ஸ்ரீ காளத்தியப்பர் கோயில் – திரு காளஹஸ்தி
இறைவன் : காளத்தியப்பர், காளத்தீஸ்வரர்
இறைவி : ஞானப்பிரசுன்னாம்பிகை, ஞானப்பூங்கோதை
தல விருச்சம் : மகிழம்
தல தீர்த்தம் : சுவர்ணமுகி ஆறு
ஊர் : காளஹஸ்தி
மாவட்டம் : சித்தூர் , ஆந்திரா பிரதேசம்
பாடியவர்கள் : அப்பர்,சுந்தரர் ,திருஞானசம்பந்தர்
தேவார பாடல் பெற்ற தொண்டை நாடு தலங்களில் 19 வது தலமாகும் . தேவார பாடல் பெற்ற 276 சிவத்தலங்களில் இது 252 வது தலமாகும் . அம்பாளின் 51 சக்தி பீடங்களில் இது ஞான சக்தி பீடமாகும் . இத்தலம் பஞ்ச பூத தலங்களில் காற்று(வாயு ) தலமாகும் . ராகு,கேது சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் பரிகாரம் செய்துகொள்ளும் தலம் .
ஸ்ரீ – காளம் – அத்தி = சிலந்தி – பாம்பு – யானை ஆகிய மூன்றும் வழிபட்டுப் பேறு பெற்ற சிறப்புடைய தலம்.
இங்கு வந்த அகத்தியர் விநாயகரை வழிபடாமற் போகவே, பொன்முகலி ஆறு நீரின்றி வற்றியது அகத்தியர் தம் தவறுணர்ந்து பாதாளத்தில் – ஆழத்தில் விநாயகரைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு அருள் பெற்றார் என்பது தல வரலாற்றுச் செய்தி. (பாதாள விநாயகர் சந்நிதி உள்ளது.)’திருமஞ்சனக் கோபுரம் ‘ எனப்படும் கோபுரத்திலிருந்து பார்த்தால், நேரே பொன்முகலி ஆறு தெரியும் ஆற்றுக்குச் செல்வதற்கு படிக்கட்டுகள் உள்ளன.
இவ்வழியேதான் திண்ணனார் (கண்ணப்பர்) பொன்முகலி நீரைக் கொண்டுவந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்தார் என்று சொல்லப்படுகிறது.
சிறப்புக்கள்:
பஞ்சபூத தலங்களுள் இது வாயுத் தலம். தட்சிண (தென்) கயிலாயம் என்னும் சிறப்புடையது.சுவர்ணமுகி எனப்படும் பொன்முகலி ஆற்றின் கரையில் உள்ள தலம். இவ் ஆறு வடக்கு முகமாகப் பாய்ந்து ஓடுவதால் உத்தரவாகினி – இவ்விடம் சிறப்பாக சொல்லப்படுகிறது.
அன்புக்குச்சான்றான கண்ணப்பர் வழிபட்டு இறைவனுடைய வலப்பக்கத்தில் நிற்கும் பெரும் சிறப்பு வாய்ந்த பதி; அவர் தொண்டாற்றி வீடு பேறு பெற்ற விழுமிய தலம்.’அட்டமாசித்திகள் அணைதரு காளத்தி ‘ எனச் சிறப்பிக்கப்படும் அற்புதத் தலம்.
நக்கீரர் ‘கயிலை பாதி காளத்தி பாதி ‘ பாடியுள்ள பெருமை பெற்ற தலம்.அருச்சுணன், தன் தீர்த்த யாத்திரையில் இங்கு வந்து இறைவனை வழிபட்டும், பரத்வாஜ மகரிஷியைக் கண்டு வணங்கி சென்றதாகவும் சொல்லப்படுகிறது.
மலையடிவாரத்தில் உள்ளது கோயில்; இம்மலை, ‘கைலாசகிரி ‘ (கண்ணப்பர் மலை என்றும் மக்களால்) என்று வழங்கப்படுகிறது. (இந்நிலப்பரப்பை தொண்டைமான் ஆண்டமையை நினைப்பூட்டும் வகையில், காளத்தி செல்லும், வழியில் ‘தொண்டைமான் நாடு ‘ என்னும் ஓரூர் உள்ளது. தற்போது தெலுங்கு நாட்டில் உள்ள பகுதியாதலின், மக்கள் ‘தொண்டமநாடு ‘ என்று வழங்குகின்றனர்.
இத்தலம் சிறந்த ‘ராகு, கேது க்ஷேத்ரம் ‘ என்றழைக்கப்படுகிறது.
ஏழு நிலைகளுடன் கம்பீரமாகக் திகழும் இக்கோபுரம் (காளிகோபுரம்) ஸ்ரீ கிருஷ்ண தேவராயரால் கி. பி. 1516-ல் கட்டப்பட்டது. நூற்றுக்கால் மண்டபத்தைக் கட்டியவரும் இவரே.கோயிலின் பிரதான வாயிலில் உள்ள இக்கோபுரமும் (பிக்ஷசாலா கோபுரம்), ஏனைய கோபுரங்களும் 12-ம் நூற்றாண்டில் வீரநரசிம்ம யாதவராயரால் கட்டப்பட்டனவாகும்.
இத்தலம் அப்பிரதக்ஷண வலமுறையில் அமைந்துள்ளது.பாதாள விநாயகர் சந்நிதி – விநாயகர் 35 அடி ஆழத்தில் உள்ளார். விநாயகர் அமர்ந்துள்ள இடம், பொன்முகலியாற்றின் மட்டத்தில் உள்ளதாகச் சொல்லப்படுகிறது.
2 கால்களை நிறுத்தி சுவரோடு சேர்த்துக் கட்டப்பட்ட சிறிய மண்டபம் சுவரோரமாகவுள்ளது; கவனித்தால்தான் தெரியும். பலபேர், ‘காளத்தி சென்று வந்தேன்‘ என்று சொன்னால், ‘இரண்டு கால் மண்டபம் ‘ பார்த்தாயா? என்று கேட்கும் வழக்கம் உள்ளது.சொக்கப்பனை கொழுத்தி, எரிந்த அக்கரியை அரைத்து (ரக்ஷையாக) சுவாமிக்கு கறுப்புப் பொட்டாக இடுவது; இங்கு விசேஷம்.
இரு கொடி மரங்களில் ஒன்று கவசமிட்டது; மற்றொன்று ஒரே கல்லால் ஆன 60 அடி உயரமுள்ள கொடி மரமாகும்.பிரதான கோபுரம் ‘தக்ஷிண கோபுரம் ‘ எனப்படுகிறது; 11-ஆம் நூற்றாண்டில் குலோத்துங்க சோழனின் ஆட்சியில் அவனுடைய நேரடி மேற்பார்வையில் அதற்கென நியமிக்கப்பட்ட கோயிற் குழுவினரால் இக்கோபுரம் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
இக்கோபுர வாயிலில் நுழைந்து வலமாக வரும்போது தரையில் வட்டமாக குறித்துள்ள இடங்களில் நின்று பார்த்தால் கைலாச மலையையும் சுவாமி விமானத்தையும் தரிசிக்கலாம்.
இங்குள்ள சரஸ்வதி தீர்த்தத்தை, இயற்கையில் பேசவராத குழந்தைகளுக்கு கொடுத்தால் நன்கு பேச வரும் என்ற நம்பிக்கை உள்ளது.இங்கு வந்து பாடிப் பரவிய சம்பந்தர், இங்கிருந்தவாறே கயிலாயம், கேதாரம், கோகர்ணம், திருப்பருப்பதம், இந்திரநீலப்பருப்பதம் முதலிய தலங்களைப் பாடித் தொழுதார்.
ஆலங்காடு பணிந்த அப்பர் காளத்தி வந்து தொழுதபோது வடகயிலை நினைவு வர, கயிலைக் கோலம் காண எண்ணி, யாத்திரையைத் தொடங்கினார். திருவல்லம் தொழுது இங்கு வந்த சுந்தரர் இறைவனைப் பாடி, இங்கிருந்தவாறே திருப்பருப்பதம், திருக்கேதாரம் முதலிய தலங்களைப் பாடிப் போற்றினார்.
மூலவர், சுயம்பு – தீண்டாத் திருமேனி. சிவலிங்கத் திருமேனி அற்புதமான அமைப்புடையது. ஆவுடையார் பிற்காலத்தில் கட்டப்பட்டது. சுவாமி மீது தங்கக் கவசம் (பார்ப்பதற்கு பட்டைகளாகத் தெரிவது) சார்த்தும்போதும் எடுக்கும்போதும் கூட சுவாமியைக் கரம் தீண்டக்கூடாது. இக்கவசத்தில் இருபத்தேழு நட்சத்திரங்களும் பொறிக்கப்பட்டுள்ளது.
சிவலிங்கத் திருமேனி மிகவும் உயரமானது; இதன் அடிப்பாகத்தில் சிலந்தி வடிவமும், மத்தியில் யானையின் இருதந்தங்களும், மேற்புறத்தில் ஐந்து தலை பாம்பு வடிவமும் வலப்பால் கண்ணப்பர் கண் அப்பிய வடுவும் அழகுற அமைந்துள்ளன.
சிவலிங்கத்தின் மேற்புறம் ஐந்து தலை நாகம் போலவே காட்சி தருகிறது. கருவறை அகழி அமைப்புடையது. மூலவர் எதிரில் கதவருகில் உள்ள இரு தீபங்கள் காற்றினால் மோதப்பெற்றதுபோல் எப்போதும் அசைந்து கொண்டு; இஃது வாயுத்தலம் என்பதை நிதர்சனமாகக் காட்டிக்கொண்டிருக்கிறது.
கண்ணப்பரால் அபிஷேகம் செய்யப்பெற்ற மூர்த்தியாதலின் இச்சந்நிதியில் திருநீறு தரும் மரபில்லையாம்; பச்சைக்கற்பூரத்தைப் பன்னீர்விட்டு அரைத்துத் தீர்த்தத்தில் கலந்து சங்கு ஒன்றில் வைத்து தரிசிப்போருக்கு தருகின்றனர். (நாம் திருநீற்றுப் பொட்டலம் வாங்கித் தந்தால் அதை சுவாமி பாதத்தில் வைத்து தருகிறார்கள்.)மூலவருக்கு கங்கைநீரை தவிர (சுவாமிக்கு மேலே தாராபாத்திரமுள்ளது) வேறெதுவும் மேனியில் படக்கூடாது.
பிற அபிஷேகங்கள் அனைத்தும் ஆவுடையாருக்கே. சர்ப்ப தோஷம் முதலியவை நீங்கும் தலமாதலின் இங்கு இராகு கால தரிசனம், இராகுகால சாந்தி முதலியன விசேஷமாகச் சொல்லப்படுகிறது.
இக்கோயிலில் உச்சி காலம் முடித்து நடைசார்த்தும் வழக்கமில்லை; காலை முதல் இரவு வரை திறந்தே இருக்கின்றது. நாடொறும் நான்கு கால பூஜைகளே உள்ளன. அர்த்தசாமப் பூஜை இல்லையாதலின், சாயரட்சை பூஜையுடன் முடித்து, இரவு 8 மணிக்கு சுவாமி, அம்பாளை பள்ளியறையில் அப்படியே எடுத்துக் கொண்டுபோய்ச் சேர்ப்பித்து விடுகிறார்கள்.
கிருஷ்ணதேவராயர், அவருடைய மனைவி, சீதை, லட்சுமணன், ஆஞ்சநேயர் சப்தரிஷிகள், சித்திரகுப்தர், யமன், தருமர், வியாசர் முதலியோர் பிரதிஷ்டை செய்ததாக பல சிவலிங்கங்களும், ஸ்ரீ ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்ததாக பெரிய ஸ்படிகலிங்கமும் உள்ளது.இத்தலம் கிரகதோஷ நிவர்த்தித் தலமாதலால், இங்கு நவக்கிரகங்கள் இல்லை. சனிபகவான் மட்டும் உள்ளார்.
அம்பாள் – ஞானப்பூங்கோதை நின்ற திருக்கோலம்; திருவடியில் ஸ்ரீ ஆதிசங்கர பகவத் பாதரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ‘அர்த்த மேரு ‘ உள்ளது. அம்பாள் இருப்பு ஒட்டியாணத்தில் ‘கேது ‘ உருவமுள்ளது.‘கைலாசமலை ‘ – கண்ணப்பர் திருவடி தோய்ந்த இடம். இம்மலை 25 கி.மீ. பரப்புடையது.
இம்மலைக்காட்டில் பல இடங்களில் தீர்த்தங்களும், சிவலிங்கத் திருமேனிகள் உள்ள கோயில்களும், கண்ணப்பர் திருவுருவங்களும் உள்ளன.திருகாளத்தி உடையார் கோயிலில் மலைமேல் ஒரு மடம் இருந்தது. இது சசிகுல சாளுக்கிய வீரநரசிங்கத்தேவன் திருக்காளத்தி தேவனான யாதவராயரால் கட்டப்பட்டது. இதுவன்றி தியாகமேகன் மடம் ஒன்று இருந்ததாம்.
பொங்கல் விழாவில் ஒரு நாளிலும், பெருவிழாவில் ஒரு நாளிலுமாக ஆண்டில் இரு நாள்களில் சுவாமி இம்மலையை வலம் வருகிறார்; அவ்வாறு வரும்போது மக்களும் மூவாயிரம் பேருக்குக் குறையாமல் உடன் செல்வார்களாம். இவ்வலம் காலைத் தொடங்கி மறுநாள் முடிவுறுமாம்.
சுவாமியின் திருக்கல்யாண விழாவின்போது பொது மக்கள் திரளாகக் கூடித் தத்தம் திருமணங்களைச் சந்நிதியில் செய்து கொள்ளும் வழக்கம் இத்தலத்தில் உள்ளது.தட்சிண கைலாசம், அகண்டவில்வாரண்யம், பாஸ்கரக்ஷேத்திரம் என்றெல்லாம் புகழப்படும் இத்தலத்தில் பிவேசிப்பதே முக்தி எனப்படுகிறது.
இங்கு “நதி-நிதி-பர்வதம்” என்ற தொடர் வழக்கில் உள்ளது. நதி என்பது சந்திரகிரிமலையில் தோன்றிப் பாய்ந்து வருகின்ற சுவர்ணமுகி-பொன்முகலியாற்றையும், நிதி – அழியாச் செல்வமான இறைவியையும் இறைவனையும், பர்வதம் – கைலாசகிரியையும் குறிப்பனவாம்; இம்மூன்றையும் தரிசிப்பது விசேஷமெனப்படுகிறது.
பொன்முகலி உத்தரவாகினியாதலால் இங்கு அஸ்தி கரைப்பது விசேஷமாகும்.அம்பாள் கருவறையை வலம் வரும்போது வட்டமாகத் தரையில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள மூலை இடத்தில் மூன்று தலைகள் சேர்ந்திருப்பது போன்ற சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.
இவ்விடத்தினடியில் சக்தி வாய்ந்த யந்த்ரம் இருப்பதால் இங்கு அமர்ந்து ஜபம் செய்வது மிகவும் விசேஷமாகச் சொல்லப்படுகிறது
.கைலாசகிரியில் சற்று சுற்றினாற்போல் கற்களின் மீது ஏறிச் சென்றால் அங்குள்ள சிறிய கோயிலில், ஒரு கால் மடக்கி ஒரு காலூன்றியவாறு உள்ள ஒரு உருவம் உள்ளது; இவ்வுருவம் நக்கீரர் என்றும் சித்தி பெற்றவர் என்றும் சொல்கின்றனர்; ஆனால் இவ்வுருவம் பற்றி ஏதும் நிச்சயயிக்க முடியவில்லை.
கண்ணப்பர் கோயில் – இக்கோயில் மண்டபமும் சுற்றிய தாழ்வாரமும் ஆடல்வல்லான் கங்கைகொண்டானாகிய இருங்கோளன் தாயாராகிய புத்தங்கையாரால் கட்டப்பட்டது.வீரைநகர் ஆனந்தக் கூத்தர் பாடிய திருக்காளத்திப் புராணமும்; கருணைப் பிரகாசர் ஞானப் பிரகாசர் வேலப்ப தேசிகர் ஆகிய மூவரும் சேர்ந்து பாடிய தலபுராணமும் இத்தலத்திற்கு உள்ள.சோழ, விஜயநகர, காகதீய மன்னர்கள் காலத்திய கல்வெட்டுக்கள் உள்ளன; இறைவன் ‘தென்கயிலாயமுடையார் திருக்காளத்தி உடைய நாயனார் ‘ என்று கல்வெட்டுக்களில் குறிக்கப்படுகிறார்.
திறந்திருக்கும் நேரம் :
காலை முதல் இரவு வரை திறந்தே இருக்கும்
செல்லும் வழி
`சென்னையில் இருந்து சுமார் 115 km தொலைவிலும் ,திருப்பதியில் இருந்து 38 km தொலைவிலும் இவ்பதி அமைந்துள்ளது .நிறைய பேருந்து வசதிகள் உள்ளன .
This temple one of Devera hymns place,and one of Pancha pootha sthalam and one of 51 Sakthi peedam. This temple very famous for Raghu Kethu Parigara sthalam.