ஸ்ரீ குற்றாலநாதர் கோயில் – குற்றாலம்
இறைவன் : குற்றாலநாதர்
இறைவி : குழல்வாய்மொழி,பராசக்தி
தலவிருச்சம் : குறும்பலா
தலதீர்த்தம் : சிவகங்கை, வட அருவி, சித்ரா நதி.
புராண பெயர் : திரிகூடமலை
ஊர் : குற்றாலம்
மாவட்டம் : திருநெல்வேலி ,தமிழ்நாடு
- தேவரா பாடல் பெற்ற பாண்டியநாட்டு தேவார தலங்களில் இத்தலம் 13 வது தலமாகும் . தேவார பாடல் பெற்ற 274 தேவார சிவத்தலங்களில் இத்தலம் 257 வது தலமாகும் .
- சிவனின் பஞ்ச சபைகளில் இத்தலம் சித்திர சபையாகும் . 51 சக்தி பீடங்களில் இத்தலம் தரணிபீடம், யோகபீடம், மற்றும் பராசக்தி பீடம் என்று அழைக்கப்படுகிறது .
- அருவிகளால் புகழ் பெற்ற நகரம் திருக்குற்றால நகர்.மலையின் மேல் 100 அடி உயரத்திலிருந்து விழும் முதல் அருவி, தேனருவி ஆகும். அதற்கடுத்த நிலையில் 30 அடி உயரத்திலிருந்து விழுவதை செண்பகாதேவி அருவி என்பார்கள். அடுத்தபடியாக 288 அடி உயரத்தில் விழும் அருவி பொங்குமாங்கடல் என்று அழைக்கப்பெறும்.தரை மீது விழும் இவ்வருவியில் தான் மக்கள் புனித நீராடுவார்கள். கோயிலை ஒட்டி உள்ள அருவி இது, வட அருவி என்று பெயர்கொண்ட இந்த அருவியின் நீர்தான் சித்ரா நதியாக வணங்கப் பெறுகிறது.பழைய குற்றால அருவி என்று ஓர் உயரமான அருவி உள்ளது. ஐந்து பிரிவுகளாக விழும் ஐந்தருவியும் குற்றாலத்திற்குப் பெருமை தருகிறது,இவ்வாறு திரும்பிய புறங்கள் எல்லாம் அருவிகளில் நிரம்பியுள்ளது .
- குற்றாலநாதர் கோயில் மாமன்னன் ராஜராஜனால் கட்டப்பட்டது .பாண்டிய மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், குழல்வாய் மொழி அம்மனுக்குத் தனிக்கோயில், பிள்ளையன் கட்டளை மண்டபம் ஆகியவை கட்டப்பட்டன.சொக்கம்பட்டி மன்னர்களான பெரிய செம்புலி சின்னணஞ்சாத் தேவர், அவரது தம்பி சின்னப்பட்டம் ராஜகோபால தேவர் ஆகியோரால் திரிகூட மண்டபம், பசுப்பிறை, தட்டொடி, வைத்தியப்ப விலாசம், குழல்வாய் மொழி அம்மன் கோயில் முகப்பு மண்டபம், சங்கு வீதி மற்றும் வசந்த வீதியில் கல்பாவுதல் ஆகிய திருப்பணிகள் நடத்தப் பெற்றன. 1925ம் ஆண்டில் குழல்வாய் மொழி அம்மன் கோயிலை நகரத்தார் புதுப்பித்தனர்.
- நான்கு வேதங்களுக்கு எடுத்துக்காட்டாக நான்கு வாயில்களுடன் சங்கு அமைப்பில் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது .இது வேறு காணமுடியாத சிறப்பு அம்சம் ஆகும் .
- திரிகூட ராசப்பக் கவிராயர்அவர்கள் இயற்றிய, புகழ்மிக்க குற்றாலக் குறவஞ்சி,திருக்குற்றால தல புராணம், திருக்குற்றாலநாதர் வீதியுலா, திருக்குற்றாலக் கோவை, திருக்குற்றால யமக அந்தாதி முதலான பல நூல்களை இயற்றியுள்ளார்.
- சித்ரசபை : அமிர்தம் வேண்டிப் பாற்கடலைக் கடைந்தபோது, கயிராகப் பயன்பட்ட வாசுகி எனும் பாம்பின் தியாகத்தை மெச்சிய சிவபெருமான், ‘‘என்ன வரம் வேண்டும்?” என்று கேட்டார். ‘‘தங்களின் அற்புதத் தாண்டவத்தைக் காண வேண்டும். அதுவே போதுமானது” என்றது வாசுகி. ‘‘அப்படியானால் திருக்குற்றாலம் சென்று தவம் செய்” என்றார் இறைவன்.பொதிகைமலைச் சாரலில், சித்ரா நதிக்கரையில் வாசுகி தவம்செய்தது . அத்தவத்தினால் மூவுலகிலும் வெப்பம் பரவ, தேவர்கள் ஈசனிடம் முறையிட்டனர். அனைவரையும் திருக்குற்றாலத்திற்கு வரச் சொல்லி, சித்திர சபையில் இறைவன் தாண்டவமாடினார்.அவ் தாண்டவத்தை கண்டு அனைவரும் மெய் சிலிர்த்தனர்.பிரம்மதேவன் தாண்டவ கோலத்தைச் சித்திரமாக வரைந்தார். சித்திர சபை உருவாயிற்று.தவக்கோல வாசுகி, கோயில் சுற்றுப்பிராகாரத்தில் காணப்படுகிறது. தனியே பூஜைகளும் நடக்கின்றன.சித்திர சபையில் சிவனாரின் நடனமும், தேவர்கள் அதைக் கண்டுகளிக்கும் காட்சியும், மூலிகைகளால் அற்புதமாக வரையப் பெற்றிருக்கின்றன.சித்திர சபையில் நடைபெறும் தாண்டவ தீபாராதனை காண்பதற்கு அரிய காட்சியாகும்.நடராஜப் பெருமானின் ஐந்து சபைகளில் ஒன்றான சித்திர சபை இங்கேதான் உள்ளது. குற்றாலநாதரின் கோயிலிருந்து 1 கி.மீ தொலைவாக்கில் தனிக்கோயிலாக உள்ளது. இச்சித்திர சபையின் எதிரே தெப்பகுளம் அமைந்துள்ளது. சுற்றிலும் மதில்சுவருடன், மரத்தாலான பிரமிக்க வைக்கும் வேலைப்பாடுகளுடன் அழகு செய்கிறது.
