ஸ்ரீ ஜெகநாத பெருமாள் / திருமழிசை ஆழ்வார் கோயில் – திருமழிசை
மூலவர் : ஜெகநாதர் பெருமாள்
தாயார் : திருமங்கைவல்லி தாயார்
தல விருச்சம் : பாரிஜாதம்
தல தீர்த்தம் : பிருகு தீர்த்தம்
ஊர் : திருமழிசை
மாவட்டம் : திருவள்ளூர் , தமிழ்நாடு
சென்னையில் உள்ள புகழ் பெற்ற திருத்தலங்களில் இந்த திருமழிசை தலம் சிறப்பு வாழ்ந்தது . உலகில் திருமழிசையே சிறந்த இடம் என்பது ” உலகுமழிசையும் உள்ளுணர்ந்து தம்மில் புலவர் புகழ்கோலால் தூக்க உலகுதன்னை வைத்தெடுத்துப் பக்கம் வலிது ” என்ற திருச்சந்தவிருத்தானியானால் அறியப்படுகிறது . 12 ஆழ்வார்களில் நான்காவது ஆழ்வார்களில் ஒருவரான திருமழிசை ஆழ்வார் அவதார தலமாகும் .
தலபெருமை :
திருப்புல்லானினியில் சயனகோலமும் ,பூரியில் நின்ற கோலமும் இந்த திருத்தலத்தில் வீற்றிருந்த கோலத்தில் இருப்பதால் இத்தலத்தை” மத்திய ஜெகநாதம் ” என்று அழைக்கப்படுகிறது . இங்கு இறைவன் பாமா , ருக்மணியுடன் அமர்ந்த கோலத்தில் ஜெகநாதர் என்ற திருநாமத்தோடு காட்சி தருகிறார் .
அத்திரி,பிருகு ,வசிஷ்டர் ,பார்கவர் ஆகிய பிரம்மரிஷிகள் தாங்கள் பூலோகத்தில் தவம் செய்ய தகுந்த இடத்தை காட்டுமாறு பிரம்மனிடம் கேட்டனர் உடனே பிரமன் தேவசிற்பியை அழைத்து ஒரு தராசு கொடுத்து ஒரு தட்டில் திருமழிசையையும் மறு தட்டில் மற்ற புண்ணிய தலங்களையும் வைக்க சொன்னார் . திருமழிசை வைத்த தட்டு கணத்தில் கீழாய் சாய்ந்தது மற்ற இடங்கள் மேலே சென்றது ,பிரமன் உடனே ரிஷிகளிடம் திருமழிசையில் தவம் இருக்க சொன்னார் . அவர்களுக்கு ஜெகந்நாதர் அமர்ந்த நிலையில் காட்சி அளித்தார் .
ஆழ்வார் அவதாரம் :
இவர் இந்த திவ்யதேசத்தில் எம்பெருமானின் சக்கரம் அம்சமாக திருவவாதித்தார் .
அவதரித்த காலம் : துவாபரயுகம் .
தந்தை பெயர் : பார்கவ மகரிஷி
தாயார் : கனகாங்கி
அருளிக் செய்த பிரபந்தங்கள் : நான்முகன் திருவந்தாதி ,திருச்சந்த விருத்தம்
இவர் இவுலகில் எழுந்தருளியிருந்த காலம் : 4700 ஆண்டுகள்
இவர் பார்கவ மகரிஷிக்கு மகனாக பிறந்தார் , இவர் பிறக்கும் போதே உயிர் ,கை கால்கள் இன்றி பிண்டமாக பிறந்தார் இதனால் இவரை மூங்கில் காட்டுக்குள் வீசிவிட்டார்கள் , பெருமாள் தன தாயாரோடு எழுந்தருளி குழந்தையை அருளினார்கள் . குழந்தை பால் எதுவும் அருந்தாமல் இருந்தது , அவ்வூரில் இருந்த வயது முதிர்ந்த தம்பதியர் குழந்தைக்கு பாலை சமர்ப்பிக்க அதை உட்கொண்டது குழந்தை . மிச்ச பாலை உண்ட தம்பதியர் தம் முதுமை நீங்கி இளமைபெற்றனர் . இந்த மகிமையால் அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது . பின்னாளில் கணிகண்ணன் என்ற பெயர்பெற்ற அக்குழந்தை திருமழிசையாழ்வாரின் சீடரானார் . திருமழிசை ஆழ்வார்க்கு தன் வலது காலின் பெரு விரலில் மூன்றாவது கண் இருக்கும் .
இவர் ஆரம்பத்தில் சைவ பற்றோடு இருந்தார் , அதனால் சிவபெருமான் அவருக்கு ‘நீர் விரும்பும் வரத்தை கேளும்’ என கூற ஆழ்வாரும் மோட்சத்தை தாரும் என்று கேட்க , சிவபெருமானோ ‘அதை தரவல்லவர் முகுந்தனே’ என சொல்ல , அப்போது கந்தல் துணி தைத்து கொண்டிருந்த ஆழ்வார் இகழ்ச்சி தோன்ற நகைத்து ,’நான் துணி தைக்கும் இந்த ஊசியின் பின்னே நூல் வரும்படி வரம் தாருங்கள் என வினவினார் . கோபம் கொண்ட சிவபெருமான் தன் நெற்றி கண்ணை திறக்க , ஆழ்வார் தன் வலது திருவடி பெருவிரலில் இருந்து கண்ணை திறந்து அதிலிருந்து கிளர்ந்த நெருப்பு சிவபெருமானையும் சுட தொடங்கியது , ஆழ்வாரின் இந்தவிஷ்ணு பக்தியை மெச்சி சிவபெருமான் அவரை ‘பக்திசாரர் ‘ என்ற திருநாமத்தால் வாழ்த்தினார். இவர் தன் சீடன் கணிகண்ணனோடு காஞ்சிபுரத்தில் உள்ள சொன்னவண்ணம் செய்த பெருமாள் கோயிலில் சேவை செய்தார் .தன் கடைசி காலங்களை கும்பகோணத்தில் கழித்தார் . இவருக்கு இந்த திருமழிசை ஜெகநாதர் கோயிலில் மகா மண்டபத்தில் தனி சன்னதி உள்ளது .
கோயில் அமைப்பு :
ஐந்து நிலை ராஜகோபுரம் தல தீர்த்திருக்கு முன் கம்பீரமாக இருக்கிறது , ராஜகோபுரத்தை கடந்து உள்ளே சென்றால் துவாஜஸ்தம்பம், பலிபீடம் மற்றும் தீபஸ்தம்பம் ஆகியவற்றை காணலாம் . வெளிப்பிரகாரத்தில் தாயார் சன்னதி , லட்சுமி நரசிம்மர் சன்னதி , ஆண்டாள் சன்னதி தனி தனியாக உள்ளன . பெருமாளின் கருவறை கோஷ்டத்தில் உள்ள விநாயகர் தனது வயிற்றில் ராகு , கேது பின்னியபடி காட்சி தருகிறார் , ஆதலால் இவரை வணங்கினால் ராகு , கேது தோஷத்தில் இருந்து நிவர்த்தி பெறலாம் என்ற நம்பிக்கை உள்ளது .
இக்கோயிலில் கருவரையில் பிருகு , மார்க்கண்டேய மகரிஷி பெருமாளை வணங்கியபடி உள்ளார்கள் .
கருவரை சுவரில் 14 ஆம் நூற்றாண்டு மற்றும் 15 ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள் காணப்படுகின்றன . அவைகள் குலத்துங்க சோழன் III , விஜயநகர அரசர்கள் ஹரிஹர ராயா , விருபாக்ஷ ராயா காலத்தை சார்ந்தது . மேலும் விஜயகண்ட கோபால மந்திரியின் 12 ஆம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டும் காணப்படுகிறது . கல்வெட்டுகள் அனைத்தும் அவர்கள் கொடுத்த தங்கள் பற்றி கூறுகிறது .
திறந்திருக்கும் நேரம் :
காலை 7 .30 – 12 .00 , மாலை 4 .30 – 8 .30
செல்லும் வழி :
இக்கோவில் பூந்தமல்லியில் இருந்து திருவள்ளூர் செல்லும் பாதையில் மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ளது .
இந்த கோவில் மட்டும் இல்லாமல் இத்திருத்தலத்தில் வரலாற்று சிறப்பு மிக்க ஒத்தாண்டேஸ்வரர் மற்றும் வீடறிந்த பெருமாள் கோவில்கள் உள்ளன இவற்றையும் கண்டு இறைவன் அருளை பெறலாம் .