Sri Agneeswarar Temple – Thirupugalur

ஸ்ரீ அக்னிபுரீஸ்வரர் கோயில் – திருப்புகலூர்

இறைவன் :சரண்யபுரீஸ்வரர், அக்னிபுரீஸ்வரர், பிரத்தியக்ஷ வரதர், கோணபிரான், வர்த்தமானேஸ்வரர்

இறைவி :கருந்தார் குழலி, சூளிகாம்பாள்

தல விருட்சம்:புன்னை மரம்

தீர்த்தம்:அக்னி தீர்த்தம், பாண தீர்த்தம்

ஊர்:திருப்புகலூர்

மாவட்டம்:நாகப்பட்டினம் , தமிழ்நாடு

பாடியவர்கள் : அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர்

வெங்கள்விம்மு குழலிளையர் ஆடவ்வெறி விரவுநீர்ப்

பொங்கு செங்கட் கருங்கயல்கள் பாயும் புகலூர்தனுள்

திங்கள்சூடித் திரிபுரம் ஒரு அம்பால் எரியூட்டிய

எங்கள் பெம்மான் அடிபரவ நாளும்இடர் கழியுமே

திருஞானசம்பந்தர்

தம்மை யேபுகழ்ந்து இச்சை பேசினும் சார்கி னும்தொண்டர் தருகிலாப்

பொய்ம்மை யாளரைப் பாடா தேஎந்தை புகலூர் பாடுமின் புலவீர்காள்

இம்மை யேதரும் சோறுங் கூறையும் ஏத்த லாம்இடர் கெடலுமாம்

அம்மை யேசிவ லோகம் ஆள்வதற்(கு) யாதும் ஐயுற வில்லையே

சுந்தரர்

எண்ணுகேன் என்சொல்லி எண்ணு கேனோ

எம்பெருமான் திருவடியே எண்ணி னல்லாற்

கண்ணிலேன் மற்றோர் களைக ணில்லேன்

கழலடியே கைதொழுது காணி னல்லால்

ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய்

ஒக்க அடைக்கும்போ துணர மாட்டேன்

புண்ணியா உன்னடிக்கே போது கின்றேன்

பூம்புகலூர் மேவிய புண்ணி யனே.

திருநாவுக்கரசர்

தேவார பாடல் பெற்ற 276 சிவா தலங்களில் 138 வது தலமாகும் . காவேரி தென்கரை சிவத்தலங்களில் 75 வது தலமாகும் .

 திருநாவுக்கரசர் முக்தி அடைந்த தலம் . முருக நாயனார் அவதரித்த தலம். அக்னி பகவானுக்கு இத்தலத்தில் உருவம் உண்டு. இறைவன் சுந்தரருக்கு செங்கற்களை பொன் கற்களாக்கி தந்த அற்புதம் நிகழ்ந்த தலம். சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கோயில். நளமஹாராஜனுக்கு தனி சன்னதி இங்கு உள்ளது .

கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என முக்காலத்துக்கும் உரிய தோஷ நிவர்த்தி அருளும் தலம். அதற்கேற்ப இங்கே  பூதேஸ்வரர், வர்த்தமானேஸ்வரர், பவிஷ்யேஸ்வரர் ஆகிய மூவரும், தனித்தனி சந்நிதிகளில் வீற்றிருக்கிறார்கள்.  இவர்களை வணங்கினால் பித்ரு தோஷ நிவர்த்தி கிடைப்பதுடன், பொருட்செல்வம், கல்விச்செல்வம், வேலைவாய்ப்பு, பேரின்ப பெருவாழ்வு அடையலாம் என்கிறார்கள்.

இந்த அக்னீஸ்வரர் ஆலயத்தின் உள்ளேயே கோணப்பிரான் சந்நிதியின் அருகே திருப்புகலூர் வர்த்தமானீச்சுரம் என்ற மற்றொரு பாடல் பெற்ற தலமும் அமைந்திருக்கிறது.

கோயில் அமைப்பு :

மூவரால் பாட பெற்ற இந்த தலம் நான்கு புறமும் அகழியால் சூழப்பட்டு மிக அற்புதமாக காட்சி தருகிறது .சுமார் 90 அடி உயரம் கொண்ட 5 நிலை ராஜ கோபுரம் கிழக்கு நோக்கி உள்ளது .

