ஸ்ரீ ஞீலிவனேஸ்வரர் கோயில் – திருப்பைஞ்ஞீலி
இறைவன் : ஞீலிவனேஸ்வரர், நீலகண்டேஸ்வரர்
இறைவி :விசாலாட்சி, நீல்நெடுங்கண்நாயகி.
தல விருட்சம்: கல்வாழை.
தல தீர்த்தம்: 7 தீர்த்தங்கள்,அப்பர் தீர்த்தம்.
ஊர் : திருப்பைஞ்ஞீலி
மாவட்டம் : திருச்சி
பாடியவர்கள் : திருநாவுக்கரசர் ,சுந்தரர் ,திருஞானசம்பந்தர்
ஆரிடம் பாடிலர் அடிகள் காடலால்
ஓரிடங் குறைவிலர் உடையர் கோவணம்
நீரிடஞ் சடைவிடை யூர்தி நித்தலும்
பாரிடம் பணிசெயும் பயில்பைஞ் ஞீலியே.
–திருஞானசம்பந்தர்
தேவார பாடல் பெற்ற காவிரி வடகரை தேவார தலங்களில் இத்தலம் 61 வது தேவார தலமாகும் . எமனுக்கு தனி சன்னதி உள்ள தலம் . திருமண தடை பரிகார தலம் .
கோயில் அமைப்பு :
ஐந்து பிரகாரங்களை கொண்ட இந்த கோயிலில் முதலில் சிறிய முகப்பு வாயில் கடந்து உள்ளே சென்றால் ஒரு பெரிய வெளிப்பிரகாரம் இருக்கிறது அதன் இடது புறத்தில் தீர்த்த குளம் உள்ளது இதுபோன்று இக்கோயிலில் வெளிப்பகுதி மற்றும் உள் சுற்றில்
விசாலாட்சி, எமன், கல்யாண, அக்னி, தேவ, அப்பர், மணியங்கருணை என மொத்தம் ஏழு தீர்த்தங்கள் என 7 தீர்த்தங்கள் உள்ளன . வலது புறத்தில் வசந்த விநாயகர் தனி சன்னதியில் காட்சிதருகிறார் . அதன் அருகே கோவில் பரிகார சீட்டு கொடுக்கும் இடம் உள்ளது .
முற்று பெறாத மொட்டை கோபுரம் மிக அழகான வேலைப்பாடுகளுடன் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது , அதை கடந்து நாம் உள்ளே சென்றால் ஒரு 4 கால் மண்டபமும் அதன் பின் புறம் 3 நிலைகளை ஒரு 4 கால் மண்டபமும் அதன் பின் புறம் 3 நிலைகளை
உடைய இராவணன் வாயில் என்று கூறப்படும் இரண்டாவது நுழைவு கோபுரமும் உள்ளது.
ராவணன் கோபுரத்தின் முன் இடதுபுறத்தில் சோற்றுடை ஈஸ்வரர் சந்நிதி உள்ளது . இச்சந்நிதியின் முக மண்டபத்தின் மேல் திருநாவுக்கரசருக்கு இறைவன் அந்தணர் வடிவில் வந்து கட்டு சாதம் கொடுக்கும் சுதை சிற்பம் உள்ளது . இதற்கு ஒரு காரண கதை உண்டு .
அப்பர் திருக்கட்டமுது பெறுதல் :
அப்பர் திருச்சி மலைக்கோட்டை தாயுமானேஸ்வரர் , திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் , திருப்பராய்த்துறை தாருகாவனேஸ்வரரை தரிசனம் செய்துவிட்டு திருப்பைஞ்சீலி இறைவனை தரிசனம் செய்ய வந்தார் , அவர் மிகவும் களைப்பாகி பசியும் நீர் தாகமும் எடுத்தது இருந்தாலும் அவர் தன பயணத்தை தொடர்ந்தார் , அப்பருக்கு உதவ எண்ணிய இறைவன் இவ்வூருக்கு புறத்தே அந்தணர் வடிவில் வந்து இறைவனுக்கு கட்டுசாதமும் நீரும் தந்து இதை சாப்பிட்டுவிட்டு போகுமாறு கூறினார் , அப்பரும் எதுவும் மறுக்காமல் அவர் கொடுத்ததை வாங்கி சாப்பிட்டார் , பின்பு அப்பர் அந்தணர் வடிவில் உள்ள இறைவனிடம் நீங்கள் எங்கு செல்கிறீர்கள் என்று கேட்க அவர் தானும் திருப்பைஞ்சலி செல்வதாக கூறினார் இருவரும் பேசிக்கொண்டே செல்ல கோயில் வந்தவுடன் அந்தணர் வடிவில் வந்த இறைவன் மறைந்துவிட்டார் அப்போதுதான் அப்பருக்கு புரிந்தது தனக்கு உதவி புரிந்தது இறைவனே என்று , இறைவன் பார்வதி தேவியுடன் ரிஷப வாகனத்தில் அப்பருக்கு காட்சி கொடுத்தார் . இந்த நிகழ்வை விழாவாக சித்திரை மாதம், அவிட்டம் நட்சத்திரத்தில் இச்சன்னதியில் சோறு படைத்த விழா நடக்கிறது. அந்த லிங்க உருவே சோற்றுடை ஈஸ்வரர் என்ற பெயரில் இச்சந்நிதியில் அருள் பாலிக்கிறார்.
இராவணன் வாயில் எனப்படும் இரண்டாவது கோபுரத்தின் வழியாக சுவாமி சந்நிதி செல்ல ஒன்பது படிக்கட்டுகள் இறங்கி செல்ல வேண்டும் இந்த படிகள் இராவணின் சபையில் ஒன்பது நவக்கிரகங்களையும் அடிமைப்படுத்தியதை நினைவுகூருகிறார்கள் . இதன் வழியாக நாம் செல்லும் போது நவகிரகங்களின் தோஷத்தில் இருந்து நாம் விடுபடுவதற்காக சொல்கிறார்கள் .
இறைவன் சன்னதி :
நேராக நாம் சென்றால் கொடிக்கம்பம் , பலிபீடம் தரிசனம் செய்யலாம். சுவாமி சந்நிதிக்கு முன்னுள்ள நந்தியின் அருகே ஒன்பது குழிகள் உள்ளன. அதில் தீபம் ஏற்றி அதையே நவக்கிரகங்கள் ஆக எண்ணி வணங்குகின்றனர். பின்பு திருக்கார்த்திகை வாயிலில் நுழைந்து மூலவர் ஜீலிவனேஸ்வரர் சந்நிதியை அடையலாம். இறைவன் சிறிய திருமேனியுடன் சுயம்புவாக காட்சிதருகிறார் .எமனுக்கு உயிர் கொடுத்து மீண்டும் தனது தொழிலைச் செய்துவர அதிகாரம் கொடுத்து அருளியதால் இத்தலத்து இறைவன் அதிகாரவல்லபர் என்றும் அழைக்கப்படுகிறார்.
மேலச்சிதம்பரம் :
கருவறைக்கு அடுத்துள்ள அர்த்தமண்டபத்தில் வசிஷ்டருக்கு சிவபெருமான் நடன காட்சி கொடுத்த இடம் உள்ளது . இவ்விடத்தில் நடராஜர் சித்திரம் வடிவில் உள்ளார் . அவருக்கு எதிரே வசிஷ்டரும் சித்திரமாக உள்ளார் . இதனால் இத்தலத்தை மேலச்சிதம்பரம் என்ற பெயரும் உண்டு .
வசிஷ்ட முனிவர் சிதம்பரம் நடராஜரை தினமும் அர்த்தஜாம நேரத்தில் தரிசனம் செய்யும் வழக்கம் உடையவர். ஒருசமயம் அவர் இத்தலத்திற்கு வந்தபோது இரவில் இங்கேயே தங்கிவிட்டார். அவர் நடராஜரிடம் தனக்கு நடனக்காட்சி தரும்படி வேண்ட சுவாமி இங்கே நடனக்காட்சி தந்தருளினார்.
சப்த கன்னிகளும் வாழைமரம் பரிகாரமும் :
அப்படியே கோயிலின் உட் பிரகாரத்தை வலம் வந்தால் பிராம்மி, மாகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வாராகி, இந்திராணி, சாமுண்டி
ஆகிய சப்த கன்னிகளுக்கு சன்னதி உள்ளது . இவர்களை வைத்தே இக்கோயிலின் தல வரலாறு உள்ளது .
