ஸ்ரீ ஸ்வர்ண கால பைரவர் கோயில் – அழிவிடைதாங்கி , பைரவபுரம்
பைரவர் பற்றிய ஒரு பார்வை
சிவனின் 64 வடிவங்களில் ஒன்றுதான் பைரவர் வடிவம் . இவர் நாயை வாகனமாக கொண்டிருப்பார் .‘பீரு’ என்ற வேர்ச் சொல்லில் இருந்து உருவானது ‘பைரவர்’ என்ற திருநாமம். ‘பீரு’ என்றால் ‘பயம்’ என்று பொருள். பயம் தரக்கூடியவர்; எதிரிகளை அஞ்ச வைப்பவர் பைரவர். இவர் உக்கிரமான தெய்வமாக விலகினாலும் பெரும்கருணை கொண்டவர் , தன்னை வணங்கும் பக்தர்களுக்கு துன்பங்களை போக்கி அளவற்ற செல்வத்தையும் இன்பங்களையும் அள்ளித்தருபவர் . பைரவர் அவதரித்த பைரவாஷ்டமியானது கார்த்திகை மாதம் , தேய்பிறை அஷ்டமி திதியில் கொண்டாடப்படுகிறது.
சிவாலயங்களில் சிவபூஜையானது காலையில் சூரியனிடம் இருந்து தொடங்கி அர்த்தசாமத்தில் பைரவர் சன்னதியில் முடிவடையும் , ஆதலாலேயே சிவாலயங்களில் வடகிழக்கு மூலையில் பைரவரும் ,தென்கிழக்கு மூலையில் சூரியனையும் வைத்து வழிபடுகின்றனர் . மாலையில் பூஜைகள் முடிந்து சாவியை பைரவர் காலடியில் வைத்து வணங்கிவிட்டு ஆலயத்தை மூடிவிட்டு செல்வார்கள் .
இவ்வளவு பெருமைகளை கொண்ட இந்த கால பைரவர் நமது காஞ்சிபுரம் அருகில் அழிவிடைதாங்கி என்ற ஊரில் ஸ்வர்ண கால பைரவராக வீற்றியிருக்கிறார் . வாருங்கள் நாமும் கோயிலை காண பயணிப்போம் .
காசியிலிருக்கும் ஸ்ரீ கால பைரவருக்கு நிகரான ஷேத்திரம், தமிழ்நாட்டில் பல பைரவர் கோயில்கள் இருந்தாலும் ஸ்ரீசொர்ணகால பைரவர் போன்ற தனி ஆலயம் வேறு எங்கும் இதுபோன்று கிடையாது. ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதை ‘அழிவிடைதாங்கி பைரவபுரம்’ என்றும் சொல்ல்வார்கள்.
ஐந்து நிலை ராஜகோபுரம் நம்மை அழைக்கிறது, உள்ளே சென்றால் விளக்கு கல்தூண் இருப்பதை நாம் காணலாம் அதை தாண்டி நாம் உள்ளே நுழைந்தால் நந்தி , நாய் ,யானை ,கருடர்,மையில் என அணைத்து தெய்வங்களின் வாகனங்களை நாம் பைரவருக்கு முன் காணமுடிகிறது , அவர்களை வணங்கிவிட்டு வாயில் காவலர்களை தாண்டி நாம் உள்ளே நுழைந்தால் பைரவரை நாம் தரிசிக்கலாம் .
பைரவரை வணங்கிவிட்டு சன்னதியை சுற்றும் போது அவரின் சன்னதியின் மண்டபத்தின் மேல் பகுதியில் பைரவரின் எட்டு கோலங்களையும் சுதை வடிவில் தரிசிக்கலாம். அன்ன வாகனத்துடன் கூடிய பிராம்மி சக்தியுடன் அசிதாங்க பைரவர்; ரிஷப வாகன மகேஸ்வரியுடன் ருரு பைரவர்; மயில் வாகன கவுமாரியுடன் சண்ட பைரவர்; கருட வாகன வைஷ்ணவியுடன் குரோதன பைரவர்; குதிரை வாகன வாராஹியுடன் உன்மத்த பைரவர்; யானை வாகன இந்திராணியுடன் கபால பைரவர்; சிம்ம வாகன சாமுண்டியுடன் பீஷண பைரவர்; நாய் வாகன சண்டிகையுடன் சம்ஹார பைரவர் என அஷ்ட பைரவர்களை இங்கு காணலாம்.
