ஸ்ரீ பதஞ்சலீஸ்வரர் கோயில் – கானாட்டம்புலியூர் , கானாட்டம்முள்ளுர்
இறைவன் :பதஞ்சலீஸ்வரர்
இறைவி :கோல்வளைக்கையம்பிகை, கானார்குழலி , அம்புஜாட்சி
தல விருட்சம்:எருக்கு
தீர்த்தம்:சூர்யபுஷ்கரிணி
புராண பெயர்:திருக்கானாட்டுமுள்ளூர்
ஊர்:கானாட்டம்புலியூர்
மாவட்டம்:கடலூர் ,தமிழ்நாடு
பாடியவர்கள்: சுந்தரர் , வள்ளலார்
வள்வாய மதிமிளிரும் வளர்சடையி னானை
மறையவனை வாய்மொழியை வானவர்தங் கோனைப்
புள்வாயைக் கீண்டுலகம் விழுங்கியுமிழ்ந் தானைப்
பொன்னிறத்தின் முப்புரிநூல் நான்முகத்தி னானை
முள்வாய மடல்தழுவி முடத்தாழை ஈன்று
மொட்டலர்ந்து விரைநாறும் முருகுவிரி பொழில்சூழ்
கள்வாய கருங்குவளை கண்வளருங் கழனிக்
கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே.
– சுந்தரர்
தேவார பாடல் பெற்ற காவேரி வடகரை சிவத்தலங்களில் இத்தலம் 32 வது தலமாகும் . தேவரா பாடல் பெற்ற 276 சிவத்தலங்களில் 86 வது தலமாகும் . புலிக்கால் முனிவர் வழிபட்ட ஐந்து தலங்களில் இத்தலமும் ஒன்றாகும் .
பழமையான சிறிய கிராமத்தில் அமைதியான சூழ்நிலையை கொண்ட வயல்வெளிகள் சூழ்ந்த பகுதியில் கம்பீரமாக இக்கோயில் மூன்று நிலை ராஜகோபுரத்துடன் கிழக்கு நோக்கி இக்கோயில் விளங்குகிறது . கோயிலுக்கு நேர் எதிரே இக்கோயிலின் சூர்யபுஷ்கரிணி நிறைந்த நீரோடு காட்சிதருகிறது .
கோயிலின் ராஜகோபுரத்தை கடந்து உள்ளே சென்றால் முன் மண்டபத்தில் கொடிமரமும் , நந்தியும் உள்ளார்கள் . முன் மண்டபத்தின் முன் பதஞ்சலி முனிவர் தனி சன்னதியில் உள்ளார் .
மண்டபத்தில் வலது புறத்தில் இறைவி கோல்வளைக்கை அம்மை தெற்கு நோக்கி காட்சிதருகிறார் . இவருக்கு கானார்குழலி என்ற பெயரும் உண்டு .சுந்தரர் தனது பதிகத்தில் அம்பாளைக் குறித்தும் பாடியுள்ளார். இவளது சன்னதிக்கு வலப்புறத்தில் சனீஸ்வரர் தனிச்சன்னதியில் இருக்கிறார். சனிதோஷம் உள்ளவர்கள் இங்கு பிரார்த்தனைகள் செய்து கொள்கின்றனர்.இக்கோயிலுக்கு தனி நவகிரக சன்னதி இல்லை .
முன் மண்டபம் தாண்டி நேரே உள்ளே சென்றால் மூலவர் பதஞ்சலி ஈஸ்வரர் சிறிய லிங்க உருவில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். தமிழ் வருடப்பிறப்பான சித்திரை மாதத்தில் 3 நாட்கள் சூரியன் தன் ஒளியை சூரியன் மீது பரப்பி பூஜிக்கிறார்.
