ஸ்ரீ உத்தவேதீஸ்வரர் கோயில் – குத்தாலம்
இறைவன் :உத்தவேதீஸ்வரர், உக்த வேதீஸ்வரர்
இறைவி : அரும்பன்ன வனமுலைநாயகி, அமிர்த முகிழாம்பிகை
தல விருட்சம்: உத்தாலமரம், அகத்தி
தீர்த்தம்: பதும, சுந்தர, காவிரி தீர்த்தங்கள், வடகுளம்
புராண பெயர்:திருத்துருத்தி, குற்றாலம்
ஊர்:குத்தாலம்
மாவட்டம்: மயிலாடுதுறை , தமிழ்நாடு
பாடியவர்கள்: அப்பர், சுந்தரர் ,திருஞானசம்பந்தர்
கங்குல் கொண்ட திங்களோடு கங்கைதங்கு செஞ்சடைச் சங்கிலங்கு வெண்குழை சரிந்திலங்கு காதினாய் பொங்கிலங்கு பூணநூ லுருத்திரா துருத்திபுக் கெங்குநின் னிடங்களா வடங்கி வாழ்வ தென்கொலோ.
திருஞானசம்பந்தர்
தேவார பாடல் பெற்ற 276 தேவார சிவத்தலங்களில் 100 வது தலமாகும் . தேவார பாடல் பெற்ற காவேரி தென்கரை சிவ தலங்களில் 37 வது தலமாகும் . இறைவன் திருமணம் செய்துகொள்ள கைலாயத்தில் இருந்து வந்து தாயாரை திருமணம் செய்த இடம் . இறைவன் கொண்டுவந்த உத்தால மரம் மற்றும் பாதுகைகள் இன்றும் இங்கு உள்ளது . ஆதலால் இத்தலமானது திருமண தடை நீக்கும் தலமாகும் . திருமண தடை உள்ளவர்கள் பிராத்தனை செய்ய இந்த குத்தாலம் ,திருவேள்விக்குடி மற்றும் திருமணஞ்சேரி கோயிலுக்கு செல்லவேண்டும் . இந்த மூன்று கோயில்களும் அருகருகிலேயே இருப்பது சிறப்பு .
கோயில் அமைப்பு :
ஊரின் நடுவிலே நாடு நாயகனாக இக்கோயில் அமைந்துள்ளது . சமீபத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்று 5 நிலை ராஜகோபுரம் புது பொலிவுடன் மேற்கு நோக்கி உள்ளது .இக்கோயிலானது இரண்டு பிரகாரங்களை கொண்டுள்ளது . கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தால் கொடிமரம் மற்றும் பலிபீடத்தை நாம் தரிசிக்கலாம் . வலதுபுறத்தில் இத்தலத்தின் தலவிருச்சமான உத்தால மரத்தை நாம் தரிசிக்கலாம் . இறைவன் சன்னதி மேற்கு நோக்கி உள்ளது ,தாயார் சன்னதி தெற்கு பார்த்த நிலையில் தனி சன்னதியாக உள்ளார். இரு சன்னதிகளும் தனி தனியாக பிரகாரங்களை கொண்டுள்ளது . வெளி பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் ‘துணைவந்த விநாயகர் ‘ சன்னதி உள்ளது . தாயாரை மணந்துகொள்ள வந்த இறைவனுக்கு துணையாக வந்ததால் இவருக்கு இப்பெயர் ஏற்பட்டது .
நாம் அப்படியே உள்ளே சென்றால் உட்பிரகார மண்டபத்தை அடையலாம் , இங்கு வலஞ்சுழி விநாயகரை தரிசிக்கலாம் பின்பு நாம் இறைவன் உத்தவேதீஸ்வரரை தரிசிக்கலாம் . இவரை நாம் மனம் உருகி பிராத்தனை செய்தால் நமக்காகவும் இவர் மனம் உகந்து நம் இடர்களை தீர்ப்பார் என்பதில் எவ்வித ஐய்யமும் இல்லை .
அவரை தரிசித்துவிட்டு உட்பிரகாரத்தை வலம் வந்தால் மகாலட்சுமி சன்னிதி, சபாநாயகர் சன்னிதிகள் உள்ளன. கிழக்கு பிரகாரத்தில் மேற்கு நோக்கி மிக அழகாக ஸ்ரீ சண்முகர் காட்சிதருகிறார் . பிரகாரத்தின் வடகிழக்கு பகுதியில் நவகிரகங்கள் , சப்தரிஷீஸ்வரர் ,சனீஸ்வரர் ,பைரவர் மற்றும் பஞ்ச லிங்கங்கள் ஆகியோர்களுக்கு சன்னதிகள் உள்ளன . கருவறை கோஷ்டத்தில் விநாயகர் ,அகத்தியர் ,நடராஜர் ,துர்க்கை ,அர்த்தநாரீஸ்வரர் மற்றும் பிச்சாண்டவர் ஆகியோர்களுடைய சுதை சிற்பங்கள் மிக அழகாக இருக்கிறது . மற்றும் தட்சணாமூர்த்தி ,லிங்கோத்பவர் ஆகியோரும் உள்ளார்கள் .
கருவறை விமானத்தில் சுதை சிற்பங்கள் பெரியவையாகவும், கலையழகோடும் இவ் தலத்தின் சிறப்புகளை எடுத்துஉரைப்பது போல் அமைத்துள்ளார்கள்.
பரிமள சுகந்த நாயகி :
தெற்கு பகுதியில் பரிமள சுகந்தநாயகி சன்னதி உள்ளது . பரத மகரிஷி தமக்குக் குழந்தைப்பேறு வேண்டி செய்த யாகத்தில் தோன்றியவர் ஸ்ரீ பரிமள சுகந்த நாயகி. இவர் பிந்து தர்பண விந்துஷ்டாயின நமஹ’ என்ற வடிவில் அமைந்துள்ளார் .திருமணத் திருத்தலம் என்பதால் ஸ்ரீபரிமளசுகந்த நாயகியை வழிபட திருமணத்தடைகள் நீங்கும் என்பது ஐதீகம். வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
அப்படியே நாம் வெளி பிரகாரத்திற்கு வந்து தாயார் அரும்பன்ன வனமுலைநாயகி உள்ள சன்னதிக்கு சென்று அவரை தரிசிக்கலாம் . இவ் சன்னதியின் பின் பகுதியில் சுந்தரருக்கு தனி சன்னதியும் அருகே தல தீர்த்தமான சுந்தர தீர்த்தமும் உள்ளது .
கோயில் வரலாறு :
பரத மாமுனிவர் அன்னை பார்வதி தேவி தன்னுடைய மகளாக பிறக்க வேண்டும் என்று விரும்பினார். இதற்காக சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்தார். இவருடைய தவத்தை மெச்சிய சிவபெருமான் யாக குண்டத்தில் பார்வதி தேவியை குழந்தையாக பிறக்க செய்கிறார். சிவபெருமானின் மேல் கொண்ட அதீத பக்தியின் காரணமாக அந்த குழந்தை வளர்ந்தபின் காதல் கொள்கிறாள். சிவபெருமானையே கணவனாக நினைத்து மணலில் சிவபெருமானின் உருவத்தை உருவாக்குகிறாள். இதனால் மனம் உருகிய சிவபெருமான் அங்கு காட்சி கொடுத்து தன்னுடன் வருமாறு அழைக்கிறார்.
அம்பிகை ‘சாத்திரங்களில் கூறப்பட்டுள்ளபடி தாய் தந்தையர் ,உற்றார் உறவினர் சூழ என்னை திருமணம் முடிக்க வேண்டும் ‘ என்று கூறினாள். உன் விருப்பபடியே நம் திருமணம் நடக்கும் என்றும் அதன்படி சிவபெருமான் நந்தி பகவானை அனுப்பி பரத மாமுனிவரிடம் பெண் கேட்கிறார். பரத மாமுனிவர் இதற்கு ஒப்புக்கொள்ளவே குத்தாலத்தில் கோலாகலமாக அவர்களின் திருமணம் நடைபெற்றது.
இத்தலத்தின் தலவிருச்சம் உத்தால மரம் , அம்மரம் குடையாக அமைய அம்பாளை திருமணம் செய்துகொள்ள சுவாமி மணவாளனாக எழுந்தருளினார் . சிவன் தான் இங்கு வந்து திருமணம் செய்ததற்கு அடையாளமாக தான் அணிந்து வந்த பாதுகைகளையும், கைலாயத்திலிருந்து தொடர்ந்து நிழல் தந்து வந்த உத்தால மரத்தையும் விட்டு சென்றார். இதனால் தான் இத்தலம் “குத்தாலம்’ எனப்பட்டது.இம்மரத்தினடியில் இன்றும் இரண்டு பாதுகைகள் இருப்பதாய் காணலாம் .எனவே இத்தலம் உத்தாலவனம் என்று ஆகியது , பின் மருவி குத்தாலம் என்று இன்று அழைக்கப்படுகிறது . தேவாரம் பாட பெற்ற காலத்தில் அதாவது சுமார் 7 ஆம் நூற்றாண்டில் இத்தலம் துருத்தி என்று அழைக்கப்பட்டது . துருத்தி என்றால் தீவு என்று பொருள் .
தன்னால் தீண்டப்படும் பொருள்கள் எல்லாம் அழிந்ததால் வருத்தமடைந்த அக்னி இங்கு வந்துதான் தன் குறையைப் போக்கி அனைவருக்கும் பயனுள்ளவன் ஆனான்.
சுந்தரமூர்த்தி சுவாமிகள் இத்தலத்திற்கு எழுந்தருளி, தம் மேல் உற்ற பிணி வருத்தத்தைத் தீர்த்தருளுமாறு சிவபெருமானை வேண்டினார். “வடகுளத்துக்குளி” என்று சிவபெருமான் மொழிந் தருள, சுவாமிகளும் இத்தலத்திற்கு வந்து இறைவனை தொழுது அக்குளத்தில் மூழ்கினார். அக்கணமே பிணி நீங்கி, பளபளக்கும் திருமேனி ஆயினார்.
இத்தலமும் , திருவேள்விக்குடி தலமும் சேர்த்து சுந்தரர் பாடியுள்ளார் . இறைவன் பகல் நேரத்தில் திருத்துருத்தியுலும் , இரவு நேரத்தில் திருவேள்விக்குடியிலும் எழுத்தருளுவதாக சுந்தர நாயனார் தன் பதிகத்தில் குறிப்பிடுகிறார் .
பிராத்தனை :
திருமணத்தில் தடை உள்ளவர்கள் வழிபட வேண்டிய தலம். சரும நோய் தீர சுந்தர தீர்த்தத்தில் நீராடி வழிபாடு செய்கிறார்கள்.
கல்வெட்டுகள் :
சோழர் மற்றும் விஜயநகரத்தார் கல்வெட்டுகளில் இந்த கல்யாண ஆலயத்திற்கு நிலம் வழங்கப்பட்டது. ராஜேந்திரசோழன் 5ம் நூற்றாண்டில் தனது படைகளுக்கு வெற்றி தருவதற்காக சைவ அன்பர்களுக்கு உணவளிக்க பணம் தரப்பட்டது. விக்ரமதேவன் 1123ம் ஆண்டு ஆகஸ்ட் 19 தேதி 90 பொன் வரக்கூடிய வரிகளை தந்தார். ராஜேந்திரசோழன் ஒரு மடம் கட்ட நிலம் வழங்கியது குறிப்பிடப்பட்டுள்ளது.
Photos:
https://alayamtrails.blogspot.com/2023/06/sri-uthavedeeswarar-temple-kuthalam.html
The Uthavedeeswarar Temple is located in Kuthalam and is dedicated to God Uthavedeeswarar. Mother Parvathi fell in love with God and was determined to have his hand. To achieve her wish she persuaded God Shiva to meet her parents and seek their consent. The God being an abode of all noble traits did so. They were happily married with the consent of her parents. This is one of the 276 Devara Paadal Petra Shiva Sthalams and 37th Shiva Sthalam on the Southern bank of the river Cauveri in Chozha Nadu.
திறந்திருக்கும் நேரம் :
காலை 6.00 – 12.00 மற்றும் மாலை 4.00 – 8.00
Contact Number : 04364 – 235225, 9487883800
செல்லும் வழி :
மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 10.கி.மீ. தொலைவில் இக்கோயில் உள்ளது. மயிலாடுதுறையில் இருந்தும் கும்பகோணத்திலிருந்தும் ஏராளமான பேருந்துகள் உள்ளன. இக்கோயிலுக்கு நாம் ஊரின் உள்ளே செல்லவேண்டும் ,ஆதலால் மெயின் ரோட்டில் இருந்து ஆட்டோவில் செல்லலாம் , திருமணச்சேரி செல்லும் பேருந்தில் சென்றால் கோயிலின் அருகிலேயே இறங்கலாம் .
அருகில் உள்ள தலங்கள்:
1 . திருவேள்விக்குடி – கல்யாண சுந்தரேஸ்வரர் கோயில் (பாடல் பெற்ற தலம்)
2 . மேலைத்திருமணஞ்சேரி – ஐராவதேஸ்வரர் கோயில் (பாடல் பெற்ற தலம் )
3 . திருமணஞ்சேரி – நாதஸ்வாமி கோயில் ( பாடல் பெற்ற தலம் )
Location:
திருச்சிற்றம்பலம்