கோயில் வரலாறு :
பழங்காலத்தில் தொண்டை மண்டலம், தொண்டகாருண்யம் என்ற காடுகளை திருத்தி நாடாக்கி அதனை பவுத்த மன்னர்கள் ஆண்டு வந்தனர். கி.பி. 3-ம் நூற்றாண்டில் இங்கு கல்விக்கூடம் சிறப்பாக இயங்கி வந்தது. வட இந்திய மாணவர்கள் இங்கு பயின்றனர். ஹிமசீதன மன்னர் காலத்தில் அசுலங்கர் என்ற சமண அறிஞர், பவுத்தர்களுடன் வாதிட்டு வென்று அவர்களை நாடு கடத்தினார். பின்னர் இங்கு சமண கல்விக் கூடத்தை அமைத்தார். அப்போது இந்த ஊர் ‘அறவழித்தாங்கி’ என அழைக்கப்பட்டது.
பிற்காலத்தில் இந்தப் பகுதியை பல்லவர்களும், சோழர்களும் ஆட்சி செய்த போது சிவனை போற்றும் சைவ நெறியானது வளம் பெற்றது.
சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்னர் (கி.பி.14-ம் நூற்றாண்டில்) வீர வீர சம்புவராயன் என்ற மன்னர் இங்கு ஒரு கோட்டையை கட்டி ஆட்சி செய்து வந்தான். அப்போது வடக்கே இருந்து யாதவராயன் என்ற மன்னன் படையெடுத்து வந்தான். இருவருக்கும் இடையே போர் மூண்டது. முதல் நாள் நடந்த போரில் சம்புவராயன், தன் படைகள் நாசமடைவதைக் கண்டு வருந்தினார். அன்று இரவு கால பைரவர் அவரது கனவில் தோன்றி ‘நீ வருத்தப்பட வேண்டாம். நாளைய போரில் நீ வெற்றி பெற நான் துணையிருப்பேன்’ என்றார். அடுத்தநாள் போரில் சம்புவராயன் பெரும் வெற்றி பெற்றான். அழிந்துபோன தனது படையையும், பட்டணத்தையும் இறைவன் காப்பாற்றியதால் இவ்வூருக்கு ‘அழிபடைத்தாங்கி’ எனப் பெயரிட்டான். வெற்றியை அருளிய கால பைரவருக்கு பெரியதொரு கோவிலையும் எழுப்பினான்.
பைரவருக்கு சகஸ்ர நாம அர்ச்சனை செய்து வடை, சர்க்கரைப் பொங்கல், தேன் முதலியன படைத்து வழிபட்டால் வழக்குகளில் வெற்றியும், வியாபாரத்தில் லாபமும் உண்டாகும். 7 மிளகுகளை துணியில் கட்டி, நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் இழந்தப் பொருட்கள் திரும்ப கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
Photos:
https://alayamtrails.blogspot.com/2021/07/sri-swarnakala-bhairavar-temple.html
திறந்திருக்கும் நேரம் :
திங்கள் முதல் சனி கிழமை வரை
காலை 8 .00 – 12 .00 மணி வரை
மாலை 4 .00 – 08 .00 மணி வரை
ஞாயிற்று கிழமை
காலை 8 – மாலை 3 மணி வரை
மாலை 4 – இரவு 8 மணி வரை
தேய்பிறை அஷ்டமி
பூஜை நேரம் 12 .00 மணியில் இருந்து 1 1 /2 மணி வரை
காலை 8 – இரவு 9 மணி வரை
தொடர்புக்கு :
9787143750 , 9751572140 ,9943784070 ,9786237097
செல்லும் வழி :
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகாவில் உள்ளது அழிவிடைதாங்கி கிராமம், மதுரா பைரவபுரம். காஞ்சீபுரத்தில் இருந்து வெம்பாக்கம் வழியாக அழிவிடைதாங்கி வந்தடையலாம். வெம்பாக்கத்தில் இருந்து ஷேர் ஆட்டோ வசதி உள்ளது.
Location :