கோயிலின் உள்ளே நுழைந்தவுடன் முதலில் நாம் தரிசனம் செய்வது தாயார் கருந்தார் குழலியை , இவர் சன்னதி தெற்கு நோக்கி உள்ளது . இவள் இங்கு மிகவும் சக்தி வாய்ந்தவள் . திருமணம் ஆகாத பெண்கள் வேண்டுதல் செய்து சாயரட்சை காலத்தில் வெள்ளை வஸ்திரம் சாற்றினால் திருமணம் கைகூடுவது நிச்சயம்.இவள் தன் பக்தையின் மகளுக்கு பிரசவம் பார்த்ததாக வரலாறு உள்ளது. கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் ஏற்பட, அம்பாளை வழிபட்டு பலனடையலாம்.

 இந்த சந்நிதியை ஒட்டியே மூலவர் அக்னீசுவரர் சந்நிதி அமைந்துள்ளது. சுயம்பு லிங்கமான மூலவருக்கு கோணப்பிரான் என்ற பெயரும் உண்டு. வடபக்கமாக கோணலாக காட்சியளித்ததால், சிவனுக்கு “கோணபிரான்’ என்ற பெயர் ஏற்பட்டது.ஒரு முறை வாயு, வருணன், அக்னி ஆகிய மூவருக்கும் இடையே தர்க்கம் ஏற்பட்டதில் அக்னி பகவான் மறைந்து போனார். இதனால் உலகில் யாகம் முதலியன நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. நைவேத்யம் உள்ளிட்ட அனைத்தும் நின்று போயின. மிகுந்த துன்பத்திற்குள்ளான முனிவர்களும், தேவர்களும் இதிலிருந்து விடுபட லிங்க பூஜை செய்தனர். அவரது உத்தரவுப்படி அக்னி பகவான் மீண்டும் வந்தார். அவருக்கு இரண்டு முகம், மூன்று பாதம், நான்கு கொம்பு, ஏழு கை, ஏழு ஜூவாலையுடன் சிவன் ஒரு உருவத்தையும் படைத்தார். அக்னி பகவானுக்கு அனுக்கிரகம் செய்ததால் இறைவனுக்கு “அக்னீஸ்வர சுவாமி’ என்ற பெயர் ஏற்பட்டது. சரண்ய மகராஜா என்பவரால் பூஜிக்கப்பட்டதால் சரண்யபுரீஸ்வரர் என்ற பெயரும் ஏற்பட்டது.

 மூலவருக்குப் பக்கத்தில் சந்திரசேகரர் தனிச்சந்நிதி உள்ளது. இங்கு இவரே பிரதானமாவார். கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், நடராசர், தட்சிணாமூர்த்தி, அகத்தியர், லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, பிட்சாடனர் ஆலிங்கனகல்யாண சுந்தரர் முதலிய மூர்த்தங்கள் உள்ளன.மூலவர் சந்நிதிக்கு வடக்கே வர்த்தமானீசுவரர், அவர் துணைவி மனோண்மனிக்கும் தனி சந்நிதிகள் இருக்கின்றன. இந்த வர்த்தமானீசுவரரைப் பாராட்டி சம்பந்தர் தனியாக ஒரு பதிகம் பாடி இருக்கிறார். மூலவரைச் சுற்றி உள்ள உட்பிரகாரத்தில் சந்திரசேகரர், திரிபுராந்தகர், அக்னி, பிரம்மா ஆகியோரின் செப்புச் சிலை வடிவங்களைக் காணலாம்.

அக்னி பகவான் :

அக்னி பகவான் தவம் செய்து பாவ விமோசனம் பெற்ற தலமாகும். இங்கு இறைவன் சந்திரசேகரர் உருவத்தில் எழுந்தருளி அக்னி பகவானுக்கு காட்சி கொடுத்துள்ளார்.அக்னி பகவானுக்கு உருவம் இத்தலத்தில் உண்டு. 2 முகம், 7 கைகள், 7 ஜுவாலை, 4 கொம்புகள், 3 பாதங்கள் உடையவராக உள்ள இந்த அக்னி பகவான் விக்கிரகம் மிகவும் அபூர்வமானது மட்டுமல்ல அரியதும் கூட.

