலத்தில் சோழர்களின் தலைநகராக விளங்கிய இவ் தலைநகரின் பகுதிகள் தற்போது உட்கோட்டை,மாளிகைமேடு ,ஆயிரக்கலம்,வான தரயன் குப்பம் ,கொல்லாபுரம்,வீரசோழநல்லூர் ,மெய்க்காவல்புத்தூர்,சுன்னாம்புகுழி,குருகைபாலப்பன் கோயில் முதலிய சிற்றூர் ஆகும் .
கோயில் சிறப்புக்கள் :
பெரியலிங்கம் : தமிழகத்திலேயே மிக பெரிய லிங்கம் இங்குதான் உள்ளது .சுமார் 13 .5 அடி உயரமும் ,60 அடி சுற்றளவும் கொண்ட ஒரே கல்லால் ஆனா பிரமாண்டமான லிங்கமாக காட்சிதருகிறார் . இங்குள்ள லிங்கம் பெண் அம்சமாகும் ,தஞ்சாவூரில் உள்ள லிங்கம் ஆண் அம்சமாகும் .இங்கு உடுக்கை வடிவம் ,அங்கு உரல் வடிவமாகும் .
நந்திகேஸ்வரர் : இங்குள்ள நந்தி சுண்ணாம்பு கலீல் செய்யப்பட்ட மிக பெரிய நந்தியாகும் .இவர் தரையில் அமர்ந்திருப்பார் .நந்தி இறைவனிடம் இருந்து சுமார் 200 மீட்டர் இடைவெளியில் உள்ளது .தினமும் பகலில் நந்தியின் மீது சூரிய ஒளி பட்டு ,அந்த ஒளி கருவறையில் உள்ள லிங்கத்தின் மெது பிரதிலிப்பது மிகவும் சிறப்பு .
சந்திரகாந்த கல் : கருவரியேல் உள்ள லிங்கத்தின் அடியில் சந்திரகாந்த கல் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது .இதன் சிறப்பு வெயில் காலங்களில் வெப்பத்தை குறைத்து குளிர்ச்சியை தருகிறது .குளிர்காலங்களில் குளிரை இதமான வெப்பத்தை தருகிறது .இதுபோல் வேறு எங்கும் கிடையாது .
பெரியநாயகி : பெரியநாயகி என்ற பெயருக்கு ஏற்றாற்போல் சுமார் 9 .5 அடி உயரத்தில் பிரமாண்டமாக அருள்பாலிக்கிறார் .காஞ்சி பெரியவர் சங்கராச்சாரியார் ஸ்ரீசக்கரத்தை இவளது பாதத்தில் கீழ்ப்பகுதியில் பிரதிஷ்டை செய்துள்ளார் .
குழந்தை வடிவ துர்கை :இங்குள்ள துர்கை 9 வயது சிறுமையென் வடிவில் சிரித்த முகத்துடன் 20 கரங்களுடன் மகிஷாசூரனை வதம் செய்த கோலத்தில் அருளுகிறார் .இவளை ‘மங்கள சண்டி ‘ என்று அழைப்பார்கள் .இவள் ராஜேந்திர சோழனால் குல தெய்வம் ஆவாள் .
இங்குள்ள விநாயகர் வலக்கையில் எழுத்தாணியுடன் உள்ளார். இவரை ‘கணக்கு விநாயகர் ‘ என்றும் ‘கனக விநாயகர் ‘ என்றும் அழைக்கின்றனர்.
கோபுர அமைப்பு : கோபுரம் 180 அடி உயரமும் ,100 அடி அகலமும் கொண்டது .கீழிருந்து 100 அடி உயரம் வரை அகலமாகவும் அதன் பின் 80 அடி உயரம் குறுகலாகவும் கட்டப்பட்டுள்ளது ,கோபுர கலசம் நிழல் கிழே விழுவதில்லை .
