Sri Subramanya Swamy Temple – Tiruchendur

திருச்செந்தூர் பாலசுப்ரமணியசாமி கோயில்

Tiruchendur-Murugan-Temple

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடுதான் திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்.முருகனுக்குரிய ஆறுபடைவீடுகளில் திருச்செந்தூர் மட்டும் கடற்கரையிலும், பிற ஐந்தும் மலைக்கோயிலாக அமைந்துள்ளது. அருணகிரிநாதர் இத்தலமுருகனை பற்றி பாடியுள்ளார் .  சங்க இலக்கியங்களிலும், சிலப்பதிகாரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ள இக்கோயில், 2000-3000 ஆண்டுகள் வரை பழமை கொண்டதாகக் கருதப்படுகின்றது.

 முருகப்பெருமான் சூரனை வெற்றி கொண்ட பிறகு  தனது வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சிவபூசை செய்தார். இந்த கோலத்திலேயே முருகன் வலது கையில் தாமரை மலருடன் அருளுகிறார்.தலையில் சிவயோகி போல ஜடாமகுடமும் தரித்திருக்கிறார். இவருக்கு இடது பின்புற சுவரில் ஒரு லிங்கம் இருக்கிறது. இவருக்கு முதல் தீபாராதனை காட்டியபின்பே, முருகனுக்கு தீபராதனை நடக்கும். சண்முகர் சன்னதியிலும் சுவாமிக்கு பின்புறம் லிங்கம் இருக்கிறது. இவ்விரு லிங்கங்களும் இருளில் உள்ளதால், தீபாராதனை ஒளியில் மட்டுமே காண முடியும். இதுதவிர முருகன் சன்னதிக்கு வலப்புறத்தில் “பஞ்சலிங்க’ சன்னதியும் இருக்கிறது.

 திருச்செந்தூர் கோவில் கோபுரம் 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.150 அடி உயரம் கொண்ட இக்கோவிலின் கோபுரம், ஒன்பது தளங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது. கோபுரம் சுவாமிக்கு எதிரே, அதாவது கிழக்கு திசையில்தான் அமைந்திருக்க வேண்டும். ஆனால், அப்பகுதியில் கடல் இருப்பதால் மேற்கில் கோபுரம் கட்டப்பட்டுள்ளது. முருகன் மூலஸ்தானத்தின் பீடத்தைவிட, இக்கோபுர வாசல் உயரமாக இருப்பதால், எப்போதும் அடைக்கப்பட்டே இருக்கிறது. கந்தசஷ்டி விழாவில் முருகன் திருக்கல்யாணத்தின்போது நள்ளிரவில் ஒருநாள் மட்டும் இந்த வாசல் திறக்கப்படும்.

இரண்டு முருகன்: சூரபத்திரனை வதைத்து திரும்பிய முருகன் சுப்பிரமணியராக நான்கு கரங்களுடன் சிவபூஜை செய்தபடி ஜடாமுடியுடன் தவக்கோலத்தில் இருக்கிறார். சுப்பிரமணியரின் தவம் கலைந்துவிடக்கூடாது என்பதற்காக அவருக்கு பிரகாரம் கிடையாது. இவருக்கான பிரதான உற்சவர் சண்முகர், தெற்கு நோக்கி தனி சன்னதியில் இருக்கிறார். மூலவருக்குரிய பூஜை மற்றும் மரியாதைகள் சன்முகருக்கே செய்யப்படுகிறது.

மூலவருக்கு பின்புறம் சுரங்க அறை ஒன்று உள்ளது. ரூ.5 கட்டணம் செலுத்தி உள்ளே சென்றால், முருகப்பெருமான் பூஜித்த பஞ்சலிங்கங்களை தரிசனம் செய்யலாம். இந்த அறைக்கு ‘பாம்பறை’ என்றும் ஒரு பெயர் உண்டு.

