Sri Amirthakadeswarar Temple – Melakadambur

ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயில் –  மேலக்கடம்பூர்

இறைவன் :அமிர்தகடேஸ்வரர்

இறைவி :வித்யூஜோதிநாயகி

தல விருட்சம்:கடம்பமரம்

தீர்த்தம்:சக்தி தீர்த்தம்

ஊர்:மேலக்கடம்பூர்

மாவட்டம்:கடலூர் , தமிழ்நாடு

பாடியவர்கள்: சம்பந்தர், அப்பர்

பெருக்காறு சடைக்கணிந்த பெருமான் சேரும்

பெருங்கோயில் எழுபதினோ டெட்டும் மற்றுங்

கரக்கோயில் கடிபொழில்சூழ் ஞாழற் கோயில்

கருப்பறியற் பொருப்பனைய கொகுடிக் கோயில்

இருக்கோதி மறையவர்கள் வழிபட் டேத்தும்

இளங்கோயில் மணிக்கோயில் ஆலக் கோயில்

திருக்கோயில் சிவனுறையுங் கோயில் சூழ்ந்து

தாழ்ந்திறைஞ்சத் தீவினைகள் தீரும் அன்றே.

– அப்பர்

இக்கோயிலானது தேவரா பாடல் பெற்ற காவிரி வடகரை தலங்களில் 34 வது தலமாகும் . தேவார பாடல் பெற்ற 276 சிவத்தலங்களில் 34 வது  தலமாகும் .

கோயிலுக்கு நாம் ஏன் செல்லவேண்டும் அதுதான் நாம் வீட்டிலேயே இறைவனை வணங்குகிறோமே என்ற கேள்வி பலருக்கு உண்டு ,அவர்களின் கேள்விக்கு ஒரே பதில் கோயில் என்பது நமது கலாச்சாரம் நம்மை ஆண்ட அரசர்களின் நற்பணிகள் ,அன்றைய மக்களின் கோவிலுக்கான நற்பணிகள் , கோயிலின் அழகு ,சிற்பங்களின் நளினம் அவற்றை செதுக்கிய சிற்பிகளின் கைவண்ணம் இதையெல்லாம் தாண்டி கோயிலில் வீற்றியூருக்கும் இறைவன் எத்தனை ஆண்டுகளுக்காக அபிஷேக ஆராதனைகளை கொண்டிருப்பார் மற்றும் கோயிலுக்குள் நாம் இருக்கும் போது நமக்குள் ஏற்படும் ஒரு மன அமைதி இவைகள் அனைத்தையும் நாம் நம் குழந்தைகளுக்கு எடுத்து சொல்வது நமது கடமை . நான் கூறிய அனைத்தையும் உள்ளடங்கிய ஒரு கோயில் தான் இந்த மேல்கடம்பூர் கோயில் .

தமிழக கோயில்கள் ஒன்பது வகையான கட்டமானங்களை கொண்டதாக கட்டப்பட்டுள்ளது அதில் இக்கோயிலானது ‘கரக்கோயில்’ வகையை சார்ந்ததாகும் . இந்த அமைப்பு சேர்ந்த கோயில் தமிழ்நாட்டில் இங்குமட்டுமே உள்ளதாக சொல்லப்படுகிறது .

இக்கோயிலது கருவறை  நான்கு சக்கரங்களுடன் குதிரைகளை பூட்டி ஒரு தேரை இழுப்பதுபோல் அமைக்கப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு மிக அழகாக உள்ளது .

 மேலும் கடம்ப பேரரசை ஆண்ட கடம்பர்களின் “முண்டா” மொழியில் கரம் என்ற சொல்லுக்கு கடம்பூர் என்று பெயர் கரம்+கோயில் கடம்பினை தல மரமாக கொண்ட கோயில்= கரக்கோயில் என பொருள் தருகிறது.