கோஷ்ட மூர்த்திகளாக விநாயகர் ,தட்சணாமூர்த்தி ,மஹாவிஷ்ணு ,துர்கை ஆகியோர்கள் உள்ளார்கள் . கருவறைச் சுற்றில் மகாவிஷ்ணுவிறகு நேர் எதிரே வள்ளி தெய்வனை சமேத முருகர் நின்ற கோலத்தில் எழுந்தருளியுள்ளார். அருகில் கஜலட்சுமிக்கும் தனி சந்நிதி உள்ளது. கருவறைச் சுற்றில் காசி விஸ்வநாதர், காசிவிசாலாட்சி, நிருதிவிநாயகர் ஆகியோரும் தனி சந்நிதிகளில் அருள்புரிகின்றனர் . கோஷ்டத்திலுள்ள தட்சிணாமூர்த்திக்கு மேல் கல்லால மரம் இல்லை. நடராஜர் சந்நிதிக்கு எதிரே நால்வருடன் விநாயகரும், பதஞ்சலி முனிவரும் காணப்படுகின்றனர்.
இங்குள்ள நடராஜர், தனது இடது காலை முன்புறமாக தள்ளி தூக்கி நிறுத்தி, உடலை பின்புறமாக சாய்த்தபடி இருக்கிறார். பதஞ்சலிக்காக சிவன், மகிழ்ந்து நடனமாடியதால் இவ்வாறு காட்சியளிப்பதாக சொல்கிறார்கள்.
மகாவிஷ்ணு நின்ற கோலத்தில் இருக்கிறார். இவருக்கு நேரே இருக்கும் முருகனும் வள்ளி, தெய்வானையுடன் நின்ற கோலத்தில் இருக்கிறார். தன் மாமாவிற்கு மரியாதை செய்யும்விதமாக முருகன் நின்ற கோலத்தில் இருப்பதாக சொல்கிறார்கள்.
பிராத்தனை :
பணி செய்யும் இடத்தில சரியான மரியாதை கிடைக்காதவர்கள் , பணி உயர்வு ,இடமாற்றம் ,நாக தோஷம் உள்ளவர்கள் இக்கோயிலுக்கு வந்து தரிசிக்கிறார்கள் .
கல்வெட்டுகள் :
இக்கோயில் சோழர்கள் காலத்தை சேர்ந்ததாகும் .விக்ரம சோழன் கல்வெட்டு உள்ளது அதில் இத்தலம் “விருதராச பயங்கர வளநாட்டு கீழ் கானாட்டுமுள்ளூராகிய திருச்சிற்றம்பல சதுர்வேதிமங்கலம் ” என்று குறிப்பிடப்பட்டுள்ளது .
Photos:
https://alayamtrails.blogspot.com/2022/04/sri-pathanjaleeswarar-temple-sri.html
திறந்திருக்கும் நேரம் :
காலை 7 .00 முதல் 9 .00 மணி வரை , மாலை 6 .00 மணி முதல் இரவு
7 .30 வரை .
Contact details: திரு : ஜெயச்சந்திரன் – Ph : 979033377
இவருக்கு போன் செய்து போனால் கோயிலை திறந்து காண்பிப்பார் .
செல்லும் வழி :
சிதம்பரத்தில் இருந்து காட்டுமன்னார்கோயில் சென்று அங்கிருந்து கமலம் என்ற மினி பேருந்தில் சென்று இவ்வூரில் இறங்கி சுமார் அரை கிலோமீட்டர் சென்றால் இக்கோயிலை அடையலாம் .
அருகில் உள்ள தலங்கள்:
இக்கோயிலுக்கு போக விருப்பம் உள்ளவர்கள் காட்டுமார்கோயிலில் இருந்தோ அல்லது சிதம்பரத்தில் இருந்தோ எதாவது வண்டியை எடுத்து ஒரே நேரத்தில் கிழ் உள்ள தலங்களை தரிசிக்கலாம் .
1 . வீரநாராயண பெருமாள் கோயில் – காட்டுமன்னார்கோயில்
2 . வீரட்டேஸ்வரர் கோயில் – காட்டுமன்னார்கோயில்
3 . பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் கோயில் – ஒமாம்புலியூர்
4 . அமிர்தகடேஸ்வரர் கோயில் – மேல்கடம்பூர்
5 . ருத்ரகோடீஸ்வரர் கோயில் – கீழ் கடம்பூர்
6 . சௌந்தரேஸ்வரர் கோயில் – திருநாரையூர்
– திருச்சிற்றம்பலம் –