Sri Mallikarjuneswarar temple – Dharmapuri

ஸ்ரீ கல்யாண காமாட்சி உடனுறை மல்லிகார்ஜுனேஸ்வரர் கோயில் – கோட்டை கோயில் -தர்மபுரி

Sri Mallikarjuneswarar temple - Dharmapuri

இறைவன் : மல்லிகார்ஜுனேஸ்வரர்

இறைவி : கல்யாண காமாட்சி

தலவிருச்சம் : வேலாமரம்

தலதீர்த்தம் : சனத்குமாரநதி

ஊர் : தர்மபுரி

மாவட்டம் : தர்மபுரி , தமிழ்நாடு

தர்மபுரியில் மிகவும் பிரசித்திபெற்ற கோயில்களில் இந்த கோயில் ஒரு முதன்மையான இடத்தை பெறுகிறது . கோட்டை கோயில் என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் கோயிலாகும் .எட்டாம் நூற்றாண்டில் நுளம்பர் என்ற குறுநில மன்னர்களால் கட்டப்பட்ட கோயிலாகும் . இக்கோயில் ஒரு தேவார வைப்பு தலமாகும் .

கோயிலுக்கு சிறிய நுழைவு வாயில் உள்ளது அதன் வழியே உள்ளே சென்றால் கொடிமரம் மற்றும் நந்தி பெருமானை தரிசனம் செய்துவிட்டு நாம் உள்ளே நுழைந்தால் வீரபத்திரரை நாம் தரிசிக்கலாம் . பின்பு நாம் உள்ளே நுழைந்தால் இறைவன் உள்ள அர்த்த மண்டபத்தை அடையலாம் . அர்த்த மண்டபத்தில் அழகிய சிற்பங்கள் வடிக்கப்பட்ட  இரண்டு தூண்கள் காணப்படுகின்றன. இந்த தூணின் அடியில் ஒரு காகிதத்தை விட்டால், அது எந்த தடங்கலும் இன்றி மறு பக்கம் வந்துவிடும். அதாவது, அந்த தூண் தரையைத் தொடாமல் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த தூணின் எடை பல டன் இருக்கும் என்று கூறுகிறார்கள். இதனால் இவை ‘தொங்கும் தூண்கள்’ என்றும் அழைக்கப்படுகின்றன. இது நம் தமிழர்களின் கட்டடக்கலையின் சிறப்பை உலகுக்கு எடுத்து சொல்வதுபோல் உள்ளது .

அதை கண்டு நாம் வியந்துகொண்டே மண்டபத்தின் விதானத்தை நாம் நிமிர்ந்து பார்க்கும் போது வட்ட வடிவிலான அமைப்பில் அஷ்டதிக் பாலகர்களின் உருவங்கள் அழகுடன் வடிக்கப்பட்டுள்ளன. இவற்றின் நடுவே ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி அருள்புரிகிறார். அஷ்டதிக் பாலகர்களின் உருவங்கள், வெவ்வேறு கோணங்களில் திரும்பிய வண்ணம் அமைந்துள்ளன. இத்தகைய வடிவமைப்பு மற்ற ஆலயங்களில் காண முடியாத ஒன்றாகும். மூலவரின் கருவறை வாசலில் உள்ள கஜலட்சுமி உருவம், இருபுறமும் மாறுபட்ட முறையில் நீர் சொரியும் யானைகளைக் கொண்டதாக இருக்கிறது.

இவற்றையெல்லாம் நாம் ஆச்சரியதோடு தரிசித்து அப்படியே கருவறையில் உள்ள ஈசனை கண்டால் அவர் சுயம்பு மூர்த்தியாக  எழுந்து அருளியிருக்கும் திருக்காட்சி நம்மை ஆழ் நிலைக்கே கொண்டுசெல்கிறது . 36 பட்டிகள் உள்ள சதுர வடிவமான ஆவுடையாரில் மல்லிகார்ஜுனேஸ்வர ஸ்வாமி என்ற திருநாமத்துடன் இங்கு அவர் விளங்குகிறார்  . இது சிவகாமத்தின் 36 தத்துவங்களை குறிக்கிறது.  இவரை ஆழத்திக்கு பாலகர்கள் வீற்றியிருக்கும் விதானத்தில் கீழ் இருந்து தரிசிப்பதால் நம் வாழ்வில் எந்த வித துன்பங்களில் இருந்தும் விடுபட்டு நல்ல நிலையில் வாழ்வது என்பது நிச்சயம் .

கர்பகிரகத்தின்  நுழைவுவாயிலுக்கு இடது புறம் விநாயகரும் , வலது புறம் முருகரும் உள்ளார்கள் , அப்படியே வெளியே வந்து கோயிலை வலம் வந்தால் வலம்புரி செல்வகணபதி தனி சன்னதியில் உள்ளார் . அவரை வணங்கிவிட்டு அருகில் உள்ள இஷ்ட சித்தி ஸஹ்ண்முகர் சன்னதி உள்ளது . இவர் ஆறுமுகங்களுடன் மயில்வாகனத்தில் ஐயப்பஸ்வாமியை போல் கால்களை மடக்கி உட்கார்ந்துகொண்டு இருக்கிறார். அவரின் ஒரு பாதம் நாகத்தின் தலைமேல் உள்ளது. மயில் தன் அலகில் ஒரு நாகத்தை பிடித்துள்ளது. இது ஒரு அபூர்வ தரிசனம் ஆகும் .

பின்பு வலம் வந்தால் சித்தேஸ்வரர் என்ற திருநாமத்துடன் தனிச்சன்னதியில் ஒரு லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இவரை தரிசனம் செய்துவிட்டு நாம் இப்போது கருணையே உருவமான தாயார் காமாட்சி அம்மன் உள்ள சன்னதிக்கு செல்வோம் .

அம்பாளின் சன்னதி ஈசனின்  சன்னதியை விட உயரமாக உள்ளதால், 18 படிகள் ஏறித்தான் அன்னையை தரிசிக்கவேண்டும். இங்கு அம்பாள் கல்யாணகாமாக்ஷி சிவசக்தி ஐக்ய சுருபமாக, பிரம்மா விஷ்ணு ருத்ரன் மகேஸ்வரன் நான்கு கால்களாக சதாசிவர் மேற்பலகையாக இருக்கும் பஞ்ச ப்ரஹ்ம ஆசனத்தில் கம்பீரமாக நின்றுகொண்டு அருள்புரியும் அற்புத திருக்காட்சி கொடுத்து நம்மை மெய்சிலிர்க்க  வைக்கிறார் .

பதினெட்டு கல்யாணகுணங்களை நாம் கடைபிடித்தால்தான் கல்யாண காமாக்ஷியின் அருளும் அனுகிரஹமும் நமக்கு கிடைக்கும் என்பதை உணர்த்ததான் 18 படிகள் ஏறி வரச்சொல்கிறாள். இந்த 18 படிகளையும் மலர்களால் அலங்காரம் செய்து மஞ்சள் குங்குமமும் இட்டு புடவைச்சாத்தி பக்தர்கள் வழிபடுவார்கள் என்று பெரியவர்கள் கூறுகிறார்கள்  .

 பொதுவாக அம்மன் கோவில்களில், ஸ்ரீசக்கரமானது அம்மன் சிலைக்கு முன்பாகவோ அல்லது அம்மன் சிலைக்கு அடியிலோ பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும். ஆனால் இங்குள்ள அம்மன் சன்னிதியோ, ஸ்ரீசக்கரத்தின் மீதே எழுப்பப்பட்டுள்ளது.இந்த 18 முனைகளின் அடிப்பாகத்தில் சிற்பவடிவில் யானையின் தலை மட்டும் உள்ளது. 18 யானைகள் அம்பாளின் சன்னதியை தாங்கிகொண்டுருக்கிற மாதிரி ஒரு அற்புதமான தோற்றம். இந்த 18 யானைகளுக்கு நடுவில், சன்னதியின் வெளிசுவற்றின் அடிப்பாகத்தில் இராமாயண காவியம் சிற்பவடிவில் செதுக்கப்பட்டுள்ளது.

மாங்காட்டில் தபஸ் காமாட்சியாகவும் , காஞ்சிபுரத்தில் யோகா காமாட்சியாகவும் , இத் தகடூரில் ஐக்கிய காமாட்சியாகவும் காட்சிதருகிறார் . உலகின் தாய் வழிபாட்டின் பெருமையை உணர்த்தும் அற்புத  தலம்.

இராஜதுர்காம்பிகை

அம்பாள் கல்யாணகாமாக்ஷி கர்பகிரஹத்தின் அருகில் அர்த்தமண்டபத்தில் சிறிய தனிச்சன்னதியில் அம்பிகை சூலினியின் இராஜதுர்காம்பிகை வடிவம் கிழக்குநோக்கி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அருள்தரும் அம்மன் சூலினி ராஜதுர்காம்பிகையாக சூலம் சங்கு ஏந்தி மஹிஷனை வதம் செய்யும் தோற்றத்தில் அருள்பாலிக்கிறாள். கீழே விழுந்து கிடக்கும் மஹிஷனின் கொம்பை இடதுகரத்தால் பிடித்துக்கொண்டு வலதுபாதத்தால் அவன் கழுத்தை மிதித்துக்கொண்டு,  காரணம் , காரணி, அதன் பலன் என மூன்று வகையில் மூன்று வகை சூலங்களுடன், ஸம்ஹாரத்தில் அருள்புரியும் அம்பிகையின் அற்புத திருக்காட்சியை நமக்கு தந்து அருளுகிறார்