கோயில் அமைப்பு :

கிழக்கு நோக்கிய மூன்று அடுக்கு ராஜகோபுரம் உள்ளது . அதை கடந்து உள்ளே நுழைந்தால் நேரே உள்ள முன் மண்டபத்தில் நந்தியும் , பலிபீடமும் உள்ளது . இக்கோயிலுக்கு கொடிமரம் இல்லை . முன்மண்டபத்தில் இருந்து பார்த்தால் நேராக இறைவன் சந்நதியும், வலது புறத்தில் தெற்கு நோக்கி இறைவி சந்நதியும் உள்ளது .

கருவறை தேர் சக்கரங்களுடன் குதிரை இழுப்பது போல் தேர் வடிவில் அமைந்துள்ளது .இவ் கருவறையானது வெளிப்புறத்தில்  மிக அழகான சிற்பங்களை தாங்கி இருக்கின்றது .இந்திரன் தேரை இழுத்து செல்ல முயற்சிக்கும் போது விநாயகர் சக்கரத்தை மிதித்ததின் காரணமாக இடது பக்க சக்கரம் பூமியில் பதிந்து இருக்கிறது .

முதலாம் குலோத்துங்கனால் கட்டபெற்றக் கருவறை வெளிச்சுவரில் ஐந்து தேவகோட்டங்கள் உள்ளன. தெற்கில்அர்த்தநாரீஸ்வரர்  ,தட்சணாமூர்த்தி , மேற்குக் கோட்டத்தில் திருமாலும், வடக்கில் முருகனும் , ஆலிங்கனமூர்த்தி ,துர்க்கை உள்ளனர்.

வலப்பக்க சுவரில் அர்த்தநாரீஸ்வரர் நந்தியுடன் இருக்க, அவருக்கு கீழே ரங்கநாதர் பள்ளிகொண்ட கோலத்தில் இருப்பது சிறப்பு. கருவறை பின் பக்க சுவரில் மஹாவிஷ்ணு அமர்ந்த கோலத்தில் இருக்கிறார் . அவரின் கையில் சிவலிங்கத்தை வைத்திருக்கிறார் இது ஒரு சிறப்பான காட்சியாகும் .இவருக்கு அருகில் ஆண்டாள், கருடன் ,ஆஞ்சேநேயர் ஆகிய மூவரும் உள்ளார்கள் . இவருக்கு எதிரே முருகர் வள்ளி தெய்வானையோடு உள்ளார்  இவரை அருணகிரிநாதர் தன் திருப்புகழில் பாடியுள்ளார். கோஷ்ட சுவரிலேயே கங்காதரர், ஆலிங்கமூர்த்தி ஆகியவர்களின் சிற்பங்கள் உள்ளன. இங்கு தட்சணாமூர்த்தி புல்லாங்குழல் ,வீணையுடன் இருக்கிறார் , இவருக்கு இருபுறமும் எமதர்மன் ,சித்ரகுப்தர் ஆகியோர் இருக்கிறார்கள் . அருகில் பதஞ்சலி முனிவர் இருக்கிறார் இவரது தலை மீது நடராஜர் நடனகோலத்துடன் காட்சிதருகிறார் .அம்பாளை தன் தொடை மீது இருத்தி ஆலிங்கமூர்த்தியாக காட்சி தருகிறார் .

இதுமட்டும் அல்லாமல் அகத்திய முனிவர் ,தேவேந்திரன் இவர்களும் இங்கே காட்சிதருகிறார் .

