ஸ்ரீ குறுங்காலீஸ்வரர் கோவில் – கோயம்பேடு
இறைவன் : குறுங்காலீஸ்வரர்
இறைவி : தர்மசம்வர்த்தினி
தல தீர்த்தம் : குசலவ தீர்த்தம்
ஊர் : கோயம்பேடு
மாவட்டம் : சென்னை , தமிழ்நாடு
சென்னையில் அமைந்துள்ள பழைய திருத்தலங்களில் இக்கோயிலும் ஒன்று ஆகும் . ராமாயணத்தோடு தொடர்புடைய கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக இக்கோயிலின் அருகிலேயே பெருமாள் கோயிலும் உள்ளது .வால்மீகி முனிவர், பகவான் ராமனின் மகன்கள் லவன், குசன் ஆகியோர் வழிபட்ட புண்ணியஸ்தலமாக இந்த கோவில் விளங்கி வருகிறது.
சோழ மன்னன் ஒருவன், இவ்வழியே தேரில் சென்றபோது சக்கரம் லிங்கம் மீது ஏறி, ரத்தம் வெளிப்பட்டது. பயந்த மன்னன் பூமிக்கடியில் லிங்கம் இருந்ததைக் கண்டு, கோயில் எழுப்பினான். தேர்ச்சக்கரம் ஏறியதால் இந்த லிங்கத்தின் பாணம் பாதி புதைந்துவிட்டது. எனவே இங்கு சிவன் குறுகியவராக காட்சி தருகிறார். இதனால் சுவாமிக்கு “குறுங்காலீஸ்வரர்’ என்ற பெயர் உண்டானது.
இங்கு தாயார் வடக்கு நோக்கி காட்சிதருகிறார் இவ்வாறு வடக்கு நோக்கி தாயார் காட்சி அளிக்கும் தலங்களை பரிகார தலம் என்று அழைப்பார்கள் . அவ்வாறு இத்தலமும் ஒரு பரிகார தலமாகும் .
ராஜகோபுரத்திற்கு முன் ஒரு 16 கால் மண்டபம் உள்ளது . இவ் மண்டபத்தில் சரபேஸ்வரர் ஒரு தூணில் காட்சி தருகிறார் , அவருக்கு ஒவ்வொரு ஞாயிற்று கிழமை அன்றும் ராகு காலத்தில் சிறப்பான பூஜைகள் நடைபெறுகிறது அன்றைய தினம் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது .இத்தூணில் நிறைய ஸ்வாமிகளின் புடை சிற்பங்கள் மிக நேர்த்தியாக வடித்துள்ளார்கள்.
ராஜகோபுரத்தை தாண்டி நாம் உள்ளே சென்றால் கொடிமரம் மற்றும் நந்தி பெருமானை தரிசிக்கலாம் , அர்த்தமண்டபத்தில் விநாயகர் பெருமான் அருள்பாலிக்கிறார் .கோயிலின் பிரதான அர்த்தமண்டபம் 40 தூண்களுடன் பிரமாண்டமாக அமைந்துள்ளது. அதில்தான் குசலவபுரிஸ்வரர் என்கிற குறுங்காலீஸ்வரர் சுவாமி சன்னதியும், அறம் வளர்த்த நாயகி எனப்படும் தர்மசம்வர்த்தினி அம்பாள் சன்னதியும் அடுத்தடுத்து இடம் பெற்றுள்ளன.
தெட்சிணாமூர்த்தி, சுவாமி சன்னதியின் பின்புறத்தில் லிங்கோத்பவரின் இடத்தில் இருக்கிறார். இத்தகைய அமைப்பை காண்பது அபூர்வம். கோயிலுக்கு முன் பெரிய 16 கால் மண்டபம் உள்ளது. அதன் தூண்களில் ராமாயணக் காட்சிகள் விளக்கும் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. ஒரு தூணில் ஸ்ரீசரபேஸ்வரர் காணப்படுகிறார். ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் இவருக்கு பூஜை நடக்கிறது. இவர் அருகில் அணையா தீபம் இருக்கிறது.
அம்பாள் தன் இடது காலை முன் வைத்த வண்ணமாக காட்சியளிக்கிறார்.அம்மன் சன்னதி தூணில் ஜூகுணு மஹரிஷி திருவுருவம் இருப்பது சிறப்பு.
நூதன பஞ்சவர்ண நவகிரக சன்னதி ஒன்று சதுர மேடையில் தாமரையை ஓதவடியில் நவகிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது . தாமரை நடுவில் சூரியன் தன் மனைவி உஷா மற்றும் ப்ரதுஷ்டா உடன் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் நிற்கிறார் . தேரோட்டியான அருணன் ஏழு குதிரைகளை பிடித்தபடி சாரதியாய் இருக்கிறரர் .
லவன் ,குசன் பிறந்து விளையாடிய இடம் மற்றும் ராமன் சீதைக்காக அஸ்வமேதை யாகம் நடத்திய குதிரையை லவன் மற்றும் குசன் இங்குதான் கட்டி போட்டதாகவும் அதை மீட்க ராமன் அவர்களிடம் போரிட்டதாகவும் வால்மீகி அவர்கள் அதை தடுத்து இவர் தான் உங்களுடைய தந்தை என்று லவன் ,குசேலனிடம் சொன்னார் ஆதலால் பித்ரு தோஷம் போக்க ராமர் இவ் சிவனை வணங்கி பித்ரு தோஷம் போக்கிக்கொண்டதாக சொல்லப்படுகிறது.கோ என்ற அரசன் ராமன் குதிரைகளை அயம் என்ற இரும்பு வேலியில் கடியதுதான் கோயம்பேடு என்று அழைக்கப்படுகிறது பேடு என்றால் வேலி என்று பொருள் .
இத்தலத்தை ‘ஆதிபிரதோஷத்தலம்” என்கிறார்கள். ஒரு பிரதோஷ தினத்தில் குறுங்காலீஸ்வரரைத் தரிசித்தால் ஆயிரம் பிரதோஷ தரிசனம் செய்த பலனும், ஒரு சனி பிரதோஷ தரிசனம் செய்தால் கோடி பிரதோஷ தரிசன பலனும் கிடைக்கும் என்பது ஐதீகம் என்கிறார்கள்.
Photos:
https://alayamtrails.blogspot.com/2021/06/sri-kurungaleeswarar-temple-koyambedu.html
திறந்திருக்கும் நேரம் :
காலை 5.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
செல்லும் வழி:
கோயம்பேடு பேருந்து நிலையத்தின் அருகில் பூந்தமல்லி மற்றும் திருமங்கலம் பிரியும் பாலத்தின் கிழ் இடதுபுறம் சென்றால் இக்கோயிலை அடையலாம்.