Sri Chayavanaeswarar Temple – Sayavanam

ஸ்ரீ சாயவனேஸ்வரர் கோயில் – சாயாவனம்

(திருச்சாய்க்காடு )

Chayavanaeswarar Temple - Sayavanam

இறைவன் :சாயாவனேஸ்வரர்

இறைவி :குயிலினும் இனி மொழியம்மை, கோஷாம்பாள்

தல விருட்சம்: கோரை, பைஞ்சாய்

தீர்த்தம் :ஐராவதம், காவிரி, சங்க முக தீர்த்தங்கள்

புராண பெயர்:திருச்சாய்க்காடு, மேலையூர்

ஊர்:சாயாவனம்

மாவட்டம்:நாகப்பட்டினம், தமிழ்நாடு

பாடியவர்கள் : அப்பர் , சம்பந்தர்

தேவார பாடல் பெற்ற 276 தலங்களில் 63 வது தலம், காவேரி வடகரை தேவார தலங்களில் 9 வது தலமாகும் .

63 நாயன்மார்களில் ஒருவரான இயற்பகை நாயனார் அவதார மற்றும் முக்தி தலம் இதுவாகும் .

பஞ்சவன தலங்களான 1 . சிதம்பரம்  2 . தென்  திருமுல்லைவாசல்  3 . பல்லவனேஸ்வரம்  4 . திருவெண்காடு 5 . சாயாவனம் ஆகியவற்றில் ஒன்று .

காசிக்கு சமமான 6  தலங்களில் 1 . திருவெண்காடு 2 . மயிலாடுதுறை 3 . திருவிடைமருதூர் 4 . திருவையாறு  5 . திருவாஞ்சியம் 6 . சாயாவனம் இத்தலமும் ஒன்றாகும் .

கோயில் அமைப்பு :

கோயிலானது சாலை ஒட்டி அமைந்துள்ளது , தென் திசையில் நுழைவு  வாயில் அமைந்துள்ளது , அதன் வழியாக உள்ளே சென்றால் விசாலமான இடம் உள்ளது , நேரே நாம் ஐராவதி குளத்தை பார்க்கலாம் , அதன் அருகே கிழக்கை நோக்கி மூன்று அடுக்கு ராஜகோபுரம் அமைந்துள்ளது . அதன் வழியே உள்ளே நுழைந்தால் நேராக பலிபீடம் மற்றும் நந்தியப்பெருமாள் உள்ளார்கள் . அர்த்தமண்டபத்தில் கிழக்கு பகுதியில் யானை நுழைய முடியாத  அளவிற்கு சிறிய நுழைவுவாயில் உள்ளது . படிகளேறி வெளவால் நெத்தி மண்டபத்தை அடைந்தால் தாயார்  குயிலினும் இனிமொழியம்மை சன்னதி உள்ளது .  அம்பாள் சந்நிதிக்கு வெளியே உள்ள மண்டபத்தில் வலதுபுறம் இக்கோவிலில் உள்ள உற்சவ மூர்த்தியான முருகப்பெருமான் வில்லேந்தி அபூர்வ வடிவில் காட்சி தருகிறார்.

கருவறையில் இறைவன் சுயம்புமூர்த்தியாக சிறிய உருவத்தோடு சதுரவடிவ ஆவுடையரில் வீற்றியிருக்கிறார் . அவர் மேல் தழும்பு உள்ளது . கருவறை கோஷ்டத்தில் விநாயகர் ,தட்சணாமூர்த்தி ,பிரம்மா ,லிங்கோத்பவர் மற்றும் விஷ்ணு துர்கை   உள்ளார்கள் .

வெளி பிரகாரத்தில் முருகர் தம்பதி சமேதராகவும், விநாயகர் , கஜலக்ஷ்மி , காலபைரவர்,நவகிரகங்கள் ,நடராஜர் ஆகியோர் தனி சன்னதிகளில் உள்ளார்கள் . சூரியன் ,இந்திரன் ,இயற்கை நாயனார் தன் மனைவியோடு மற்றும் அப்பர் ,சுந்தரர், சம்பந்தர் ஆகியோர்கள் உள்ளார்கள்.

வில்லேந்திய முருகர்:

அம்பாள் சந்நிதிக்கு வெளியே உள்ள மண்டபத்தில் வலதுபுறம் இக்கோவிலில் உள்ள உற்சவ மூர்த்தியான முருகப்பெருமான் வில்லேந்தி அபூர்வ வடிவில் காட்சி தருகிறார். ஒரு திருமுகமும், நான்கு திருக்கரங்கள்  கொண்டு அருகில் மயிலுடன் காட்சி தருகிறார். ஒரு கரத்தில் கோதண்டம், ஒரு கரத்தில் அம்பு, ஒரு கரத்தில் வில், மற்றெரு கரத்தில் கொடி ஆகியவற்றுடன் அருட்காட்சி தருகின்றார். இத்திருமேனியின் கீழ் திருசெந்திலாண்டவர் என்று பொறிக்கப்பட்டுள்ளது. போருக்குப் புறப்படும் நிலையில் காட்சி அளிக்கிறார். காலில் சிவபெருமான் கொடுத்த வீரகண்டமனியை அணிந்திருக்கிறார். இவரும் தெற்கு நோக்கியே காட்சி தருகிறார்.

தல வரலாறு:

தேவேந்திரனின் தாயான அதிதிக்கு பூமியில் உள்ள சாயாவனேஸ்வரரை வழிபட வேண்டும் என்ற ஆசை நீண்ட காலமாக இருந்தது. அந்த ஆசையை நிறைவேற்ற அவள் பூமிக்கு வந்து இறைவனை பூஜித்தாள். தேவலோகத்தில் தாயைக் காணாத இந்திரன், அவள் சாய்க்காட்டில் இருப்பதை அறிந்து, இத்தலத்தின் சிறப்பை உணர்ந்து கொண்டான். தனது தாய் தினமும் இத்தலத்தை தரிசிக்கும் வகையில் இந்த கோயிலையே தனது ஐராவத யானையை வைத்து தேர் பூட்டி இந்திரலோகம் இழுத்து செல்ல முயற்சித்தான். அப்போது அம்பாள் பார்வதி குயில் போல இனிமையாக கூவினாள். எனவே தான் அம்மனுக்கு குயிலினும் இனிமொழியம்மை என்ற திருநாமம் ஏற்பட்டது. இறைவன் சாயாவனேஸ்வரர் தோன்றி இந்திரனிடம் இந்த கோயிலை தேவலோகம் கொண்டு சென்று வழிபடவேண்டும் என்று நினைக்கும் எண்ணத்தை விட்டுவிடும் படியும், இங்கேயே தனது அன்னையுடம் இங்கே வந்து வழிபட்டு நலமடையும் படியும் கூறினார்.

இக்கோயிலானது மாடக்கோயில் வகையை சார்ந்ததாகும் . 63 நாயன்மார்களுள் ஒருவரான கோச்செங்கட்சோழர் கட்டிய மாடக்கோயிலாகும் .

கல்வெட்டுகள் :

இக்கோயில்களில் சோழர்களின் 12 கல்வெட்டுகள் , பாண்டியர்களின் 1 கல்வெட்டுகள் என மொத்தம் 13 கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது .அவைகள் சோழ மன்னர்கள் விக்ரம சோழன் ,ராஜராஜ சோழன்,மூன்றாம் குளத்துங்க சோழன் ,ராஜேந்திர  சோழன் மற்றும் சுந்தர பாண்டியன் ஆகியோர்கள் கல்வெட்டுகள் உள்ளன . கல்வெட்டுகளில் இவ்விடத்தை ராஜராஜ வளநாட்டு நாங்கூர் நாடு மற்றும் காவிரிப்பூம்பட்டினத்து திருச்செங்காடு என்றும் உள்ளது . இக்கோயில் 7 ஆம் நூற்றாண்டை சார்ந்ததாக கருதப்படுகிறது .

விழாக்கள் :

 சித்திரை பௌர்ணமியில் தொடங்கி இந்திர விழா 21 நாட்கள் நடைபெறுகிறது. ஆடி அமாவாசையில் அன்னமளிப்பு விழா, சித்திரை, வைகாசி மாதங்களில் இயற்பகை நாயனார் பெயரில் தண்ணீர்ப்பந்தல், மார்கழியில் இயற்பகை நாயனாருக்கு 5 நாள் விழா, அதில் நான்காம் நாள் அவருக்கு இறைவன் காட்சி கொடுக்கும் ஐதீகம் ஆகிய விழாக்கள் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

Photos:

https://alayamtrails.blogspot.com/2023/06/chayavanaeswarar-temple-sayavanam.html

திறந்திருக்கும் நேரம் :

காலை 7 .00 மணியில் இருந்து நண்பகல் 12 .00 மணி வரை ,மாலை 4 .00  மணியில் இருந்து இரவு 7 .30  வரை

Contact  Number – 04364 -260151

செல்லும் வழி :

சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில் திருவெண்காடு தாண்டி 3 கி.மீ. தொலைவில் உள்ளது சாயாவனம் கிராமம். சாயாவனேஸ்வரர் கோவிலுக்கு அருகிலேயே பேருந்து நிறுத்தம் உள்ளது. மயிலாடுதுறை – பூம்புகார் சாலை வழியாகவும் சாயாவனம் அடையலாம். சீர்காழியில் இருந்து பேருந்துகள் உள்ளன .

This Chayavanaeswarar temple is one of the 276 Devara Paadal Petra Shiva Sthalams and 9th Shiva Sthalam on the northern bank of the river Cauvery in Chozha Nadu.This is one of the 6 Shiva Sthalams on the banks of the river Cauvery that are considered to be equal in significance to Kasi . This is the birth place of Eyarpagai Nayanar, one of 63 Nayanmars. It is believed that Eyarpagai Nayanar and his wife attained salvation here.This temple is counted as one of the seventy Maadak Koils built by King Kochengat Cholan.

அருகில் உள்ள கோயில்கள் :

1 .பல்லவனேஸ்வரர் கோயில் – பூம்புகார்

2 . சுவேதாரண்யேஸ்வரர் கோயில் – திருவெண்காடு

மற்றும் இக்கோயிலின் அருகில் நிறைய பெருமாளின் திவ்ய தேச கோயில்கள் உள்ளன .

Location:

திருச்சிற்றம்பலம்

Leave a Reply