தசபுஜ  ரிஷபதாண்டவமூர்த்தி :

செவ்வக பீடத்தில் மையமாக உள்ள தாமரை பீடத்தில் மேல்நோக்கி நிற்கும் காளையின் மேல் சதுர தாண்டவ கோலத்தில், வீசிய பத்து கரங்களில் வீரவெண்டயம், பிரம்மகபாலம், கேடயம், சூலம், அரவம், கட்டங்கம், தண்டம், குத்தீட்டி, ஏந்திட, வலக்கை கஜஹஸ்த அமைப்பிலும், இடக்கை பிரபஞ்சம் தாங்கியும், சிவபெருமான் நின்றாடுகிறார். அவர்காலடியில் திருமால் மத்தளமிசைக்க வீரபத்திரர்சூலமாட. வைரவர். கணங்கள். விநாயகர், பார்வதி.,பிருங்கி, காரைக்கால் அம்மையார், மகாகாளர், நந்தி, நாட்டிய பெண்கள் சேர்ந்தாட முருகன் மயில் மேல் பறக்க, கந்தர்வர்கள் மலரிட, அனைத்தும் சேர்ந்திட்ட அற்புத கலைபடைப்பு திருவாசியில் அக்கினிக்கு பதிலாக இங்கே போதி இலைகள் காணப்படுகின்றன. உற்சவமூர்த்தியான இவரை பிரதோஷம் அன்று மட்டுமே தரிசிக்க இயலும் .முதலாம் ராஜேந்திரன் தனது வடநாட்டு படையெடுப்பின் போது பாலர் தேசத்து மகிபாலரை வென்று அங்கிருந்த இம்முர்த்தியினை வெற்றிசின்னமாக கொண்டு வந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஆரவார விநாயகர் :

இந்திரனின் ஆணவத்தை போக்கிய விநாயகர் தனி சந்நதியில் உள்ளார் . இவருக்கு ஆரவார விநாயகர் என்று பெயர் . அமிர்த கலசத்தை தூக்கி சென்றும் , தேர் சக்கரத்தை மிதித்தும் ஆரவாரம் செய்ததால் இவருக்கு இப் பெயர் ஏற்பட்டது .இவர் தலையை இடது புறமாக சாய்த்தபடி கோபமுகத்துடன் காட்சி தருகிறார் .

இங்குள்ள சிவலிங்கம் நவபாஷாணத்தால் செய்யப்பட்டதாகும். பங்குனி மாதம் 3, 4, 5 ஆகிய தேதிகளில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுவதும், ஐப்பசி அன்னாபிஷேகத்தின்போது, இரவில் சந்திர ஒளி சுவாமி மீது விழுவதும் சிறப்பு.

அம்பாள் காலையில் வீணை ஏந்தி சரஸ்வதியாகவும், உச்சிக்காலத்தில் யானையுடன் லட்சுமியாகவும், மாலையில் சூலாயுதத்துடன் துர்க்கையாகவும் காட்சி தருகிறாள். இதனால் இவளை, “வித்யஜோதிநாயகி’  என்று அழைக்கின்றனர்.

கோயிலின் சிறப்புக்கள் :

– பொன்னியின் செல்வன் வரலாற்று நிகழ்களம்

– சஷ்டியப்தபூர்த்தி ,சதாபிஷேகம் செய்ய ஏற்ற தலம்

– இவரை வணங்கினால் கடன் தொலையில் இருந்து விடுபடலாம் .மற்றும் ஆயுள் பலம் கிட்டும் .

-கழுகு வாகனத்தில் மேற்கு நோக்கிய சனி பகவான்

– அங்காரகன் வழிபட்ட செவ்வாய் தோஷ பரிகார தலம் .

– கடம்பவன தலமாவதால் சதய நட்சத்திரகாரர்கள் வழிபடவேண்டிய கோயில்

– வாதாபியில் இருந்து கொண்டுவரப்பட்ட வலம்புரி ஆரவார விநாயகர்

– 60 வயது நிறைவில் பாவ நிவர்த்தி பூஜை செய்ய வேண்டிய பாபஹரேஸ்வர லிங்கம்

– கற்சிலையாக காட்சிதரும் நடராஜ மூர்த்தி , சிவகாமசுந்தரி

தல வரலாறு ;