வாஸ்து தலம் :

திருவாரூரில் மண்டபம் கட்டி வருவோர்க்கெல்லாம் அன்னதானம் செய்வதற்காக  சுந்தரமூர்த்தி சுவாமிகள் புகலூரானை பாடி படிக்காசு வாங்கி வருகிறேன் என்று கூறிவிட்டு திருப்புகலூர் கோயிலுக்கு வரும்போது இரவாகிப் போனதால் கோயில் மூடப்படவே, வாசலிலேயே தலையில் செங்கல் வைத்து உறங்கி இருக்கிறார்.  அவர் வந்த நோக்கத்தை அறிந்த அக்னீஸ்வரர் அவர் தலைக்கு அடியில் வைத்திருந்த செங்கல்லை தங்க கல்லாக மாற்றிக் கொடுத்திருக்கிறார்.  நேரில் தரிசிக்காமல் நான் விரும்பி வந்ததை அள்ளிக்கொடுத்த அக்னீஸ்வரரை என்னவென்று புகழ்வேன் என்று சுந்தரமூர்த்தி நாயனார் மனமுருகி பாடியிருக்கிறார்.  அன்று முதல் புதிதாக வீடுகட்ட விரும்புவோர், அக்னீஸ்வரர் முன்பாக 6 செங்கல் வைத்து பூஜித்து, அதில் மூன்றை இறைவனுக்கு கொடுத்துவிட்டு மீதி மூன்றை வீட்டிற்கு எடுத்துச் செல்கிறார்கள்.  அந்த கற்களை வீட்டில் தினந்தோறும் பூஜித்து வீடுகட்டும்போது வாசல்நிலை மேல் ஒன்றும், ஈசான்ய மூலையில் ஒன்றும், பூஜை அறைமேல் ஒன்றும் வைத்து கட்டினால் எவ்வித தடையுமின்றி கிரஹபிரவேசம் நடக்கும் என்பதோடு, அந்த வீட்டிற்கு என்றும் அக்னீஸ்வரர் அருள்பார்வை இருக்கும் என்றும் நம்பப்படுகிறது. இதற்காக ஏகப்பட்ட பக்தர்கள் இங்கு வந்து செங்கல் கொடுத்து பூஜை செய்து வீட்டிற்கு எடுத்து செல்கிறார்கள் .

சனீஸ்வரர் மற்றும் நளமஹாராஜா:

 நளச் சக்கரவர்த்திக்கும் சனீஸ்சுவர பகவானுக்கும் ஒரே சந்நிதி. நள சக்கரவர்த்தி பாணாசுரன் தீர்த்தத்தில் மூழ்கி எழுந்ததும் இதிலிருந்து 7 கல் தொலைவில் உள்ள திருநள்ளாறில் நான் விலகிக் கொள்கிறேன் என்று அசரீரி ஏற்பட்டதாகும். அதனால் இத்தலத்தில் உள்ள சனீஸ்வர பகவான் அனுக்கிரஹ மூர்த்தியாக வணங்கப்படுகிறார்.  காக்கையை தோளில் சுமந்தபடி நளமகராஜனுக்கு இக்கோயிலில் சிலை உள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

அப்பர் முக்தி :

சிவத்தலத்தில் தான் அப்பர் தன் 81 வது வயதில் முக்தி அடைந்தார் .தனது 81 வது வயதில் இத்தலத்தில் உழவார பணி செய்தபோது, இறைவன் சித்திரை சதய நட்சத்திர நாளில் முக்தி கொடுத்தார். முக்தி ஷேத்திரங்களில் இதுவும் ஒன்றாகும்.அப்பருக்கு தனி சந்நிதி உள்ளது . சித்திரை சதயத்தை ஒட்டி 10 நாள் திருவிழா நடக்கிறது. அப்பர் சித்திரை சதயம் நான்காம் சாமத்தில் இறைவனிடம் ஜோதியாக ஆகும்போது பக்தர்கள் கண்ணில் நீர் வழிய தரிசிப்பது கண்கொள்ளா காட்சி ஆகும். ஆதலால் இக்கோயில் சதய நட்சத்திரக்காரர்கள் தரிசிக்க வேண்டிய ஒரு கோயில் .சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களது சனிக்கிழமைகளில் வரும் சதய நட்சத்திர நாளில் இத்தலத்தில் வழிபாடு செய்தால், ஆயுள்விருத்தி, நல்ல ஆரோக்கியம், நற்பண்புகள் வந்து சேரும்.

