ஸ்ரீ சூஷ்மபுரீஸ்வரர் கோயில் – திருச்சிறுகுடி
இறைவன் :சூஷ்மபுரீஸ்வரர்
இறைவி :மங்களநாயகி
தல விருட்சம்:வில்வம்
தீர்த்தம்:மங்களதீர்த்தம்
ஊர்:செருகுடி
மாவட்டம்:திருவாரூர் , தமிழ்நாடு
பாடியவர்கள் : திருஞானசம்பந்தர்
சிற்றிடை யுடன்மகிழ் சிறுகுடி மேவிய சுற்றிய சடைமுடி யீரே சுற்றிய சடைமுடி யீரும் தொழுகழல் உற்றவர் உறுபிணி யிலரே.
– திருஞானசம்பந்தர்
தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை சிவதளங்களில் இத்தலம் 60 வது தலமாகும் . தேவாரப்பாடல் பெற்ற 276 சிவாலயங்களில் இது 123 வது தேவாரத்தலம் ஆகும்.
இத்தலத்தில் உள்ள ஈசனை பார்வதி தேவி தன் கையினால் மணலை பிடித்து உருவாக்கினார் . இக்கோயில் செவ்வாய் பரிகார தலம்.
கோயில் அமைப்பு :
சிறிய ஊரின் நடுவே வயல்கள் சூழ்ந்த ஒரு ரம்மியமான இடத்தில் ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் இக்கோயில் அமைந்துள்ளது . ராஜகோபுரத்தை அடுத்து பலி பீடம், நந்திமண்டபம் ஆகியவை உள்ளன. மூலவர் சன்னதியின் இடது புறத்தில் மங்களாம்பிகை சன்னதியும், நவக்கிரகங்கள் சன்னதியும் உள்ளன. கருவறை கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா, துர்க்கை, திருச்சுற்றில் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், மங்கள விநாயகர், சண்டிகேஸ்வரர், அங்காரகன் ஆகியோரின் சன்னதிகள் உள்ளன.
தல வரலாறு :
ஒருமுறை கயிலையில் சிவபெருமானும், அம்பாளும் சொக்கட்டான் விளையாடினர். அம்மன் பக்கம் வெற்றி திரும்பியது. இந்நிலையில், திடீரென சிவபெருமான் அவ்விளையாட்டில் இருந்து காணாமல் போனார். பின்னர், ஈசனை தேடி அலைந்தாள் அம்பிகை. எங்கும் காணாததால், இந்த ஊருக்கு வந்து மங்கள தீர்த்தம் உண்டாக்கினார். அதில், ஒரு பிடி ஈரமணலை எடுத்து, சிவலிங்கமாகப் பிடித்து சிவனை வழிபட, ஈசன் மனமிறங்கி பார்வதியை மீண்டும் ஏற்றுக்கொண்டார். கைப்பிடி மணலை எடுத்து சிவலிங்கம் உண்டாக்கியதால், இந்த ஊருக்கு ‘சிறுபிடி’ என்று பெயர். அது மருவி தற்போது, ‘சிறுகுடி’ என்று அழைக்கப்படுகிறது. மங்கள தீர்த்தம் உண்டாக்கியதால், மங்களாம்பிகை என்று அம்பிகை அழைக்கப்படுகிறாள். மணலால் பிடித்த லிங்கம் என்பதால், அபிஷேகம் செய்வதில்லை. மாறாக புனுகு சாத்துவதே வழக்கமாக இருக்கிறது.
சுயம்பு லிங்கமாக இருப்பதால் நெற்றியில் பள்ளமும் கையின் அடையாளம் இருபுறமும் இருக்கும் .
செவ்வாய் பரிகார தலம் :
இந்தத் தலத்து இறைவனை மங்களன் என்னும் செவ்வாய் வழிபட்டதால், இறைவனுக்கு ஶ்ரீமங்களநாதர் என்ற திருப்பெயரும் உண்டு. அதனால், இந்தக் கோயில், செவ்வாய் தோஷ நிவர்த்தித் தலமாகவும் திகழ்கின்றது. அங்காரகனுக்கு ஏற்பட்ட சாபம் நீங்கி பூஜித்து வரம் பெற்றமையால், இக்கோயிலில் உள்ள அங்காரகனை தரிசனம் செய்பவர்களுக்கு செவ்வாய் தோஷம், திருமணத் தடை, பலவித நோய்கள் தீரும்.
தல சிறப்பு :
திருஞானசம்பந்தர் தமது 12-வது வயதில் பல்லக்கில் வந்து, இங்குள்ள சுவாமியை தரிசனம்செய்திருக்கிறார். அவர் வருகையை அறிந்த திருநாவுக்கரசர், ‘வயதில் சிறியவராக இருந்தாலும் அவருக்கு இறைவன் அருள் புரிந்திருக்கிறான். அவரை நாமும் தரிசிக்கவேண்டும்’ என்று நினைத்தவர், திருஞானசம்பந்தரை தரிசித்ததுடன், அவருடைய பல்லக்கையும் சுமந்துவந்தார். அதை அறியாத திருஞானசம்பந்தர், ‘சிவனடியார் திருநாவுக்கரசரை சந்திக்க திருவிழிமழலைக்குச் செல்லுங்கள்’ என்று கட்டளையிடுகிறார். ‘அடியேன் இங்குதான் இருக்கிறேன்’ என்று திருநாவுக்கரசர் சொல்ல, அதிர்ந்துபோன திருஞானசம்பந்தர், கீழே இறங்கி ‘என்னை நீங்கள் சுமப்பதா?’ என்று கூறி காலில் விழுந்து வணங்கியிருக்கிறார். இந்த அரிய நிகழ்வு நடந்த தலம் இது.
இக்கோயிலில் உள்ள நவகிரக மண்டபத்தில் திருஞானசம்பந்தர் குழந்தை உருவில் கையில் பால் கிண்ணத்துடன், இடுப்பில் அரைஞாண்கயிற்றுடன் உள்ளார் .
சோழர்கள் கட்டிய கோயில் இது . மற்றும் .சங்க இலக்கியங்களில் புறநானூற்று நூலில் புகழ்ந்து கூறப்படும் ‘பண்ணன்’ என்னும் கொடைவள்ளல் பிறந்த தலம் எனப்படுகிறது.
Photos:
https://alayamtrails.blogspot.com/2022/01/sri-sukshmapureeswarar-temple-cherugudi.html
திறந்திருக்கும் நேரம் :
காலை 6 .00 மணி முதல் நண்பகல் 12 .00 மணி வரை , மாலை 5 முதல் மாலை 7 .00 மணி வரை
Contact Number: விஸ்வநாத குருக்கள் – 04366 -291646
செல்லும் வழி :
கும்பகோணம் – நாச்சியார்கோவில் – கூந்தலூர் – பூந்தோட்டம் சாலையில் கூந்தலூர் கடந்து கடகம்பாடியை அடைந்து அங்கிருந்து வடக்கே அரசலாற்றுப் பாலம் தாண்டி சுமார் 3 கி. மி. தொலைவில் சிறுகுடி தலம் இருக்கிறது.
Location :