Maha Shivaratri

மகா சிவராத்திரி

மாசிமாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தசி அன்று அமாவாசைக்கு முதல் நாள் சிவராத்திரி விரதம் கொண்டாடப் படுகிறது. அன்றைய தினம் சிவபெருமானை நினைத்து விரதமிருந்து வழிபட்டால் கவலைகள் அனைத்தும் தீரும். காரிய வெற்றியும் ஏற்படும் என்கின்றன புராணங்கள்.

சிவராத்திரி விரத வகைகள் :

சிவராத்திரி விரதம் ஐந்து வகைப்படும்.

1 . நித்திய சிவராத்திரி
2 . மாத சிவராத்திரி
3 . பட்ச சிவராத்திரி
4 .யோக சிவராத்திரி
5 . மகா சிவராத்திரி
ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரி ஆகும். சிவனடியார் பலர் இந்த சிவராத்திரியையும் மாதந்தோறும் தவறாமல் கடைப்பிடித்து வருகின்றனர்.

சிவராத்திரி வரலாறு :

சிவராத்திரி நாள், சிவபிரான் லிங்கத்தில் தோன்றியருளிய நாள்; ப்ரம்மா, விஷ்ணு ஆகியோரிடையே ஜோதிமயமாகத் தோன்றிய நாள்; புனர் உற்பத்திக்காக அம்மை அப்பனைப் பூஜித்த நாள்.

ஒரு சமயம் பிரளயத்தில் எல்லா உயிரினங்களும் அழிந்து பிரபஞ்சமே சூன்யமாகி விட்டது. உயிர்கள் அனைத்தும் திரும்பவும் தோன்றி, வாழ்ந்து ஈடேறும்பொருட்டு ஐந்தொழில்களையும் அப்பனே ஏற்று நடத்துவான்வேண்டி, இரவில் நான்கு ஜாமங்களிலும் அம்மை, அப்பனை உளமுருகி வேண்டிய நாளே சிவராத்திரி.

விரத மகிமை

பூமிதானம், தங்க தானம், கோடிக்கணக்கான பசுக்கள் தானம், புராணங்களில் சொல்லப்பட்ட மற்றைய பல விரதங்களை நெடுங்காலம் கடை பிடிப்பது, நூறு அசுவமேத யாகம் செய்வது, பல முறை கங்கா ஸ்நானம் செய்வது ஆகிய அனைத்தையும் மேற்கொண்டாலும், ஒரு சிவராத்திரி விரதத்தை அனுஷ்டிப்பதற்கு ஈடாகாது என்கின்றனர்.

மஹா சிவராத்திரி வழிபாட்டில் முக்கியமான ஆறு அம்சங்கள் !

  1. சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தல் வேண்டும். இது ஆன்மாவைத் தூய்மைப்படுத்துதலைக் குறிக்கும்.
  2. லிங்கத்திற்கு குங்கும் அணிவித்தல் நல்லியல்பையும் நல்ல பலனையும் வழங்கும்.
  3. உணவு நிவேதித்தல் நீண்ட ஆயுளையும் விருப்பங்கள் நிறைவேறுவதையும் குறிக்கும்.
  4. தீபமிடுதல் செல்வத்தை வழங்கும்.
  5. எண்ணெய் விளக்கேற்றுதல் ஞானத்தை அடைதலைக் குறிக்கும்.
  6. வெற்றிலை அளித்தல் உலக இன்பங்களில் திருப்தியைக் குறிக்கும்.

இந்த ஆறு அம்சங்களும் வீட்டிலாவது கோயிலிலாவது சிவராத்திரியை அனுஷ்டிக்கும் போது இறைவனுக்கு வழங்கப்படவேண்டியவை என்று புராணங்கள் கூறுகின்றன.

விரதம் அனுஷ்டிக்கும் முறை :

விரதம் கடைப்பிடிப்போர் முதல் ஒருநாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து நான்கு யாம வழிபாடு செய்யவேண்டும். அடுத்தநாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி விரதத்தை நிறைவு செய்தல் வேண்டும்.

சிவாலயங்களில் நடைபெறும் நான்கு யாம அபிசேக ஆராதனைகளுக்கு அவரவர் வசதிக்கேற்ப பொருள்களைக் கொடுத்து உதவலாம்.

வீ‌ட்டி‌ல் பூஜை செ‌ய்வதாக இரு‌ந்தா‌ல், மாலையில் குளித்து உலர்ந்த ஆடையணிந்து நெற்றியில் விபூதி தரித்து, கையில் ருத்ராக்ஷ மாலையுடன் சிவ பூஜையை‌த் துவ‌க்க வே‌ண்டு‌ம்.ஐந்தெழுத்து மந்திரமான ”சிவாயநம” என்ற சிவ மந்திரத்தை உச்சரித்து பூஜிக்க வேண்டும். கலச பூஜையுடன் லிங்கத்தை வைத்தும் பூஜை செய்யலாம்.

சிவராத்திரி விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கிப் போகும். யார் வேண்டுமானாலும் சிவராத்திரி விரதத்தை மேற்கொள்ளலாம்.

நள்ளிரவு வழிபாடு:

சிவராத்திரியன்று நள்ளிரவு 11.30 மணிமுதல் 1 மணிவரை ‘லிங்கோத்பவர்’ காலமாகும். அந்த நேரத்தில் வழிபாடு செய்தால் நற்பலன்கள் நமக்கு கிடைக்கும்.

அந்த நேரத்தில் வலம்புரிச்சங்கால் அபிஷேகம் செய்து, வில்வ இலையால் அர்ச்சனை செய்து, சுத்தமான அன்னத்தை நைவேத்தியமாக வைத்து, சிவனுக்குரிய பாடல்களைப் பாடி பஞ்சாட்சரங்களை பலநூறு முறை சொன்னால் பாவங்கள் விலகும். யோகங்கள் சேரும் என்கின்றனர்.

சிவனு‌க்கு செ‌ய்ய‌ப்படு‌ம் அ‌பிஷேக‌ங்களு‌க்கான பொரு‌ட்களை வா‌ங்‌கி கொடு‌‌த்து பூஜை‌யி‌ல் கல‌ந்து கொ‌ள்ளலா‌ம்.

இர‌வி‌ல் ‌சிவனு‌க்கு செ‌ய்ய‌ப்படு‌ம் பூஜைக‌ள் கு‌றி‌த்த முழு ‌விவர‌மு‌ம் இ‌ங்கு தர‌ப்ப‌ட்டு‌ள்ளது. அத‌ற்கே‌ற்ற பொரு‌ட்களை ‌நீ‌ங்க‌ள் வா‌ங்‌கி அ‌ளி‌க்கலா‌ம்.

சிவராத்திரியின் போது இரவு நான்கு ஜாமங்களாகப் பிரிக்கப்படுகிறது. அந்த நான்கு ஜாமங்களிலும் சிவலிங்கத்துக்கு விசேஷமாக அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன. அந்த பூஜைகளின் போது எவையெவற்றால் வழிபடவேண்டும் என்பதை புனித நூல்கள் எடுத்துக் கூறுகின்றன.

முதல் ஜாமம் :-

இந்த முதல்கால பூஜை, படைக்கும் தேவன் “ப்ரம்மா” சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாகும். இந்த கால பூஜையில் “பஞ்சகவ்யம்” (பசும்பால், பசுந்தயிர், பசுநெய், கோமியம், கோசாணம்) அபிஷேகம் செய்து, மஞ்சள் நிற பொன்னாடை அணிவித்தும், தாமரைப் பூவால் அர்ச்சனையும், அலங்காரமும் செய்து, வெண்பொங்கல் நெய்வேத்யம் செய்து, நெய் தீபத்துடன் முதல் கால பூஜை ரிக் வேதபாராயணத்துடன் நடத்தப்படுகின்றது. இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் நம் பிறவி கர்மாக்களில் இருந்து விடுபட்டு நற்பலன்களை அடையலாம்.

இரண்டாம் ஜாமம் :-

இந்த இரண்டாவது காலை பூஜையை காக்கும் தேவன் “விஷ்ணு”. சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாகும். இந்த காலத்தில் பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தும், சந்தன காப்பு சாற்றியும், வெண்பட்டு ஆடை அணிவித்து அலங்காரம் செய்தும், அர்ச்சனைகள் செய்தும், பாயசம் நெய்வேத்யம் செய்து, நல்லெண்ணை தீபத்துடன், இரண்டாவது கால பூஜை யஜுர்வேத பாராயணத்துடன் நடத்தப்படுகின்றது. இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் தன தானிய சம்பத்துக்கள் சேரும்.

மூன்றாம் ஜாமம் :-

இந்த பூஜை சக்தியின் வடிவமாக அம்பாள் பூஜிப்பதாகும். இந்த காலத்தில் தேன் அபிஷேகம் செய்தும் பச்சை கற்பூரம் மற்றும் வில்வ இலையைக் கொண்டு அலங்காரம் செய்தும், சிவப்பு வஸ்த்ரம் அணிவித்தும், ஜாதி மல்லி பூவைக் கொண்டு அர்ச்சனைகள் செய்து “எள் அன்னம்” நிவேதனமாக படைத்து, இலுப்பை எண்ணை தீபத்துடன் சாமவேத பாராயணத்துடன் பூஜை முடிக்கப்படுகிறது. இந்த காலத்திற்குரிய சிறப்பு என்றால் இதை லிங்கோத்பவ காலம் என்றும் இந்த காலத்தில் சிவபெருமானின் அடி முடியைக் காண வேண்டி ப்ரம்மா அன்ன ரூபமாக மேலேயும், மகாவிஷ்ணு வராக ரூபமாக பாதாள லோகத்தையும் தேடிய சிறப்புடையது இந்த காலம். இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் எந்தவித தீய சக்தியும் நம்மை அண்டாமல் இருக்க சக்தியின் அருள் கிடைக்கும்.

நான்காம் ஜாமம் :-

இந்த நான்காவது கால பூஜை முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும், பூதகணங்களும், மனிதர்களும் அனைத்து ஜீவராசிகளும் சிவபெருமானை பூஜிப்பதாக கருதப்படுகிறது. குங்குமப்பூ சாற்றி, கரும்பு சாறு & பால் அபிஷேகம் செய்தும், நந்தியாவட்டைப் பூவால் அலங்காரமும், அர்ச்சனையும் செய்து அதர்வண வேதப் பாராயணத்துடன் சுத்தான்னம் நெய்வேத்யம் செய்தும், தூப தீப ஆராதனைகளுடன் 18 வகை சிறப்பு அலங்கார அபிஷேக பூஜைகள் செய்யப்படுகிறது.

பூஜை செய்ய முடியாதவர்கள் நான்கு ஜாமத்திலும் சிவபுராணம் கேட்டும், சிவன் கோயிலுக்குச் சென்று இரவைக் கழித்தும் சிவனை வழிபடலாம்.

மிக உயர்வான இந்த மகா சிவராத்திரி விரதத்தை இருந்து சிவபெருமானை வழிபட்டு அனைத்து செல்வத்தையும், வாழ்வில் மகிழ்ச்சியையும் அடைவோமாக!

தென்னாடுடைய சிவனே போற்றி !
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி !

சிவாய நம ஓம் அபாயம் யாவும் போம் !
அபாயம் யாவும் போம் உபாயம் அறிவோம் !!

சிவ சிவ என்போம் சிவகதி பெறுவோம் !
ஹர ஹர என்போம் அவன் தாள் பணிவோம் !!

நற்றுணையாவது நம்சிவாயவே !

திருச்சிற்றம்பலம்!

Leave a Reply