திருச்செந்தூர் கோவில் இடது பக்கத்தில் வள்ளிக்குகை உள்ளது. இந்த குகைக்கு முன்புள்ள சந்தன மலையில் தொட்டில் கட்டினால், குழந்தை பாக்கியம் விரைவில் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது .நாழிக்கிணறு 24 அடி ஆழத்தில் இருக்கும் வற்றாத நீரூற்றாகும். இங்கு நீராடிய பிறகே கடலில் நீராட வேண்டும் என்பது ஐதீகம். இது கடலுக்கு அருகில் இருந்தாலும் உப்பு கரிப்பதில்லை .

மூலவருக்கு, பக்தர்கள் கட்டணம் செலுத்தி தங்க அங்கி அணிவித்து வழிபடலாம். இந்த வழிபாட்டின் போது முருகருக்கும், பரிகார தெய்வங்களுக்கும் தங்க அங்கி, வைர வேல் அணிவிக்கப்படும்.

தல வரலாறு :

தேவர்கள், தங்களைத் தொந்தரவு செய்த, சூரபத்மனை அழிக்கும்படி சிவபெருமானிடம் முறையிட்டனர். அவர்களது வேண்டுதலை ஏற்ற சிவன், தன் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு பொறிகளை உண்டாக்கினார். அதிலிருந்து முருகப்பெருமான் தோன்றினார். பின், சிவபெருமானின் கட்டளையை ஏற்று, சூரபத்மனை அழிக்க இங்கு வந்தார். இவ்வேளையில் முருகப்பெருமானின் தரிசனம் வேண்டி, தேவர்களின் குருவான வியாழபகவான் இத்தலத்தில் தவமிருந்தார். அவருக்குக் காட்சி தந்த முருகப்பெருமான், இவ்விடத்தில் தங்கினார். அவர் மூலமாக அசுரர்களின் வரலாறையும் தெரிந்து கொண்டார். அப்போது தனது படைத்தளபதியான வீரபாகுவை, சூரபத்மனிடம் தூது அனுப்பினார். அவன் கேட்கவில்லை. பின்பு, முருகன் தன் படைகளுடன் சென்று, அவனை வதம் செய்தார். வியாழ பகவான், முருகனிடம் தனக்குக் காட்சி தந்த இவ்விடத்தில் எழுந்தருளும்படி வேண்டிக்கொண்டார். அதன்படியே முருகனும் இங்கே தங்கினார். பின்பு, வியாழபகவான் விஸ்வகர்மாவை அழைத்து, இங்குக் கோயில் எழுப்பினார். முருகன், சூரனை வெற்றி பெற்று ஆட்கொண்டதால் இவர், “செயந்திநாதர்’ என அழைக்கப்பெற்றார். பிற்காலத்தில் இப்பெயரே “செந்தில்நாதர்’ என மருவியது. தலமும் “திருஜெயந்திபுரம்’ என அழைக்கப்பெற்று, “திருச்செந்தூர்’ என மருவியது.

திருவிழா :

திருச்செந்தூரில் கந்தசஷ்டி முதல் ஆறுநாட்கள் சஷ்டி விரதம், சூரசம்ஹாரம், ஏழாம் நாளில் முருகன், தெய்வானை திருக்கல்யாணம், அடுத்த 5 நாட்கள், சுவாமி திருக்கல்யாண கோலத்தில் ஊஞ்சல் சேவை என இவ்விழா 12 நாட்கள் கொண்டாடப்படுகிறது.

Photos:

https://alayamtrails.blogspot.com/2021/10/sri-subramanya-swamy-temple-tiruchendur.html

திறந்திருக்கும் நேரம் :

திருச்செந்தூர் முருகன் கோயில் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கிறது. திருச்செந்தூரில் முருகனுக்கு தினமும் 9 கால பூஜை நடைபெறுகிறது.

செல்லும் வழி :

இக்கோயிலானது திருநெல்வேலியில் இருந்து சுமார் 60 km தொலைவிலும் துத்தக்குடியில் இருந்து சுமார் 45 km  தொலைவிலும் அமைந்துள்ளது .

Location:

Leave a Reply