பின்பு விநாயகர் சன்னதி ,முருகன் சன்னதி மற்றும் செந்தாமரை கண்ணன் மற்றும் மஹாலக்ஷ்மி சன்னதி உள்ளது . தெட்சிணாமூர்த்தியின் கீழ் நந்தி இருப்பதும் வித்தியாசமானதாகும்.
பின்பு வலம் வந்தால் தாயார் நீள்நெடுங்கண் நாயகி சன்னதி உள்ளது இக்கோயிலில் ஒரு சிறப்பு என்னவென்றால் இரண்டு தாயார் சன்னதி உள்ளது , நீள்நெடுங்கண் சன்னதிக்கு அருகிலேயே விசாலாக்ஷி தாயார் சன்னதி உள்ளது . இவ் இரண்டு அம்மனுக்கு நடுவில் தலவிருச்சம் கல்வாழை சன்னதி உள்ளது .
திருமண தடை நீக்கும் கல்வாழை பரிகாரம் :
சப்த கன்னிகளும் தங்களது திருமணத்திற்கு முன்பு இத்தலம் வந்து அம்பாளின் தரிசனம் வேண்டி தவம் செய்தனர். அவர்களுக்கு அம்பாள் காட்சி தந்து, தகுந்த காலத்தில் நல்ல வரன்கள் அமையப்பெற்று சிறப்புடன் வாழும்படி வரம் தந்தாள். சப்தகன்னிகள் அம்பாளை இங்கே எழுந்தருளும்படி வேண்டினர். எனவே அம்பாள் இங்கே எழுந்தருளினாள் . அவள் சப்த கன்னிகளிடம், “நீங்கள் வாழை மரத்தின் வடிவில் இருந்து நீண்டகாலத்திற்கு என் தரிசனம் காண்பீர்கள்,”என்றாள். அதன்படி சப்த கன்னிகள் வாழை மரங்களாக மாறி இங்கேயே தங்கினர். இவர்களே இக்கோயிலில் கல்வாழையாக இருப்பதாகவும் திருமண தடை உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் இக்கோயிலுக்கு வந்து இறைவன் மற்றும் இறைவிக்கு அர்ச்சனை செய்து கல்வாழை பரிகார பூஜை செய்தால் விரைவில் திருமணம் கூடும் என்ற நம்பிக்கை இருக்கிறது . கல்வாழைக்கு மாங்கல்யத்தை கட்டி பரிகாரம் செய்யவேண்டும் .
விசாலாக்ஷி தாயாருக்கு அருகில் பஞ்ச லிங்கங்கள் , நால்வர் சன்னதி உள்ளது .
பின்பு இராவணன் கோபுரத்திற்கு வெளியே வந்து வெளி பிரகாரத்தை சுற்றினால் எமதர்ம கோயில் வரும் .
எமதர்ம கோயில் :
இச்சந்நிதி ஒரு குடைவரைக் கோவிலாகும். பல்லவர்கள் கால கோயிலாக இருக்கலாம் . பூமிக்கு அடியில் சற்று பள்ளத்தில் உள்ள இந்த குடைவரைக் கோவிலில் புடைப்பு சிற்பமாக சோமஸ்கந்தர் ரூபத்தில் சிவன் அம்பாள் இருவருக்கும் இடையே முருகன் அமர்ந்திருக்க,சுவாமியின் பாதத்தின் கீழே குழந்தை வடிவில் எமன் இருக்கிறார். இறைவன் பெயர் மிருத்யுஞ்சயர் , தாயார் தாட்சாயணி . மிருத்யுஞ்சயர் என்றால் எம பயம் போக்குபவர் என்று அர்த்தம் அதனால் இந்த சந்நிதி முன்பு திருக்கடவூரில் செய்வது போல சஷ்டியப்தபூர்த்தி, ஆயுள்விருத்தி ஹோமம் ஆகியவை நடத்துகின்றனர்.
திருக்கடவூர் தலத்தில் மார்க்கண்டேயனுக்காக எமனை காலால் உதைத்து சம்ஹாரம் செய்தார் சிவபெருமான். இதனால் உலகில் இறப்பு என்பதே இல்லாமல் போக பூமியின் பாரம் அதிகரித்தது. பாரம் தாங்காத பூமிதேவி சிவபெருமானிடம் முறையிட்டாள். மற்ற
தேவர்களும் சிவனிடம் எமனை உயிர்ப்பித்துத் தருமாறு முறையிட்டனர். சிவபெருமான் அதற்கிணங்கி தைப்பூச நாளன்று மீண்டும் எமனை இத்தலத்தில் தன் பாதத்தின் அடியில் குழந்தை உருவில் எழும்படி செய்து தர்மம் தவறாமல் நடந்து கொள்ளும்படி அறிவுரை கூறி மீண்டும் தன் பணியை செய்து வரும்படி அருள் செய்தார்.
சனீஸ்வரனின் அதிபதி எமன் என்பதாலும், எமனுக்கு இத்தலத்தில் தனி சந்நிதி உள்ளதாலும் இத்தலத்தில் நவகிரக சன்னதி இல்லை .
தல பெயர் காரணம் :
ஞீலி என்பது ஒருவகை கல்வாழை. பைஞ்ஜீலி என்பது பசுமையான வாழையைக் குறிக்கும். பசுமையான ஞீலி வாழையை தலவிருட்சமாக பெற்றதால் திருப்பைஞ்ஞிலி என்று இத்தலம் பெயர் பெற்றது.
கல்வெட்டுகள் :
கிபி 6 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட இந்த கோயிலுக்கு முதலாம் ராஜேந்திர சோழன் ,முதலாம் ராஜராஜ சோழன் ,சுந்தர பாண்டியன் மற்றும் மகேந்திர பல்லவ மன்னன் ஆகியோர் பல்வேறு காலகட்டங்களில் திருப்பணி செய்துள்ளார்கள் .சோழர் காலக் கல்வெட்டுக்களில் “பைஞ்ஞீலி மகாதேவர், பைஞ்ஞீலி உடையார் ” என்னும் பெயர்களால் இறைவன் குறிக்கப்படுகிறார்.
பரிகாரம் :
இக்கோயிலானது திருமண தடை நீக்கும் பரிகார தலமாக உள்ளது . வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாழைக்குப் பரிகாரம் செய்வது மிகவும் சிறப்பாகும். இந்த பூஜை காலை 10 .00 மணிக்கு ஆரம்பித்து நண்பகல் 12 .00 மணிக்குள் முடித்து விடுகிறார்கள் . மற்றும் எமதர்ம கோயிலில் திருக்கடவூரில் செய்வது போல சஷ்டியப்தபூர்த்தி, ஆயுள்விருத்தி ஹோமம் ஆகியவை நடத்துகின்றனர். மற்றும் எமதர்மன் சனி பகவானுக்கு அதிபதி என்பதால் சனி பெயர்ச்சி நடப்பவர்கள் இக்கோயிலுக்கு வந்து பிராத்தனை செய்கின்றனர் .
More Photos :
https://alayamtrails.blogspot.com/2022/06/sri-gneelivaneswarar-temple.html
திறந்திருக்கும் நேரம் :
காலை 6 .00 மணி முதல் மதியம் 1 .00 மணி வரை , மாலை 4 .00 மணி முதல் இரவு 8 .00 மணி வரை .
phone number : 431 – 2902654, 2560011 ,2560813
செல்லும் வழி :
திருச்சியில் இருந்து மண்ணச்சநல்லூர் சென்று அங்கிருந்து சுமார் 7 km தொலைவில் உள்ளது . சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து நிறைய டவுன் பஸ் உள்ளது . மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சேலம் நாமக்கல் பேருந்தில் ஏறி முதல் டோல் கேட் இல் இறங்கி அங்கிருந்து இக்கோயிலுக்கு செல்லலாம் .
அருகில் உள்ள கோயில்கள் :
இக்கோயிலில் இருந்து ஆட்டோவில் சென்றால் சுமார் 5 km தொலைவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவெள்ளறை புண்டரிகாசர் கோயில் செல்லலாம். மற்றும் முதல் டோல் கேட் இல் உத்தமர் கோயில் உள்ளது .
This Gneelivaneswarar temple is situated in the village of Thirupanjali in Trichy district. This is one the ancient temple dedicated to god shiva . This is one of the 276 Devara Paadal Petra Shiva Sthalams and 61st Shiva Sthalam on the northern bank of the river Cauvery in Chozha Nadu. The uniqueness of this temple is that there is a shrine for Lord Yama. one of the “Saptha Sthana” temples of Thiruvanaikkaval. This is one of the famous “parikara sthalams” for conducting poojas to remove obstacles from marriage proposals and to seek child boon.
Location :
திருச்சிற்றம்பலம்