Sri Chenna Malleeswarar Temple – Chennai

ஸ்ரீ சென்ன மல்லீஸ்வரர் கோயில் – பூக்கடை , சென்னை

Chenna malleeswarar temple

சென்னையின் பரபரப்பான வியாபாரம் நடைபெறும் பூக்கடை மற்றும் மின்ட் பகுதியில்   கட்டடங்களோடு கட்டடமாக இக்கோயில் அமைந்துள்ளது . இக்கோயிலுக்கு ராஜகோபுரம் கிடையாது . உயர்நீதி மன்றத்தை பார்த்தாற்போல் கோயிலின் நுழைவாயில் அமைந்துள்ளது .சைவ, வைணவ ஒற்றுமையை உலகறியும் வண்ணம் இங்கே சென்ன மல்லீஸ்வரர், சென்ன கேசவப் பெருமாள் கோவில்கள் கட்டப்பட்டுள்ளன.

கோயில் அமைப்பு :

வடக்கு நோக்கிய தனிச்சன்னிதியில் பிரசன்ன விநாயகர் திருக்காட்சி புரிகிறார்.இதற்கு பக்கத்தில் மேற்கு நோக்கிய தனிச்சன்னிதியில் சிவசூரியன் வீற்றிருக்கிறார். மேற்குப் பிரகார முடிவில் கிழக்கு நோக்கிய வண்ணம் கருணைத் திருமுகம் கொண்ட பிரமராம்பிகை அருட்காட்சி தருகிறாள்.

வடக்குப் பிரகாரத்தில் வள்ளி- தெய்வானை சமேத முருகப்பெருமானை நோக்கி வணங்கும் கோலத்தில் அருணகிரி சுவாமிகள் காட்சி தருகிறார். இவரது வலப்புறமாக வில்வ மரமும், வடக்கு மற்றும் மேற்கு நோக்கிய வண்ணம் நாக கன்னிகைகளும் காட்சி அளிக்கின்றனர். வடக்குப் பிரகாரத்தின் கிழக்குக் கோடியில்  பைரவர் தெற்கு நோக்கிய வண்ணம் வீற்றிருக்கிறார். பைரவருக்கு அடுத்ததாக ஆதிசங்கரர் காட்சி தருகின்றார்.

உட்பிரகாரத்தின் உள் நுழையும் முன் நந்தி தேவர் இருக்கிறார். இவரை வணங்கி உள்ளே சென்றால் இடப்புறத்தில் நவக் கிரக சன்னிதி இருக்கிறது. இதற்கு எதிரில் சோமாஸ்கந்தர், கணபதி, இரு திருக்கர பிரமராம்பிகை, சண்டிகேஸ்வரர் ஆகியோர் உற்சவ மூர்த்திகளாக எழுந்தருளியுள்ளனர்.

கருவறை வாசலின் தென்புறத்தில் கிழக்கு நோக்கியபடி சோமஸ்கந்தர் உற்சவ மூர்த்தியும், வடபுறத்தில் சந்திரசேகரர் உற்சவ மூர்த்தியும் உள்ளன. துவார பாலகர்களை கடந்து செல்கையில் உள்ளே  சென்றால் இறைவன் ஈசன்  சென்ன மல்லீஸ்வரர் என்ற திருநாமதோடு நம்  அனைவருக்கும்  திருக்காட்சி தருகிறார்.

தல வரலாறு :

தற்போதைய சென்னை  உயர்நீதிமன்றம் இருக்கும் வளாகத்தில் இருந்த சென்னகேசவப் பெருமாள் கோயில் மற்றும் சென்னமல்லீசுவரர் கோயில் , ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில்  தங்களது வணிக வசதிக்காக 1757ஆம் ஆண்டில் இடித்த போது, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் . பின்னர் ஆங்கிலேயர் , மணலி முத்துகிருஷ்ண முதலியாருக்கு இடமும் பொருளும் கொடுத்து, 1762ஆம் ஆண்டில் தற்போது உள்ள இடத்தில் சென்னகேசவப் பெருமாள் கோயிலும்.சென்னமல்லீசுவரர் கோயிலும் அடுத்தடுத்து மீண்டும் கட்டப்பட்டன. இந்த இரண்டு கோயில்களையும் இணைத்து பட்டணம் கோவில் என்று அப்பகுதி மக்கள் அழைக்கிறனர்.

திறந்திருக்கும் நேரம் :

காலை 7 .00 – 12 .00 , மாலை 5 .00 – 8 .30

செல்லும் வழி :

சென்னை, பூக்கடைக் காவல் நிலையம் அருகில் உள்ள தேவராஜமுதலி தெருவில் சென்னக் கேசவப் பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது.சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து அருகில் உள்ளது .

Location:

Leave a Reply