அன்னாபிஷேகம் : இக்கோயிலில் ஐப்பசி மாதம் பௌர்ணமி அன்று நடக்கும் அன்னாபிஷேகம் மிகவும் ப்ரசித்துப்பெற்றது .காஞ்சி மடத்தின் சார்பில் நூற்றுக்கணக்கான மூட்டை அரிசியை வேகவைத்து மூலவர் மூடும் அளவுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வார்கள்.காலை 9 .00 மணி முதல் மாலை 4 .00 வரை இந்த அபிஷேகம் நடக்கும் அதன் பிறகு இரவு 9 .00 வரை இவ் லிங்கத்தை பக்தர்கள் தரிசனம் செய்வார்கள். இவ் அன்னதானத்தை காஞ்சி சங்கராச்சாரியார் தொடங்கி வைத்ததாகும்.
மேலும் சிறப்புக்கள் :
இங்குள்ள வீணை இல்லாத சரஸ்வதி ,சண்டேச அனுகிரஹர்,இடது பத்தின் மீது வலது கை அமர்த்திய அர்த்தநாரீஸ்வரர் ஆகிய சிலைகள் மிகவும் பிரசித்துப்பெற்றது.
இவ் தலம் திருவிசைப்பா தலமாகும் ,9 ஆம் திருமறை கோயிலாகும் ,கருவூர் தேவர் திருவிசைப்பா பாடியுள்ளார் .
சயன்கொண்டார் ,ஒட்டக்கூத்தர் முதலிய பெருமக்கள் இங்கு வாழ்ந்துளார்கள்.
கலிங்கத்து பரணி இங்கிருந்து படப்பெற்றதாகும் .விக்ரம சோழ உலா ,இரண்டாம் குலோத்துங்கன் உலா முதலியாவும் இங்கு பாடப்பட்டன .
இக்கோயிலில் இருந்து சற்று தள்ளி சென்றால் சுதையலான பெரிய யாளி காட்சி தருகிறார் ,அதனுள் இறங்கி சென்று ‘சிம்ம கிணற்றை ‘அடையலாம்.இக்கிணற்றில் தான் கங்கை நீரை கலந்துள்ளார்கள் என்று சொல்லப்படுகிறது ,இப்போது இக்கிணறு அடைக்கப்பட்டுள்ளது .30 வருடங்களுக்கு முன் எனது பாலய வயதில் இக்கோயிலுக்கு சென்றபோது இக்கிணற்றுக்குள் இறங்கி உள்ளேன் மற்றும் கோயிலின் மேல் பகுதிகளுக்கு சென்று சுற்றியுள்ள பசுமையான இடங்களை கண்டு ரசித்துள்ளேன் .
Photos:
https://alayamtrails.blogspot.com/2021/06/sri-brihadeeswarar-temple-gangaikonda.html
திறந்திருக்கும் நேரம் :
காலை 6 .00 -12 .00 வரை மாலை 4 .00 -8 .00 வரை
அமைவிடம் :
ஜெயகொண்டதில் இருந்து சுமார் 10 km தொலைவில் சாலையின் ஒட்டியே உள்ளது ,சென்னையில் இருந்து சேத்தியாத்தோப்பு வழியாக மீன்சுருட்டி வந்து அங்கிருந்து திருச்சி சாலையில் 2 km சென்றால் இக்கோயிலை அடையலாம்..
அருகில் உள்ள கோயில் :
இவ் கோயிலின் எதிரே உள்ள சிறிய சாலையில் சுமார் 10 km சென்றால் சலுப்பை கிராமத்தை அடையலாம் அங்கு துறவு மேல் அழகர் என்ற பிரசித்த பெற்ற சித்தர் கோயில் உள்ளது ,மற்றும் மிக பெரிய யானை சிலையும் அங்கு உள்ளது . இக்கோயிலை பற்றி அடுத்து வரும் பதிவில் நீங்கள் காணலாம் .
Location:
Superb info
Bro
Need to visit this interesting place
Thank you very much.