ஸ்ரீ சென்னக் கேசவப் பெருமாள் கோவில் – பூக்கடை – சென்னை
சென்னையில் உள்ள மிக முக்கியமான கோயில்களில் இந்த கோயிலும் ஒன்றாகும் . சென்னை என்று பெயர்க்காரணம் வருவதற்கு முக்கிய காரணியாக இருந்த கோயில் . பட்டணம் கோயில் , பூக்கடை கோயில் என்றும் அழைப்பார்கள் . இந்தப் பகுதி ‘சென்னிநகர்’ என்று அழைக்கப்பட்டதாகவும், பின்னர் காலப்போக்கில் அதுவே மருவி ‘சென்னை நகர்’ என்றானதாகவும் பெயர்க் காரணம் கூறப்படுகிறது.
கோயில் அமைப்பு :
கோயிலின் முன்பாக நான்கு கால் மண்டபம் மிக கம்பீரமாக காட்சிதருகிறது , அதை கடந்து சென்றால் மூன்று நிலை ராஜகோபுரம் வருகிறது , அதை கடந்து உள்ளே சென்றால் அழகிய பெரிய மண்டபம் நம்மை வரவேற்கிறது. அந்த மண்டபத்தைக் கடந்து உள்ளே சென்றால் வடக்கு பார்த்த நிலையில் எம்பார் தனிச்சன்னிதியில் வீற்றிருக்கிறார். இவர் திவ்யபிரபந்தத்திற்கு விளக்கம் அருளியவர் ஆவார்.
தொடர்ந்து சென்றால் கருவறையை அடையலாம். வாயிலில் ஜெயன், விஜயன் காவலாக உள்ளார்கள் . அவர்களை கடந்து உள்ளே சென்றால் சென்ன கேசவ பெருமாள் ஸ்ரீதேவி ,பூமாதேவியுடன் காட்சி தருகிறார் .இந்தப் பெருமாள் நாம் வேண்டும் வரத்தைத் தருபவராகவும், துன்பம் நீக்கி இன்பம் அருள்பவராகவும் திகழ்கிறார்.
பெருமாள் சன்னிதியை விட்டு வெளியே வந்தால், வடக்கு பார்த்து அமைந்துள்ள சக்கரத்தாழ்வார் சன்னிதி நம்மை வரவேற்கிறார்.சக்கரத்தாழ்வார் சன்னிதிக்கு அருகில், மேற்கு பார்த்த நிலையில் அனுமன் சன்னிதி இருக்கிறது.இவரை கடந்து சென்றால், வடக்கு பார்த்த திசையில் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார், குலசேகர ஆழ்வார், தொண்டரடிப் பொடியாழ்வார் ஆகியோர் சன்னிதிகள் உள்ளன. இவர்களுக்கு அருகிலேயே திருப்பாணாழ்வார் மற்றும் திருமங்கையாழ்வார் இருவரும் வடக்கு பார்த்த தனிச்சன்னிதியில் அருள்பாலிக்கின்றனர். இதற்கடுத்த தனிச் சன்னிதியில் திருக்கச்சி நம்பிகள், பட்டர், வேதாந்த தேசிகர் ஆகியோர் எழுந்தருளியிருக் கிறார்கள்.
இவர்களை வழிபட்டு திரும்பினால், தனித்தனி கல்லினாலான வடிக்கப்பட்ட நான்கு யானைகள் கிழக்கு முகமாக வீற்றிருக்கும் கோதண்டராமர் சன்னிதிக்கு வழிகாட்டுகின்றன.இதைக் கடந்தால் கிழக்கு பார்த்தபடி தனிச்சன்னிதியில் செங்கமலவல்லித் தாயார் நமக்கு கருணை முகத்துடன் சேவை தருகிறார் . அதுமட்டுமல்லாமல் ருக்மணி சமேதராக கண்ணன் , மற்றும் ராமர் பாதங்கள் இக்கோயிலில் அமைந்துள்ளன .
கோயிலின் புது அமைவிடம் மற்றும் நரசிம்மர் உற்சவர் :
சென்னகேசவப் பெருமாள் கோயில் முதலில் 1646ஆம் ஆண்டில் கட்டப்பட்டது.தற்போதைய சென்னை உயர்நீதிமன்றம் இருக்கும் வளாகத்தில் இருந்த சென்னகேசவப் பெருமாள் கோயில் மற்றும் சென்னமல்லீசுவரர் கோயில் , ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் தங்களது வணிக வசதிக்காக 1757ஆம் ஆண்டில் இடித்த போது, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் . பின்னர் ஆங்கிலேயர் , மணலி முத்துகிருஷ்ண முதலியாருக்கு இடமும் பொருளும் கொடுத்து, 1762ஆம் ஆண்டில் தற்போது உள்ள இடத்தில் சென்னகேசவப் பெருமாள் கோயிலும்.சென்னமல்லீசுவரர் கோயிலும் அடுத்தடுத்து மீண்டும் கட்டப்பட்டன. இந்த இரண்டு கோயில்களையும் இணைத்து பட்டணம் கோவில் என்று அப்பகுதி மக்கள் அழைக்கிறனர்.
தற்போதுள்ள இடத்தில் புதிய கோவில் கட்டி முடிக்கப்பட்டதும் தான், உற்சவர் விக்கிரகம் இல்லை என்பது தெரியவந்தது. அதுபற்றி விசாரித்தபோது, உற்சவர் விக்கிரகம், திருநீர்மலையில் இருப்பதாக தெரியவந்தது.இறுதியில் நரசிம்மரின் உற்சவர் சிலையை எடுத்து வந்து ஆலயத்தில் வைத்தனர்.
கோயில் சிற்பங்கள் :
இக்கோயிலின் தூண்கள் மற்றும் மண்டபங்களில் அழகிய வேலை பாடுகளுடன் கூடிய புடைப்பு சிற்பங்கள் உள்ளன .ராமர், சீதை, அனுமன், கண்ணன் மற்றும் கண்ணனின் லீலைகள், திருமால் சயனம், தசாவதார காட்சிகள், யோக நரசிம்மர், ஆழ்வார்கள், தும்புருநாதர், கோபியர்கள் போன்ற இன்னும் பல திருவுருவங்கள் புடைப்புச் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. ஒரு தூணில் விநாயகர், சிவலிங்கம், நந்தி ஆகிய சிற்பங்கள் ஒன்றன் மேல் ஒன்றாக செதுக்கப்பட்டுள்ளது.பெருமாள் சன்னிதி நுழைவு மண்டபத்தின் வலது புற மேற்கூரையில், கல்லைக் குடைந்து மீன் வடிவங்கள் பொறிக்கப்பட்டுள்ளது.
திறந்திருக்கும் நேரம் :
காலை 6 .30 -12 .00 , மாலை 5 .00 – 8 .30 வரை
செல்லும் வழி :
சென்னை, பூக்கடைக் காவல் நிலையம் அருகில் உள்ள தேவராஜமுதலி தெருவில் சென்னக் கேசவப் பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது.சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து அருகில் உள்ளது .
Location :