சக்கரபைரவர்

அம்மனை தரிசித்து விட்டு நாம் வெளியே வந்தால்  காலபைரவர்  இங்கு மூணுக்கு மூணு அடி சக்கர வடிவில் யந்த்ரம் அமைக்கப்பட்டு, அதில் புடைப்பு  சிற்பமாக நாய் வாகனத்துடன் குபேர மூலையில் அம்பாள் சன்னதிக்கு அருகில் சுற்றுப்பிரகாரத்தில் தனிச்சன்னதியில் அருள்பாலிக்கிறார். ஸ்ரீசக்கரத்தின் நடுவில் சூர்ய சந்திர அக்கினிஜுவாலையுடன் சக்கர பைரவராக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார்.

இங்குதான் சனீஸ்வரருக்கு காட்சி தந்து அவரை சூரியமண்டலத்தில் தனிப்பெரும் சக்தியாக உருவாக்கியதால், இங்கே சக்கர பைரவரை மனதார வழிபடுவர்களுக்கு ஜன்மச்சனி ஏழரைச்சனி அஷ்டமச்சனி மூலம் ஏற்படும் கஷ்டங்களை நீக்குகிறார். மேலும் பில்லி சூன்யம் ஆகியவற்றால் ஏற்படும் துன்பங்களை அறவே நீக்குவதால், இங்கு யந்த்ர பைரவர் என்றும் அழைக்கப்படுகிறார்.

அருகிலேயே நவகிரக சன்னதி மற்றும் நாகர் சன்னதி உள்ளது .

வழிபாடு :

அமாவாசை அன்று மாலை 5 முதல் 6 .30 மணி வரை பெண்கள் 18 படிக்கு பூஜை செய்கிறார்கள் . ஆண்கள் மற்றும் பெண்கள்  திருமணம் தடை நீங்க  தேய்பிறை அஷ்டமி அன்று காலை 10 . 00  மணி முதல் மதியம் 2 .30 மணி வரை கல்யாண மாலை பூஜை செய்து பைரவர் சன்னதியில் கந்தர்வ ராஜ கல்யாண மாலை தருகிறார்கள் . 

கல்வெட்டுகள் :

சுமார் எட்டாம் மற்றும் ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த நுளம்பர் கட்டிய பல கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும் .கல்வெட்டுகள் சாணாயிரமுடையார் எனக் குறிப்பிடுகன்றன.மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் திருக்காலத்தியில் இருந்து தகடூருக்கு வந்த வண்ணானைக் கும்பிட்டார் என்னும் சிவனடியார் இந்தக் கோட்டைச் சிவாலயங்கள் பாழ்பட்டு இருப்பதைக் கண்டு வருந்தி அவற்றைப் புதுப்பிக்க எண்ணி, அப்போது சோழர்களின் கீழ் தகடூரை ஆண்டுவந்த அதியமான் மரபினனான இராசராச அதியமானிடம் சென்று இம்மூன்று கோயில்களையும் தகுந்த சிவப்பிராமணர்களைக் கொண்டு வழிபாட்டிற்கு ஏற்பாடு செய்ய வேண்டுமென வேண்டினார். அதியமானோ தகுந்த சிவப்பிராமணர்களை அழைத்து வரும் பொறுப்பை அவரிடமே வழங்கினார். தகுந்த சிவப்பிராமணர்களை மன்னனிடம் அழைத்து வர, கோயில்களில் இரண்டு ஆண்டுகள் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வழிபாடுகள் துவங்கின என கல்வெட்டுகள் குறிக்கின்றன. கோயிலின் இறைவன் பெயர் விசயநகரப் பேரரசர் மல்லிகார்ஜுன ராயன் காலத்தில் மல்லிகார்ச்சுனர் என மாற்றப்பட்டிருக்க வேண்டுமெனக் கருதப்படுகிறது.

More Photos:

https://alayamtrails.blogspot.com/2023/03/sri-mallikarjuneswarar-temple-dharmapuri.html

திறந்திருக்கும் நேரம் :

காலை 6 .30  மணி முதல் மதியம் 12 .00 மணி வரை , மாலை 5 .00 மணி முதல் இரவு 8 .00  மணி வரை

செல்லும் வழி :

தர்மபுரியில் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 1 km  தொலைவில் உள்ளது . ஊரின் மைய்ய பகுதியில் உள்ளதால் எளிதில் இக்கோயிலுக்கு செல்லலாம் .

Location:

Leave a Reply