Sri Dhenupureeswarar temple – Madambakkam, Chennai

ஸ்ரீ தேனுபுரீஸ்வரர் கோயில் – மாடம்பாக்கம் , சென்னை

Sri Dhenupureeswarar temple - Madambakkam

இறைவன் : தேனுபுரீஸ்வரர்

இறைவி : தேனுகாம்பாள்

தல விருச்சம் : வில்வம்

தல தீர்த்தம் : கபில தீர்த்தம்

ஊர் : மாடம்பாக்கம் , சென்னை

இங்குள்ள இறைவன் சதுர பீடத்தில் சுமார் ஒரு ஜான் உயரத்தில் சிறிய மூர்த்தியாக காட்சி தருகிறார் . பசு மிதித்த தழும்பும் ,கல்லடிபட்ட பள்ளமும் இறைவன் மீது உள்ளது . மூர்த்தி சிறியது ,கீர்த்தி பெரியது .

இக்கோயில் 10 ம் நூற்றாண்டில் ( கி பி 954 – 971 ) சுந்தர சோழன் எனும் இரண்டாம் பராந்தக சோழனால் கருவறை கோபுரம் கஜ பிருஷ்டம் அமைப்பில் கட்டப்பட்டது . பல ஆண்டுகள் கழித்து பாண்டிய மன்னர்கள் தாயார் சன்னதி , தெற்கு நுழைவு வாயில் மற்றும் மண்டபத்துடன் கட்டினார்கள் .அதன் பிறகு பல்லவ மன்னர்கள் காலத்தில் திருக்கல்யாண மண்டபத்துடன் 18 தூண்கள் கொண்ட மஹாமண்டபத்துடன் அமைக்கப்பட்டது . இக்கோயில் சுமார் 1000 வருடங்கள் பழமையானது .

கபில முனிவர், இடது கையில் சிவலிங்கத்தை வைத்துக்கொண்டு, பூஜை செய்தாராம். இதனால் கடும் கோபம் கொண்ட சிவபெருமான், பசுவாகும்படி சபித்தாராம். அதன்படி இங்கே இந்தப் பகுதியில், பசுவாக இருந்து சிவ வழிபாடு செய்து, பால் பொழிந்து  அபிஷேகித்து, பூஜித்து வரம் பெற்றார். அதேபோல், இந்திரன் தன் சாபத்தைப் போக்கிக் கொள்ள இங்கு வந்து சிவபூஜை செய்து வரம் பெற்றான் என்கிறது தல புராணம்.முன் பிறப்பில் செய்த சிவ நிந்தையின் பலனால் சாபம் பெற்று பசுவாகப் பிறந்த கபில முனிவருக்குச் சாப விமோசனம் அளித்ததால், சிவபெருமான் `தேனுபுரீஸ்வரர்’ என்ற திருப்பெயருடன் அந்தத் தலத்தில் கோயில்கொண்டார்.

மூலவர் தேனுபுரீஸ்வரர் கருவறையில் சதுர பீடத்தில், சுமார் ஒரு சாண் உயரத்தில் 3 விரற்கடை அகல லிங்க வடிவில் உள்ளார். பசு மிதித்த தழும்பும், கல்லடி பட்ட பள்ளமும் தெரிகிறது. அம்மன் தேனுகாம்பாளுக்குத் தனிச் சந்நிதியில் காட்சிதருகிறார் . கஜபிருஷ்ட விமானத்துடனமைந்த கருவறை  அமைந்துள்ளது .

இத்திருக்கோயில் நந்தி மண்டபத்தை ஒட்டி அமைந்துள்ள 18 தூண்களின் கீழ் பக்கத்தில் நாற்புறங்களிலும் சிற்ப வேலைப்பாடுகளுடன்  கூடிய கலை நயத்துடன் துவாரகா பாலகர்கள் ,நர்த்தன கணபதி ,வீணை கணபதி ,வீணா தட்சணாமூர்த்தி ,கங்கா விசார்ஜனர் ,ஊர்துவர் தாண்டேஸ்வரர் ,சங்கர நாராயணன் ,வீரபத்ர ஸ்வாமி ,பத்ரகாளி ,கஜசம்ஹாரமூர்த்தி ,பஞ்சமுக விக்னேஸ்வரர் ,அர்த்தநாரீஸ்வரர் ,ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் ,ஸ்வரஹரேஸ்வரர் ,சோமேஸ்கந்தர் ,நரசிம்மர் ,வாமணமூர்த்தி ,ராமர் பட்டாபிஷேகம் ,குழல் ஊதும் கண்ணன் , மற்றும் நால்வர்கள்,உச்சிஷ்ட கணபதி, சரபேஸ்வரர் ,பஞ்ச முக ஆஞ்சநேயர் ஆகியவர்கள் திருவுருவங்கள் அமைக்கப்பட்டுள்ளது .

சரபேஸ்வரர் வழிபடு :

சென்னையில்  சரபேஸ்வரர் வழிபாடு செய்யும் கோயில்களில் இந்த கோயிலும் ஒன்றாகும் .ஒவ்வொரு ஞாயிற்று கிழமை அன்றும் மாலை 4 .30 – 6 .00 மணி வரை ராகு காலத்தில் இங்குள்ள சரபேஸ்வரருக்கு அபிஷேக ஆராதனைகள் மிக சிறப்பாக நடைபெறுகிறது .

பரிகாரம் :

சர்வ மங்களம் உண்டாக ,பில்லி ,சூனியம் ,தடைபட்ட திருமணம் ஆகியவற்றிலிருந்து விடுபட ,மகப்பேறு உண்டாக ,பயம் இவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மன நிம்மதி கிடைக்க இவரை வழிபாடு செய்கிறார்கள் . இக்கோயில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது .

இக்கோயிலில் உள்ள முருகரை பற்றி அருணகிரிநாதர் தன் திருப்புகழில்  பாடியுள்ளார் .

Photos:

https://alayamtrails.blogspot.com/2021/05/sri-dhenupureeswarar-temple-madambakkam.html

திறந்திருக்கும் நேரம் :

காலை 6 -12 , மாலை 5 -8 .30 மணி வரை

செல்லும் வழி :

சென்னை தாம்பரத்தில் இருந்து சேலையூர் செல்லும் சாலையில் சென்றால் சேலையூர் தாண்டி சென்றால் வலது புறத்தில் ஷெல் பெட்ரோல் பங்க் வரும் அந்த சிக்னல் வலது புறம் திரும்பி 3 km தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது , இதன் அருகிலேயே 18 சித்தருக்காக கோயில் அமைத்துள்ளார்கள்.

Location:

Leave a Reply