ஸ்ரீ ஞானபுரீஸ்வரர் கோயில் – திருவடிசூலம் ( திரு இடைச்சுரம் )
இறைவன் : ஞானபுரீஸ்வரர் , இடைசுரநாதர்
இறைவி : கோவர்தனாம்பிகை , இமயமடக்கொடி அம்மை
தல விருச்சம் : வில்வம்
தல தீர்த்தம் : மதுரா தீர்த்தம்
புராண பெயர் : திரு இடைச்சுரம்
ஊர் : திருவடிசூலம்
மாவட்டம் : காஞ்சிபுரம் , தமிழ்நாடு
பாடியவர்கள் : திருஞானசம்பந்தர்
தேவார பாடல் பெற்ற தொண்டை நாடு தலங்களில் 27 வது தலமாகும். தேவார தலங்கள் 276 இல் இத்தலம் 260 வது தலமாகும் .
இத்தலமானது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் பல மலை குன்றுகளுக்கு இடையே உள்ளது . செல்லும் வழியெல்லாம் அழகிய வயல்வெளிகளும் , மரங்களும் பார்ப்பதற்கு கண்களுக்கு குளிர்ச்சியாக உள்ளது .
இக்கோயிலுக்கு தற்காலத்தில் எழுப்பப்பட்ட ராஜகோபுரம் உள்ளது, கோபுரத்தின் வெளியே இடது புறத்தில் வரசித்தி விநாயகர் கோயில் இருக்கிறார் ,அவரை தரிசித்து விட்டு நாம் கோபுரத்தின் உள்ளே சென்றால் விசாலமான வெளிப்பிராகாரத்தை நாம் காணலாம். அங்கே வலம்புரி விநாயகரை நாம் தரிசனம் செய்துவிட்டு வலம் வந்தால் பலிபீடம் மற்றும் கொடிமரத்தை நாம் தரிசிக்கலாம் , அருகிலேயே பிரம்மாண்டேஸ்வரர் சன்னதியை நாம் காணலாம் .அருகில் வேப்பம்,அரசு ,வில்வம் மரங்கள் ஒன்றாக வளர்ந்திருப்பதை காணலாம் . இடது புறத்தில் சுப்பிரமணியர் வள்ளி தெய்வானையோடு கிழக்கு நோக்கி அருள் தருகிறார் .
அப்படியே நாம் வலம் வந்தால் தெற்கு பகுதியில் மற்றும்மொரு வாயில் வழியாக உள்ளே சென்றால் பெரிய மண்டபம் உள்ளது ,அதை கடந்து உள்ளே சென்றால் இறைவி கோவர்தனாம்பிகை தெற்கு நோக்கி சேவை புரிகிறார் . இந்த சன்னதியின் இடது புறத்தில் இறைவன் ஞானபுரீஸ்வரர் கிழக்கு நோக்கி அருள் தருகிறார் , அவரை தரிசனம் செய்துவிட்டு நாம் அவரின் சன்னதியை வலம் வந்தால் கருவறை ஒரு அகழி போன்ற அமைப்பில் இருப்பதை நாம் காணலாம் .
இறைவன் இங்கு சுயம்பு மூர்த்தியாவார் அவர் மரகதலிங்க திருமேனியுடன் சதுர பீட ஆவுடையாராக காட்சி தருகிறார் . சிவா லிங்க மேனிக்கு தீபாராதனை காட்டும்போது அவ் ஒளியானது பிரகாசமாக லிங்க பாணத்தில் தெரிகிறது ,பார்பதற்க்கே கண்கொள்ளா காட்சியாக இருக்கிறார் .
அம்பாள், பசு வடிவில் வந்து பால் சொரிந்து இறைவனை வழிபட்ட தலம். ஆதலால் இறைவி கோவர்த்தனாம்பிகை என்று அழைக்கப்படுகிறாள்.பெரும்பாலும் மற்ற தலங்களில் அம்பாள் கால் இரண்டையும் ஒன்றாக நேராக வைத்திருப்பார் ஆனால் இங்கே அவர் இடது காலை முன்னரும் வலது காலை பின்னரும் நடப்பது போல் வைத்துள்ளார் ஏன்னென்றால் திருஞானசம்பந்தரை காண இறைவன் புறப்படும்போது தானும் வருவதாக தாயார் கூறினார் அதற்க்கு இறைவன் தான் வேறு வேடம் பூண்டு சம்பந்தரை காணப்போவதாகவும் நீ அவன் பிறக்கும்போது அவனுக்கு ஞானப்பால் புகட்டியவள் , தாயை தெரியாத குழந்தை இந்த உலகத்தில் இருப்பதில்லை எனவே நீ வரவேண்டாம் என்று கூறினார் அதனால் அவர் புறப்பட்ட நிலையிலேயே இங்கு காட்சிதருகிறார் .
தல வரலாறு :
திருஞானசம்பந்தர் தனது சிவஸ்தல யாத்திரையின் போது இவ்வழியே வந்து கொண்டிருந்தார். நீண்ட தூரம் நடந்து வந்ததாலும், வெயில் கடுமையால் அவர் மிகவும் களைப்படைந்தார். அதோடு பசியும் அவரை வாட்ட ஒரு மரத்தடியில் அமர்ந்தார். அப்போது ஒரு இடையன் அங்கு வந்தான். பசியோடு உள்ள சம்பந்தரைப் பார்த்த அவன் தன்னிடமிருந்த தயிரை பருகக் கொடுத்தான். தயிரைப் பருகி களைப்பு நீங்கிய சம்பந்தரை பார்த்து இடையன் அவர் யார் என்று வினவினான். தனது சிவஸ்தல யாத்திரைப் பற்றிக் கூறிய சம்பந்தரிடம், இடையன் அருகிலுள்ள வனத்தில் ஒரு சிவன் இருப்பதைப் பற்றிக் கூறினான். இடையன் மூலமாக பசியாறிய சம்பந்தர் அவனது அழைப்பைத் தட்ட முடியாமல் அவனைப் பின் தொடர்ந்து சென்றார். வழியில் ஒரு குளக்கரையில் நின்ற இடையன் சம்பந்தரைப் பார்த்து புன்னகைத்துவிட்டு மறைந்து விட்டான். திகைப்படைந்த சம்பந்தர் சிவபெருமானை வேண்ட, சிவன் அவருக்கு காட்சியளித்து தானே இடையன் வடிவில் வந்து அருள் புரிந்ததைக் கூறினார். இடையனாக வந்து, இடையிலேயே விட்டுவிட்டுச் சென்றதால் இறைவனை இடைச்சுரநாதர் என்று அழைத்து பதிகம் பாடினார் சம்பந்தர். சிவன் மறைந்த குளக்கரை “காட்சிகுளம்” என்ற பெயரில் தற்போதும் இருக்கிறது.
இத்தல இறைவனின் திருமேனி வண்ணம் கண்டு அதிசயித்து தனது பதிகத்தின் ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் இடைச்சுர மேவிய இவர்வண மென்னே என்று பாடியுள்ளார். சேக்கிழார் தன்னுடைய பெரியபுராணத்தில் இத்தல இறைவனை அழகு மிகுந்தவர் என்று குறிப்பிட்டுள்ளார் .
Photos:
https://alayamtrails.blogspot.com/2021/06/sri-gnanapureeswarar-temple.html
திறந்திருக்கும் நேரம் :
காலை 8 .00 – 12 .00 , மாலை 4 .00 -7 .00 வரை
இக்கோயிலுக்கு அருகிலேயே 51 அடி உடைய கருமாரியம்மன் சன்னதி , 108 திவ்ய தேசங்களின் பெருமாளை ஒரே இடத்தில் உள்ள பெருமாள் கோயில் , மிக பிரம்மாண்டமான மகா பைரவர் ருத்ர ஆலயம் ஆகியவை உள்ளன .
செல்லும் வழி:
செங்கல்பட்டில் இருந்து திருப்போரூர் போகும் சாலை வழியில் , சுமார் 9 கி.மி. தொலைவில் இந்த சிவஸ்தலம் அமைந்துள்ளது. திருவடிசூலம் பேருந்து நிறுத்தத்திலிருந்து 1 கி.மீ. தூரத்தில் ஆலயம் உள்ளது. சிங்கப்பெருமாள் கோயில் வழியாகவும் இத்தலத்திற்கு செல்லலாம் .
Location Map :
-Om Namasivaya –