பிரதோஷ காலத்தில் வணங்க வேண்டிய முறைகள்
பொதுவாக அனைத்து ஆலயங்களிலும் இறைவனை இடமிருந்து வலமாகச் சுற்றி வந்து வணங்குதல் வேண்டும். ஆனால் ப்ரதோஷ நாளன்று மட்டும் சிவாலயத்தில் செய்யப்படும் சுற்று முறை மாறுபடும். அதாவது, வலமும் இடமும் மாறி மாறி சுற்றி வந்து, இறைவனை ப்ரதோஷ நாளில் வழிபட வேண்டும்.
முதலில் நந்தியெம் பெருமானை வணங்க வேண்டும். பிறகு சுவாமி சன்னதிக்கு முன் உள்ள நந்தியின் கொம்புகளுக்கிடையே கருவறையில் உள்ள சிவலிங்கத்தைக் கண்டு வணங்க வேண்டும்.
தொடர்ந்து திருச்சுற்றில் சண்டிகேசுவரர் சன்னதி வரை சென்று வணங்க வேண்டும். பிறகு வந்த வழியே திரும்பி வந்து நந்தியையும் , சிவபெருமானையும் முதலில் வணங்கிய முறைப்படி வணங்க வேண்டும்.
அடுத்து மீண்டும் திருச்சுற்றில் வலம் வந்து அபிஷேகத் தீர்த்தம் விழும் பொய்கை வரை சென்று திரும்பி, முதலில் வணங்கிய முறைப்படி நந்தியையும் , சிவபெருமானையும் வணங்க வேண்டும்.
இவ்வாறு மூன்று முறை வணங்க சிவ புண்ணியத்தைப் பெறலாம்.
பாற்கடலைக் கடைந்த போது உண்டான ஆலகால விஷம் தேவர்களைத் துரத்தியது , தப்பிக்க நினைத்து ஓடிய தேவர்கள் , கயிலைக்குச் சென்று இறைவனை வலம் வர ஆலகால விஷம் எதிர்ப்புறமாக வந்து மறித்தது. தேவர்கள் பயந்து திரும்பி , இடப்புறமாக ஓட , விஷம் மீண்டும் எதிர்ப் பக்கம் சூழ்ந்தது. இப்படி வலமும், இடமும் தேவர்கள் பயந்து ஓடிய நிகழ்ச்சியே சோம சூக்தப் பிரதக்ஷணம் என்று பெயர் பெற்றது.
எனவே ப்ரதோஷ நாளில் இறைவனை வலமும், இடமும் மாறி மாறி சுற்றி வணங்குதால் நம்மை சுற்றி அமைந்துள்ள விஷம் போன்ற கெட்ட எதிர்வினை ஆற்றல்கள் விலகி நற் பலன்களைத் தரும்.