ஒரே தலத்தில் இரண்டு தேவார தலம் :

 ஒரே கோயிலுக்குள் திருநாவுக்கரசரும், சுந்தரரும் பாடிய இரு சன்னதிகள் உள்ளது. ஒரு சன்னதியிள் இறைவன் அக்னீஸ்வரர். இவருக்கு சரண்யபுரீஸ்வரர், கோணபிரான் என்ற பெயர்களும் உண்டு. இறைவி கருந்தார் குழலி. மற்றொரு சன்னதியின் இறைவன் வர்த்மானேஸ்வரர். இறைவி மனோன்மணி அம்மை.

இக்கோயிலானது சோழர்கள் காலத்தை சார்ந்ததாகும் .ராஜராஜன் காலத்து கல்வெட்டுகள் இருப்பதன் மூலம் தொன்மையான கோயில் என்று தெரிய வருகிறது. திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரமூர்த்தி ஆகியோரால் பாடல் பெற்றது. 6 அல்லது 7ம் நூற்றாண்டு கோயிலாக இது இருக்க வேண்டும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பரிகாரம் :

இத்தலத்தில் வாஸ்து பூஜை செய்வது மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது. இத்தலத்தில் சுந்தரருக்கு செங்கற்களை பொன்கற்களாக மாற்றி கொடுத்து அருளியதாலும் அக்னி பகவான் பாபவிமோசனம் பெற்றதாலும் புதியதாக வீடு கட்டுபவர்கள் இத்தலத்திற்கு வந்து செங்கல் வைத்து மனைமுகூர்த்தம் செய்த பிறகே வீடுகட்ட ஆரம்பிப்பது வழக்கம்.சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களது சனிக்கிழமைகளில் வரும் சதய நட்சத்திர நாளில் இத்தலத்தில் வழிபாடு செய்தால், ஆயுள்விருத்தி, நல்ல ஆரோக்கியம், நற்பண்புகள் வந்து சேரும்.திருமணமாகாத பெண்கள் அம்பாளுக்கு வெள்ளைப்புடவை சாத்தினால் திருமணம் கைகூடுவதாக நம்பிக்கையுள்ளது.

Photos:

https://alayamtrails.blogspot.com/2022/01/sri-agneeswarar-temple-thirupugalur.html

திறந்திருக்கும் நேரம் :

காலை 6 .30 முதல் நண்பகல் 12 .30 வரை , மாலை  5 .00 மணி முதல் இரவு  9 .00 மணி வரை .

Contact details :  94431 13025,  4366 – 292 300 , ராமநாத குருக்கள் : 94878 64858 , இங்குள்ள குருக்கள் பக்கத்தில் உள்ள திருக்கண்ணபுரம் ராமநாதேஸ்வரர் (பாடல் பெற்ற தலம் ) கோயிலையும் பூஜை செய்வதால் நீங்கள் அவரின் வழிகாட்டுதலின் படி செல்லலாம் .

செல்லும் வழி :

நன்னிலம் அருகே திருப்புகலூர் உள்ளது. இந்த கோவிலுக்கு கும்பகோணத்தில் இருந்து 37 கிலோமீட்டர் தொலைவிலும், திருவாரூரில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும், மாயவரத்தில் இருந்து 32 கிலோமீட்டர் தொலைவிலும், நாகப்பட்டினத்தில் இருந்து 24 கிலோமீட்டர் தொலைவிலும் திருப்புகலூரை அடையலாம்.

திருப்புகலூருக்கு அருகில் 108 திவ்யதேசங்களில் ஒன்றான திருக்கண்ணபுரம் மற்றும் இராமனதீச்சுரம் என்ற பாடல் பெற்ற சிவஸ்தலமும் உள்ளன.

Location:

திருச்சிற்றம்பலம்

Leave a Reply