  பாற்கடலில் அமுதம் கடைந்த தேவர்கள், விநாயகரை வணங்காமல் அதனை பருகச்சென்றனர். இதைக்கண்ட விநாயகர் தேவர்களுக்கு பாடம் புகட்ட எண்ணி, அமுதகலசத்தை எடுத்துச் சென்று விட்டார். அவர் கடம்பவனமாக இருந்த இத்தலத்தின் வழியாக சென்றபோது, கலசத்தில் இருந்த அமிர்தத்தில் ஒரு துளி தரையில் விழுந்தது. அவ்விடத்தில் சிவன் சுயம்புலிங்கமாக எழுந்தருளினார். தன் தவறை உணர்ந்த இந்திரனும், தேவர்களும் இங்கு வந்து விநாயகரிடம் தங்களது செயலை மன்னித்து அமுதத்தை தரும்படி வேண்டினர். அவர் சிவனிடம் வேண்டும்படி கூறினார். அதன்படி இந்திரன் சிவனை வேண்டினான். அவர் இந்திரனுக்கு அமுத கலசத்தை கொடுத்து அருள்புரிந்தார். இங்கேயே தங்கி “அமிர்தகடேஸ்வரர்’ என்ற பெயரும் பெற்றார்.

கல்வெட்டுகள் :

 தேர்வடிவ கோயில் முதலாம் குலோத்துங்க சோழனால் கி.பி 1113-ல் அவரது 43–ம் ஆட்சியாண்டில் கட்டப்பெற்றது.ஈசானிய மூலையில் இருந்த அம்மன் சன்னதியை சுமார் வருடங்களுக்கு முன் தேவகோட்டை செட்டியார்கள் திருப்பணியின் போது கோயிலின் உட்பிரகாரத்தில் தெற்கு நோக்கி கட்டப்பெற்றது.

இக்கோயிலில் பல கல்வெட்டுக்கள் படியெடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் முதன்மையானது “புகழ் மாது விளங்க” எனத்தொடங்கும் முதலாம் குலோத்துங்கனுடையது, இக்கோயிலை கட்டுவித்து இறையிலி நிலங்கள் வழங்கியமை குறித்தும், மற்றொன்று கடம்பூர் கோயிலை சேர்ந்த மகேசுவரர்கள் ஆறு பொற்காசுகளை பெற்றுக்கொண்டு நந்தா விளக்கெரியவிட ஒப்புக்கொண்டமை குறித்தும், மேலும் கடம்பூரினை உத்தம சதுர்வேதி மங்கலம் என சிறப்பு பெயர் பெற்ற தகவலை காணலாம்.

Photos:

https://alayamtrails.blogspot.com/2022/04/sri-amirthakadeswarar-temple.html

திறந்திருக்கும் நேரம் :

 காலை 9 . 00 மணியில் இருந்து நண்பகல் 12 .00 வரை , மாலை 5 .00 மணியில் இருந்து இரவு 7 . 30 மணி வரை

Contact Number : திரு . கிருபாகரன் குருக்கள் – 8608544837 ,9585451409 , 04144261920

செல்லும் வழி :

சிதம்பரத்தில் இருந்து காட்டுமன்னார்கோயில் சென்று அங்கிருந்து சுமார் 4 km  தொலைவில் எய்யலூர் சாலையில் இவ் தலம் அமைந்துள்ளது .

அருகில் உள்ள கோயில்கள் :

1 . ருத்ராபதி கோயில் – கீழக்கடம்பூர்

2 . . வீரநாராயண பெருமாள் கோயில் – காட்டுமன்னார்கோயில்

3 . வீரட்டேஸ்வரர் கோயில் – காட்டுமன்னார்கோயில்

4. பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் கோயில் – ஒமாம்புலியூர் 

5. ஸ்ரீ பதஞ்சலீஸ்வரர் கோயில் – கானாட்டம்புலியூர் , கானாட்டம்முள்ளுர்

Location :

Leave a Reply