Pillayarpatti Karpaga Vinayagar Temple

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்

பிள்ளையார் கோயில் என்றால் நமக்கு முதலில் நினைவுக்கு வரும் தளம் இந்த பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தான் .விநாயகரின் 6 படை வீடுகளில் இத்தலமானது ஐந்தாவது படை வீடாகும் . நகரத்தார் திருப்பணி செய்த கோயில்களில் ஒன்று . அவ்வளவு பெருமை மிக்க இந்த கோயிலை பற்றித்தான் நாம் இந்த பதிவில் காணப்போகிறோம் .

கோயில் அமைப்பு :

இங்குள்ள சிறிய மலையின் அடிவாரத்தில் கோவில் குடையப்பெற்றுள்ளது. இக்கோவில் சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாகக் நம்பப்படுகிறது .கோயிலின் அமைப்பு இருபகுதிகளாக அமைந்திருக்கிறது. கோயிலின் ஒரு பகுதி குடைவரைக் கோயிலாகவும், மற்றொரு பகுதி கற்றளி எனவும் அமைந்திருக்கிறது.

இந்த குடைவரைக் கோவிலுக்குள் நாம் நுழைந்தால் முதலில் உள்ள கிழ்மேல் ஓடிய பகுதி காணப்படும். அதற்கு அடுத்து நான்கு தூண்களுக்கு இடையே தென்வடல் ஓடிய இரட்டைப் பகுதி மண்டபம் காணப்படும். அம்மண்டபத்தின் கீழ்புறத்தில் தென்புறம் மலை நெற்றியில் 6 அடி உயரம் உள்ள கம்பீர நிலையில் வடக்கு நோக்கி உள்ளார் கற்பக விநாயகர். இந்த மூர்த்தி தான் பிள்ளையார்பட்டியின் மூலவர் கற்பக விநாயகரான தேசிவிநாயகப் பிள்ளையார்.

அதற்கு மேற்கே அதே மலை நெற்றியில் தெற்கு நோக்கிய சங்கர நராயணர். உருநாட்டு சண்டீசன், கருடன் இருவரும் இருபுறம் நின்ற கோலத்தில் விளங்குகிறார்கள்.அந்த மேல்புரத்தில் பத்தியின் நடுவே கிழக்கு பார்த்த திருவாயிலுடன் கூடிய மாடம் குடையப் பெற்றுள்ளது. அதன் நடுவிலே கடைந்த பெரிய மகாலிங்கம் உள்ளது. இந்த மூர்த்திதான் திருவீசர். இவர் திருவீங்கைக்குடி மகாதேவர்.

அங்கிருந்து சிறிது வடக்கே வந்து மேற்கே சென்று தெற்கு புறமாக பார்த்தால் வடக்குப் பார்த்த லிங்கோத்பவர் மூர்த்தியை காணலாம்.

பல்லவர்களுக்கு முன்பே குடைவரைக் கோயில்களை அமைத்த பெருமை முற்கால பாண்டியர்களுக்கு உண்டு. ஏக்காட்டூர் கோன் பெருபரணன் என்கிற சிற்பியால் பிள்ளையாரின் உருவமும், சிவலிங்கத்தின் உருவமும் செதுக்கப்பட்டுள்ள தகவல் கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆய்வின்படி மகேந்திரவர்ம பல்லவன் காலத்துக்கும் முன்பு இரண்டு அல்லது ஐந்து நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்தது இந்தக் குடைவரைக் கோயில் என்பதை அறியலாம். 4ம் நூற்றாண்டில் பிள்ளையார் சிலையை செதுக்கி இருக்கலாம் என்று நம்மப்படுகிறது. இது போல் 14 சிலை உருவங்கள் இக் கோயிலில் உள்ளது.

கற்பக விநாயகர் :

இங்குள்ள பிள்ளையார் 6 அடி உயரத்தில் கம்பீரமாக அமர்ந்துள்ளார் .இங்கு பிள்ளையாரின்  துதிக்கை வலம்சுழித்ததாக அமைந்திருப்பது இதனால் இவரை வலம்சுழி விநாயகர் என்றும் அழைப்பார்கள் . மற்ற இடங்களில் இருப்பதைப்போல நான்கு கைகள் இல்லாமல் இரண்டு கரங்களை கொண்டு காட்சிதருகிறார் .அங்குச பாசங்கள் இல்லாமல் இருக்கிறார் .வயிறு, ஆசனத்தில் படியாமல் கால்கள் மடித்திருக்க அமர்ந்திர்ப்பது பார்ப்பதற்கே மிக அழகாக இருப்பார் .வலத்தந்தம் நீண்டும், இடத்தந்தம் குருகியும் காணப்படுகிறார் .வலக்கரத்தில் மோதகம் தாங்கியருள்கிறார் .

ராட்சத கொழுக்கட்டை:

ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தியன்று உச்சிகால பூசையின் போது விநாயகருக்கு முக்குறுணி அரிசியால் செய்யப்பட்ட பெரிய அளவிலான ஒரே கொழுக்கட்டை தயாரித்து படைக்கப்படும். இது மிகவும் சிறப்பு பெற்றதாகும்.

இவ்வூருக்கு எருக்காட்டூர், மருதங்குடி, திருவீங்கைக்குடி, திருவீங்கைச்வரம், இராச நாராயணபுரம். மேலும், மருதங்கூர், தென்மருதூர், கணேசபுரம், கணேச மாநகரம், பிள்ளைநகர் போன்றவை முற்காலத்தில் அழைக்கப்பட்டன .  மருதங்கூர், தென்மருதூர், கணேசபுரம், கணேசமாநகரம், பிள்ளை நகர் போன்ற பெயர்கள் பிற்காலப் பெயர்கள் பிற்காலப் பாடல்களில் காணப்படுகின்றன.

கல்வெட்டுகள் செய்திகள் :

 முதன் முதலில் மருதங்குடி வயல்களை மருதங்குடி ஊராரிடம் பிள்ளையார்பட்டி கோவில் நகரத்தார் விலைக்கு வாங்கியிருக்கிறார்கள் பின்னர் சம்மந்தப்பட்ட அத்தனையூர் நாட்டவரிடமும், கீழ்குண்டாற்று நாட்டவரிடமும், அவர்களுக்கு உள்ள உரிமையை வாங்கி உள்ளனர். அதன் பிறகு அந்நாளில் பாண்டி மண்டலத்தை வென்று ஆட்சி செய்த (பரகேசி மூன்றாம் குலோத்துங்க சோழ தேவரான) கோனேரின்மை கொண்டானிடம் முழு உரிமையும் பெற்றுக் கொண்டிருக்கின்றார்கள். அவன் நகரத்தார்களுக்கு கொடுத்த திருமுகத்திலுருந்து மருதங்குடியில் இராசநாராயணபுரம் என்ற பெயருடன் ஒரு நகரம் அமைத்து அதில் குடியேறி வாழ்ந்துவர அனுமதித்திருக்கிற செய்தி நன்கு புலனாகிறது.

 மருதங்குடியான இராசநாராயணபுரம் என்னும் பிள்ளையார்பட்டியும் கீழ்குண்டாற்று நாட்டில் அடங்கியதே. எனவே பிள்ளையார்பட்டியை “கேரள சிங்கவள நாட்டு கீழ்குண்டாற்று நாட்டில் மருதங்குடியான இராச நாராயணபுரத்து பிள்ளையார்பட்டி” என்றே குறிப்பிட வேண்டும்.

திருவிழா :

விநாயகருக்கு தேர்த்திருவிழா நடக்கும் ஒரு சில கோவில்களில் இதுவும் ஒன்று. அப்பொழுது விநாயகருக்கும், சண்டிகேஸ்வரருக்கும் தேர்கள் இழுக்கப்படுகின்றன. பிள்ளையாருக்கான தேரை இழுக்கும் போது, தேரின் ஒரு வடத்தை ஆண்களும் மற்றொரு வடத்தை பெண்களும் பிடித்து தேரை இழுக்கின்றனர். சண்டிகேஸ்வரரின் தேரை பெண்கள் மற்றும் குழந்தைகள் மட்டுமே இழுக்கின்றனர். இக்காலத்தில் கோவிலில் 9 நாட்களுக்கு விழா நடத்தப்படுகிறது. ஒன்பது நாள் விழாவின் இறுதி நாளில் பிள்ளையாருக்கு “80 கிலோ சந்தனகாப்பு” சாற்றப்படுகிறது. ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே செய்யப்படும் இந்த அலங்கார காட்சியை காண்பதற்காகவே பக்தர்கள் பெருமளவில் இக்கோவிலுக்கு வருகை தருகின்றனர்.

திறந்திருக்கும் நேரம் :

காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையும். மாலை 4 மணிமுதல் இரவு 8 மணி வரையும் நடை திறந்திருக்கும்.

Contact Number : 4577 264260 , 4577 264240 , 4577 264241

செல்லும் வழி :

 திருப்பத்தூர்- குன்றக்குடிச் சாலையில் திருப்பத்தூரில் இருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ளது. மேலும், குன்றக்குடி முருகன் கோயிலிருந்து 3 கி.மீ. தொலைவிலும், காரைக்குடியிலிருந்து 16 கி.மீ. தொலைவிலும் மற்றும் சிவகங்கையிலிருந்து 47 கி.மீ தொலைவிலும் இவ் தலம் அமைந்துள்ளது .

Location:

Leave a Reply