ஸ்ரீ கோதண்டராமர் கோயில் – அயோத்தியபட்டினம் , சேலம்
ஆர்ப்பாட்டம் இல்லாத அமைதியான ஊரில் புராதான சிறப்புகளோடு இந்த கோதண்டராமர் கோயில் அமைந்திருக்கிறது . முகநூலில் வந்த இந்த கோயிலின் சிறப்பை பார்த்து நான் பிரமித்துபோய் எனக்கு எவ்வளவு விரைவாக பார்க்க முடியுமோ பார்த்திவிடவேண்டும் என்ற ஒரு அவா இருந்தது , அது இவ்வளவு விரைவாக எனக்கு கிட்டும் என்று எண்ணவில்லை எல்லாம் அந்த இறைவன் செயல்.
வடக்கில் உள்ள அயோத்தி சென்று ராமரை வணங்குவதால் கிடைக்கும் புண்ணியம் இந்த தளத்தின் வீற்றியிருக்கும் ராமரை வணங்கினால் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது . இக்கோயிலானது 1000 வருடங்கள் பழமையான கோயிலாகும் . விபூஷணனுக்காக பட்டாபிஷேக கோலத்தில் காட்சி தந்ததாக கூறுகிறார்கள் . ராமர் காலடி பட்டதால் இவ்விடம் அயோத்யாபட்டிணம் என்ற பெயர் பெற்றது .
ஐந்து அடுக்கு ராஜகோபுரத்தின் முன் மிக பெரிய விளக்கு தூண் உள்ளது .ராஜகோபுரத்தை கடந்து நாம் உள்ளே சென்றால் விசாலமான வெளி பிரகாரம் உள்ளது . பலிபீடம் ,கொடிமரத்தை வணங்கிவிட்டு சென்றால் 28 கலைநயமிக்க தூண்களை கொண்ட மகா மண்டபத்தை காணலாம் . கோடி மரத்திற்கு முன் கருட ஆழ்வார் சன்னதி உள்ளது . அவரை தரிசனம் செய்துவிட்டு மகா மண்டபத்தில் உள்ள கலைநயமிக்க சிற்பங்களை நாம் கண்டு மகிழலாம் . திருமலை நாயக்கர் காலத்தில் கட்டப்பட்ட கோயில் ஆகும் . அசுரனை வதம் செய்யும் தேவர் குதிரை , யானை , யாழி ,சிங்கம் போன்ற வற்றின் மீது அமர்ந்திருப்பது போன்று ஒரே கல்லாலான கற்சிலைகள் நம் மனதை நிச்சயமாக கொள்ளை அடிக்கும் . கலைநுட்ப வேலைப்பாடுகளுடன் கூடிய தட்டினால் பல்வேறு இசை எழுப்புகின்ற இசை தூண்கள் .ராமர் பட்டாபிஷேக காட்சி , பரதன் ,சத்ருகன் ,லட்சுமணன் சிற்பங்கள் மற்றும் ஒரு தூணில் திருமலை நாயக்கர் தன தேவியுடன் காட்சி தருகிறார் . அது மட்டும் அல்லாமல் மண்டபத்தின் சீலிங்கில் காலத்தால் அழியாத அற்புதமான ஓவியங்கள் உள்ளன .
மூலஸ்தானத்திற்கு பாதுகாவலராக துவாரகா பாலகர்கள் உள்ளார்கள் . அவரை கடந்து உள்ளே சென்றால் மூலவரான ராமர் பட்டாபிஷேக கோலத்தில் அருள்புரிகிறார் . சீதா , லக்ஷ்மணன் ,பரதன் ,சத்ருகன் ,அனுமன் ,சுக்ரீவன் ,அங்கதன் என அனைவரும் அவர் அருகிலேயே இருக்கிறார்கள் . ராமர் , சீதா பிராட்டியுடன் அமர்ந்த கோலத்தில் சேவை தருகிறார் .அவரை தரிசனம் செய்துவிட்டு கோயிலை வலம் வந்தால் விநாயகர் சன்னதி ,ஆழ்வார் சன்னதி மற்றும் ஆண்டாள் சன்னதிகளை நாம் காணலாம் .
ஆஞ்சநேயர் கோயில் :
கோயிலின் முன்புறம் சாலையை கடந்து சென்றால் பழமையான ஆஞ்சநேயர் சன்னதி வரும் . ஆஞ்சநேயர் சன்னதி சுற்றி நிறைய கட்டடங்கள் எழுப்பப்பட்டுள்ளது , அதனால் விசாரித்து செல்லவும் .
ராமர் பாதம் பட்ட வடக்கே அயோத்திற்கு நிகரான இந்த அயோத்தியபட்டினம் கோதண்ட ராமரை நாம் தரிசித்து புண்ணியம் பெற நாம் கோடி புண்ணியம் செய்திருக்க வேண்டும்.
Photos:
https://alayamtrails.blogspot.com/2021/10/sri-kothandaramaswamy-temple.html
திறந்திருக்கும் நேரம் :
காலை 6 .00 மணி முதல் 11 .00 மணி வரை , மாலை 5 .00 மணி முதல்
8 .௦௦ மணி வரை .
செல்லும் வழி :
சேலத்தில் இருந்து சுமார் 10 km தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது . புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஆத்தூர் செல்லும் பேருந்தில் சென்றால் இவ்வூருக்கு செல்லலாம் , ரயில்வே கிராஸிங் இருந்து ஷேர் ஆட்டோவில் செல்லலாம் , இல்லை என்றால் பழைய பேருந்தில் இருந்து நகரப்பேருந்து 4 ஆம் எண் பேருந்துகள் நேராக கோயிலுக்கே செல்லும் .
Location: