ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயில் – காஞ்சிபுரம்
காமாக்ஷி தாயாரை நினைக்கும்போதே நம் இதயத்தில் ஒரு வித இனம்புரியாத கணம் ,கண்களில் அவளின் அன்பினால் ஏற்படுகின்ற கண்ணீர், கேட்பவைகளெல்லாம் அள்ளித்தரும் கருணையே வடிவமானவள் , பக்தர்களுக்கு அன்பை என்றும் வாரி தருபவள் ,நம் கஷ்டங்களை போக்குகிறவள் ,அவளை சரணாகதி அடைந்துவிட்டால் போதும் நம் வாழ்வில் எப்போதும் வசந்தங்கள் நிலைத்திருக்கும் .
மூலவர் : காமாட்சி
தல விருச்சம் : செண்பக மரம்
தல தீர்த்தம் : பஞ்ச கங்கை
ஊர் : காஞ்சிபுரம்
இந்தியாவில் உள்ள 51 சக்தி பீடங்களில் இத்தலம் காமகோடி சக்தி பீடமாகும் .தேவியின் முதுகு எலும்பு விழுந்த சக்தி பீடமாகும். இக்கோவில் மகா சக்தி பீடங்களிலும் ஒன்றாகத் திகழ்கிறது.
தற்போது, அன்னை காமாட்சி திருக்கோயில் காஞ்சிபுரத்தின் மையப்பகுதியில், ஐந்து நிலைகளைக் கொண்ட அழகிய ராஜகோபுரத்துடன், கண்களையும், உள்ளத்தையும் பக்திப் பரவசமாக்கும் ஓர் அழகிய, கம்பீரமான ஆலயமாக எழுந்து நிற்கின்றது.அன்னை காமாட்சி கலைமகளையும் (சரஸ்வதி), திருமகளையும் (லட்சுமி) தன் இரு கண்களாகக் கொண்டவள். அன்னை காமாட்சி இத்திருக்கோயிலில் ஸ்தூலம், சூட்சுமம், காரணம் எனும் மூவகை வடிவிலும் அமைந்து அருள் புரிகின்றாள்.
காமகோடி காமாட்சி (ஸ்தூல வடிவம்) (மூல விக்கிரக உருவில்)
அஞ்சன காமாட்சி (அரூப லட்சுமி) (சூட்சும வடிவம்)
காமகோடி பீடம் எனப்படும் ஸ்ரீ சக்கரம் (காரண வடிவம்)காமாட்சி அன்னைக்கு மகாதேவி, திரிபுரசுந்தரி, ராஜராஜேஸ்வரி, காமேஸ்வரி, லலிதா, ஸ்ரீ சக்கர நாயகி என்னும் திருப்பெயர்களும் உண்டு.
இத்தல காமாட்சியை வேத வியாசகர் பிரதிஷ்டை செய்தார் .காமாட்சி அம்மன் இங்கே இரண்டு காலையும் மடித்து பத்மாசன யோக நிலையில் அமர்ந்திருப்பது மிகச் சிறப்பானதொரு அம்சமாகும். அவரது ஒரு கையில் கரும்பு வில்லினையும், தாமரை மற்றும் கிளியினை இன்னொரு கையிலும் கொண்டுள்ளார்..
ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு மகான் அம்பிகையைப் போற்றி ஸ்லோகங்களை இயற்றி இருக்கிறார்கள். கிருதயுகத்தில் துர்வாசரரால் 2,000 ஸ்லோகங்களாலும், திரேதாயுகத்தில் பரசுராமரால் 1,500 ஸ்லோகங்களாலும், துவாபரயுகத்தில் தௌமியாசார்யரால் 1,000 ஸ்லோகங்களாலும், கலியுகத்தில் ஆதிசங்கரரால் 500 ஸ்லோகங்களாலும் போற்றி வழிபடப் பெற்றவள் காஞ்சி காமாட்சி அம்மன்.
காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து சிவன் கோயில்களையும் மையமாகக் கொண்ட ஒரே சக்தி ஆலயம் காமாட்சி அம்மன் கோயில் ஆகும், இது போல வேறிடங்களில் அம்மனுக்கு தனி ஆலயங்கள் இல்லை.அம்பாளின் உற்சவ மூர்த்திகள் மட்டுமே எல்லா சிவாலயங்களிலும் காட்சியளிக்கின்றனர். காமாட்சி இங்கு “பரப்ரஹ்ம ஸ்வரூபினி” என்று வணங்கப்படுகிறார். ஆரம்பத்தில் மிகவும் உக்கிரமாக இருந்ததால், ‘உக்ர ஸ்வரூபினி’ என அழைக்கப்பட்டார். . ஆதி சங்கரரால், எட்டாம் நூற்றாண்டில், இக்கோயிலில் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
காஞ்சியில் காமாட்சி ஒன்பது வயது சிறுமியாகத் தோன்றி, பண்டாசுரன் என்னும் அசுரனை வதம் செய்தாள். பண்டாசுர வதம் முடிந்ததும், அம்பிகை ஆகாயத்தில் மறைந்திருந்தாள். பண்டாசுரனை வதம் செய்தது யார் என்று தெரியாமல், தேவர்கள் அனைவரும் திகைத்து நின்ற வேளையில், காயத்ரி மந்திரத்தின் 24 அட்சரங்களை 24 தூண்களாகவும், நான்கு வேதங்களை நான்கு சுவர்களாகவும் கொண்டு ஒரு மண்டபம் எழுப்பும்படி கூறியதுடன், `அந்த இடத்தில் சுமங்கலிப் பெண், கன்றுடன் கூடிய பசு, கண்ணாடி, தீபம் ஆகியவை இருக்கட்டும். அப்போது நான் யார் என்று காட்டுகிறேன்’ என்றும் அசரீரியாக தேவியின் குரல் ஒலித்தது. தேவர்களும் அப்படியே செய்ய, அன்னை சிறுமியாக அவர்களுக்குக் காட்சி தந்தாள். அன்னையின் உத்தரவின்படி கதவுகளை மூடிவிட்டு, வெளியில் இருந்தபடியே தேவர்கள் அம்பிகையை ஸ்தோத்திரம் செய்தனர். மறுநாள் காலையில் கதவுகளைத் திறந்தபோது, அன்னை காமாட்சியாக அவர்களுக்கு தரிசனம் தந்தாள். இப்படி அன்னை காமாட்சியாக காட்சி தந்த நாள், சுவயம்புவ மன்வந்த்ரம், பங்குனி மாதம், கிருஷ்ணபட்ச, பிரதமை திதியுடன் கூடிய பூரம் நட்சத்திரம் ஆகும்.
மூல மூர்த்தியான காமகோடி காமாட்சியின் இடது பக்கத்தில் வட திசை நோக்கியவாறு அரூப லட்சுமியாகிய அஞ்சன காமாட்சி காட்சியளிக்கின்றாள். இது அன்னையின் சூட்சும வடிவமாகும். இந்த அன்னைக்கு வடிவம் கிடையாது.ஆனால், இவளது மேனியில் தடவப்படும் அர்ச்சனை குங்குமத்தின் மகிமையால் இவள் ஒரு அழகிய வடிவத்தைப் பெறுகின்றாள். இந்த அஞ்சன காமாட்சி தவம் புரியும் கோலத்தில் காட்சியளிக்கின்றாள்.அம்பிகையின் அருட்பிரசாதமாக நமக்கு வழங்கும் குங்குமப் பிரசாதத்தை அப்படியே நெற்றியில் அணிந்துகொள்ளாமல், கருவறைக்கு வெளியில் அம்பிகையின் இடப்புறத்தில் உள்ள மாடத்தில் காட்சி தரும் திருவடிகளில் வைத்து எடுத்த பிறகே அணிந்துகொள்ள வேண்டும்.
காமாட்சி அம்மன் ஆலயத்தில் அரூபமாக லட்சுமி அருள்வதுடன், அன்னபூரணியும் சரஸ்வதியும் சந்நிதிகொண்டிருக்கின்றனர். காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்றால், அனைத்து அம்மன் ஆலயங்களையும் தரிசித்த பலன் கிடைக்கும்.
இக்கோயிலில் தாயாருக்கு பின்புறம் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான கல்வ பெருமாள் காட்சிதருகிறார் .
காஞ்சி காமாட்சி அம்மனுக்கு ஆதிசங்கரரின் சௌந்தர்ய லஹரி, மூக கவியின் மூக பஞ்சசதீ, துர்வாசரின் ஆர்யா த்விசதி ஆகிய ஸ்தோத்திரங்கள் மிகவும் பிரசித்திபெற்றவை.
காமாட்சி அம்மனை வணங்கினால் கடன் தொல்லை இருந்து விடுதலை ,குழந்தை வரம் , வேலைவாய்ப்பு ஆகியவை கிட்டும் .
காஞ்சி மடத்தோடு மிகுந்த தொடர்புடைய கோயில். மகா பெரியவா காமாட்சி அம்மனை பற்றி நிறைய தன் அருளுரைகளில் கூறியுள்ளார் .தசரதர் ,துண்டிரமஹராஜா, கிருஷ்ணதேவராஜர்,பல்லவர்கள் ,கரிகாலச்சோழர் ஆகியவர்கள் தாயாரை தரிசனம் செய்துள்ளார்கள்.
Photos:
https://alayamtrails.blogspot.com/2021/06/sri-kamakshi-amman-temple-kanchipuram.html
திறந்திருக்கும் நேரம் :
காலை 05 .30 – 12 .15 , மாலை 04 .00 -08 .15 ( வெள்ளிக்கிழமை இரவு 9 .30 வரை பௌர்ணமி அன்று இரவு 10 .30 வரை )
செல்லும் வழி:
சென்னையில் இருந்து சுமார் 75 km தொலைவில் உள்ளது . நகரின் மையத்தில் கோயில் உள்ளது . கோயில்கள் நிறைந்த நகரம் என்பதால் திவ்ய தேசங்கள் , தேவார பாடல் தளங்கள் என நிறைய கோயில்கள் மிக அருகிலேயே உள்ளது .
Location Map: