ஸ்ரீ சரஸ்வதி அம்மன் கோயில் – கூத்தனுர்
இந்தியாவிலேயே சரஸ்வதி தாயாருக்கு தனி கோயில் உள்ள மிக சில கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும் . தமிழ்நாட்டில் சரஸ்வதிக்கு தனிக்கோயிலாக அமைந்துள்ள இடம் இந்த கூத்தனுர் ஆகும் .
ஆதி காலத்தில் இந்த ஊர் பூந்தோட்டம் என்ற பெயரால் அழைக்கப்பட்டது. இரண்டாம் இராஜராஜ சோழன் தன் அவைப்புலவர் ஒட்டக்கூத்தருக்கு தானமாக வழங்கியதால் இவ்வூர் ‘கூத்தனுர் ‘ என்று அழைக்கப்படுகிறது . அவரே இக்கோயிலையும் கட்டியதாக தல புராணம் கூறுகிறது .
தாயாரின் அமைப்பு :
சரஸ்வதி தாயார் இங்கு கன்னியாக அமர்ந்து பக்தர்களுக்கு அருளை வாரி வழங்குகிறார் . கருவறையில் வெண்ணிற ஆடை தரித்து வெண் தாமரையில் பேரெழிலோடு வீற்றிருக்கிறாள், வலது கீழ் கரத்தில் சின்முத்திரையும், இடக்கையில் புத்தகமும், வலது மேல் கரத்தில் அட்சர மாலையும், இடது மேல் கையில் அமிர்த கலசமும் தாங்கியிருக் கிறாள். ஜடா முடியுடன், ஞானச்சஸ் என்கிற மூன்றாவது கண்ணும் கொண்டு, கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறாள்.
ஒட்டக்கூத்தர் :
இரண்டாம் இராஜராஜ சோழன் அவையில் புகழ்பெற்று விலகிய ஒட்டக்கூத்தர் தான் கவி பாடும் முன் கவிபாடும் திறன் வேண்டி கலைமகளை பூஜிக்க நினைத்தார் ஒட்டக்கூத்தர். கூத்தனூரில் பூந்தோட்டம் ஒன்றை அமைத்து தட்சிணாவாகினியாய் ஓடும் அரிசொல் மாநதியின் நீரால் அபிஷேகம் செய்து நாள்தோறும் அம்பிகையை வழிபட்டு வந்தார். ஒட்டக்கூத்தரின் தொண்டில் மகிழ்ந்த நாமகள் தன் வாய் மணமாம் தாம்பூலத்தை அவருக்கு கொடுத்து வரகவி ஆக்கினாள் என்பர். தனக்கு பேரருள் புரிந்த கூத்தனூர் சரஸ்வதியை ஆற்றுக்கரை சொற்கிழத்தி வாழிய என்று பரணி பாடியுள்ளார் ஒட்டக்கூத்தர்.
பிராத்தனை
புருஷோத்தம பாரதி என்பவருக்கு விஜயதசமியன்று அம்பிகையின் அருள் கிடைத்ததாகச் சொல்லப்படுகிறது. இதன் காரணமாக விஜயதசமி நாளில் பல்வேறு ஊர்களைச் சேர்ந்த பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை இந்தக் கோயிலுக்கு அழைத்து வந்து வித்தியாப்பியாசம் செய்த பிறகே பள்ளியில் சேர்ப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள்.
இக்கோயிலின் முன்பு பேனா, பென்சில் மற்றும் நோட் புக் ஆகிய கடைகளே நிறைய உள்ளன . பெரியவர்கள் ,குழந்தைகள் இங்கு இவைகளை வணங்கி கொண்டு சென்று சரஸ்வதி தாயாரை தரிசிக்கிறார்கள் . பேனா மற்றும் பென்சில் வாங்கி சென்றால் அதை குருக்களிடம் கொடுத்தால் அவர் தாயாரின் பாதத்தில் வைத்து கொடுக்கிறார்கள் இதற்கு அர்ச்சனை சீட்டு வாங்க தேவையில்லை .
தேர்வுக்குச் செல்லும் பள்ளி மாணவ மாணவிகள் வெற்றி பெறவும் மற்றும் பள்ளி சேர்க்கைக்கு முன்னர் குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்கவும் கல்விக்கடவுளாம் இச்சரஸ்வதி அம்மனை வழிபட்டு பயனடைகின்றனர்.
விழாக்கள் :
விஜயதசமியன்று காலை ருத்ராபிஷேகம் நடைபெறும். மாதந்தோறும் கலைமகளுக்கு பவுர்ணமி அன்று மாலையில் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகளும், மூல நட்சத்திரம் அன்று சிறப்பு அபிஷேகம் உண்டு.
திறந்திருக்கும் நேரம் :
காலை 7.30 மணி முதல் 1.00 மதியம் மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை.
Contact Number : 04366-239 909
செல்லும் வழி :
நாகை மாவட்டம் மயிலாடுதுறை பேரளம் மற்றும் திருமீயச்சூர் திருத்தலத்துக்கு அருகில் உள்ளது கூத்தனூர். மயிலாடுதுறை மற்றும் திருவாரூரில் இருந்தும் இக்கோயிலுக்கு செல்லலாம் . அருகில் பல தேவார பாடல் பெற்ற தலங்கள் உள்ளன .
Location: