Sri Janamejaya Eswaran Temple – Senji,Panambakkam

ஸ்ரீ ஜனமேஜெய ஈஸ்வரர் கோயில் – செஞ்சி, பாணம்பாக்கம்

இறைவன் : ஜனமேஜெய ஈஸ்வரர் , ஜயமதீஸ்வரமுடைய மஹாதேவர்

இறைவி : காமாட்சி

தல தீர்த்தம் : பித்ரு தீர்த்தம்

புராண பெயர் : ஜனமதீச்சுரம்

ஊர் : செஞ்சி , பாணம்பாக்கம்

மாவட்டம் : திருவள்ளூர் , தமிழ்நாடு

பழமையான புராதமான கோயில்களுக்கு செல்வது என்பது என் மனதுக்கு எப்போதும் ஒரு பரவசத்தை ஏற்படுத்தும் . எல்லோரும் ஏன் கோயில் கோயிலாக அலைகிறாய் என்று கேட்பார்கள் , அவர்களுக்கு நான் எப்போதும் சொல்லும் பதில் கோயில் என்பது நமது பண்பாட்டை ,நாகரிகத்தை பிரதிபலிக்கும் ஒரு இடம் , மற்றும் எத்தனை எத்தனை ஆண்டுகாலமாக இக்கோயிலுக்குள் வீற்றியிருக்கும் இறைவன் பல அபிஷேக , ஆராதனைகளை கொண்டிருப்பார் , இக்கோயில்களை அப்போதைய மன்னர்கள் எவ்வளவு அரும்பாடுபட்டு பல சிற்பிகளை கொண்டு கட்டடக்கலையின் விதிகளை பயன்படுத்தி கடின உழைப்பால் உருவாக்கியிருப்பார்கள். அக்கோயில்களில் பூஜைகள் மற்றும் பராமரிப்புகள் தடைபெறாமல் இருக்க நிலங்கள் ,கால்நடைகளை எழுதிவைத்து கோயிலை பராமரித்தார்கள் .

ஆனால் இப்போது புராதனமான பழைய கோயில்களை பராமரிக்காமல் மிகவும் பாழடைந்த நிலையில் நிறைய கோயில்கள் இன்னும் பல கிராமங்களில் பார்த்திருக்கிறோம் . புதிய புதிய கோயில்களை அவ்வூரிலேயே கட்டுபவர்கள் தன் ஊரில் உள்ள புராதனமான கோயிலை கவனிக்காமல் விட்டுவிடுகிறார்கள் . இதை நினைக்கும் போது நமது மனம் மிகவும் வேதனை அடைகிறது . அவ்வாறு மிகவும் பழமையான ஒரு கோயிலை பற்றித்தான் இந்த பதிவில் நாம் காணப்போகிறோம் .

அவ்வாறு இந்த செஞ்சி கிராமத்தில் அதிகம் அறியப்படாத மிகவும் சிதலம் அடைந்த நிலையில் இக்கோயில் இருக்கிறது . இக்கோயிலானது தொல்லியல் துறை கட்டுபாட்டில் உள்ளது .

கோபுரங்கள் செங்கல் மூலம் கட்டப்பட்டுள்ளது அது இப்பொது மிகவும் சிதிலமடைந்து உள்ளது . கருவரையுடன் கூடிய முன் மண்டபம் எப்போ கீழே விழுமோ என்ற நிலையில் உள்ளது . கருவறையில் இறைவன் இல்லாமல் அவர் அர்த்த மண்டபத்தில் உள்ளார் . ஏனெனில் கருவறை மிகவும் சிதலமடைந்துள்ளது . இவர் பதினாறு பட்டையுடன் கூடிய லிங்கமாக காட்சி கொடுக்கிறார் . முன் மண்டபமும் , மஹா மண்டபமும் உள்ளது . இங்குள்ள தூண்கள் அனைத்துலயும் மிக அழகான சிற்பங்கள் செதுக்கபட்டுள்ளன .

கோயில் சுற்றுச்சுவர் இருந்த அடையாளங்களை மட்டுமே தாங்கி இருக்கிறது அதன் கற்கள் மற்றும் தூண்கள் இல்லை . அம்மன் சன்னதி பெயரளவுக்கு கொஞ்சம் கற்கள் மட்டுமே உள்ளது ஆதலால் அம்பாள் கருவறை முன் மண்டபத்திலேயே உள்ளார் .

கோயிலின் முன் சிறிய மண்டபத்தில் நந்தி பெருமான் உள்ளார் . பலிபீடமும் உள்ளது. கோயிலின் உள்ளே ஏறி செல்வதற்கு அழகிய வேலைப்பாடுகள் கொண்ட படிக்கட்டுகள் உள்ளது. தோரணங்களில் ரிஷபாரூட மூர்த்தி, கண்ணப்பர், உமாசகிதர், காமன் ரதி மற்றும் பிருதியுடன் உள்ளனர். கருவறை கோஷ்டத்தில் பச்சை நிற கல்லிலான விநாயகர் , தட்சணாமூர்த்தி ,லிங்கோத்பவர் ,பிரம்மா ஆகியோர்கள் உள்ளார்கள் .

கல்வெட்டுகள் :

இக்கோயிலை சோழர்கள் கட்டியதாக இங்குள்ள கல்வெட்டுகள் குறிக்கின்றன .  விக்கிரமசோழன் , மூன்றாம் குலோத்துங்கன் , மூன்றாம் ராஜராஜன் ஆகியோர்களுடைய கல்வெட்டு செய்திகள் உள்ளன . அதில் கோயிலுக்கு விளக்க ஏற்ற பொன்காசு கொடுத்ததை கூறுகிறது .

இக்கோயிலுக்கு கடந்த 27 .03 .2022  அன்று  “தொண்டைமண்டல வரலாற்று ஆய்வு சங்கத்தின் ” மூலம் திரு. பாபு மற்றும் திருமதி .ரூத் அவர்களது தலைமையில் உழவார பணி செய்தோம் .

மிகவும் பழமையான இக்கோயிலானது மிகவும் சிதிலமடைந்து இருப்பதால்  விரைவில் இக்கோயில் புனரமைத்து பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது . அந்த ஈசனின் அருளால் விரைவில் நடக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்வோம் . முடிந்தால் நீங்களும் சென்று இக்கோயிலை பாருங்கள் . அருகில் பெருமாள் கோயில் உள்ளது மற்றும் அருகில் பாணம்பாக்கம் கைலாசநாதர் கோயில் உள்ளது இப்போது இக்கோயிலானது திருப்பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது . உங்களால் ஆன உதவிகளை செய்யலாம் .

Photos:

https://alayamtrails.blogspot.com/2022/04/sri-janmejaya-eswaran-temple.html

செல்லும் வழி :

சென்னையில் இருந்து அரக்கோணம் செல்லும் ரயிலில் சென்றால் செஞ்சி பாணம்பாக்கம்  என்ற நிறுத்தம் வரும் அங்கிருந்து 3 km  தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது . மற்றும் பேரம்பாக்கம் தண்டலம் சாலை சிற்றம்பாக்கம் வழியாக இக்கோவிலுக்கு செல்லலாம் .

Location :

– திருச்சிற்றம்பலம் –

2 Comments

Leave a Reply