- திருக்குற்றாலம் முதலில் விஷ்ணுத் தலமாக இருந்தது. அகத்தியமாமுனிவரால் பின்னா் சிவத்தலமாக மாற்றப்பட்டது. சுவாமிக்கு வலப்புறம் இருந்த ஸ்ரீதேவியை குழல்வாய்மொழி அம்மையாகவும், பூதேவியை பராசக்தியாகவும் மாற்றினாா் என்பாா்கள். இங்கு பராசக்தி, ஸ்ரீசக்ரமேரு அமைப்பிலுள்ள பீடத்தின் வடிவிலேயே அருளுகிறாள் .
- பூமாதேவியாக இருந்தவளே இந்த அம்பிகை என்பதால் பூமியெனும் பொருளிலேயே தரணி பீடம் எனும் பெயா் பெற்று விளங்குகின்றது. ஒன்பது அம்பிகையரின் அம்சமாக இப்பீடம் உள்ளது. எனவே பெளா்ணமி இரவில் நவசக்தி பூஜை நடத்தப்படுகிறது.பராசக்தி உக்கிர ரூபியாக இருப்பதாலேயே இவளுக்கு எதிரேயே காமகோடீஸ்வரா் எனும் திருப்பெயரில் ஈசன் லிங்கமாக பிரதிஷ்டை செய்துள்ளார்கள்.
- தலவிருச்சமான குறும்பலா வருடம் முழுவதும், பலா காய்த்துக் கொண்டேயிருக்கிறது. இப்பலாக்களை யாரும் பறிப்பதில்லை. காரணம், பலாவின் உள் சுளைகள் அனைத்தும் லிங்க வடிவு கொண்டவை.
- வரலாறு : இமயமலையில் பார்வதி திருமணம் நடந்த நாளில், மூன்று உலகங்களும் அங்கே கூடிவிட்டதால் தென்புறம் உயர்ந்து விட்டது. இதைச் சமன் செய்ய அகத்திய முனிவரைத் தென்புலத்திற்கு அனுப்பினார் இறைவன். இந்தப் பகுதியில் சிவபெருமானை வழிபடுவதற்காக சிவ தலம் ஏதாவது இருக்கிறதா என்று தேடினார். ஆனால் அருகில் எந்த சிவத்தலமும் இல்லை. எனவே சிவ வழிபாடு எப்படிச் செய்வது என்று வருத்தம் கொண்டார் அகத்தியர். இந்த நிலையில் திரிகூட மலையில் பெருமாள் கோவில் ஒன்று இருந்தது. பெருமாளை தரிசிக்க எண்ணிய அகத்தியர் கோவிலுக்குள் சென்றார் .திருவெண்ணீறும், உருத்திராட்சமும் தரித்த அகத்தியரை உள்ளே விட மறுத்தனர் துவாரபாலகர்கள். இதனால் அகத்திய மாமுனிவர் அருகில் உள்ள இலஞ்சிக் குமரனை சென்று வணங்கினார். அவருக்கு காட்சி கொடுத்த முருகர் அவரிடம் வைணவர் வேடம் பூண்டு உள்ளே சென்று வணங்க சொன்னார் .முருகர் கூறியபடி துளசி மாலை அணிந்து நாமம் இட்டுக்கொண்டு கோயிலுக்குள் சென்றார் இவரை வைணவர் என்று எண்ணி உள்ளே புக அனுமதித்து விட்டனர். பூஜைக்கு வேண்டிய திரவியங்களை எடுத்து வருமாறு வேதியர்களை வெளியே அனுப்பி விட்டார். திருமாலை வணங்கி விசுவரூபம் எடுத்து, ‘‘குறு குறு குற்றால நாதரே” என்று திருமாலின் தலையில் தன் கையை வைத்து குற்றாலநாதராக ஆக்கினார் என்று தலபுராணம் கூறுகிறது.
- வழிபாடு முடிந்ததும் கருவறைக் கதவைத் திறந்து வெளியேறினார். அப்போது கருவறையில் பெருமாளைக் காணவில்லை. சிவலிங்கம் இருப்பதைக் கண்டு அங்கிருந்தவர்கள் கோபம் கொண்டனர். அகத்தியரை வசை பாடினர்; தாக்கவும் முயன்றனர். அதற்குள் அகத்தியர் ஒரு தர்ப்பைப் புல்லை மந்திரித்து விட்டார். அது அவர்களைத் தாக்கியது. இதனால் அவர்கள் அகத்தியரிடம் தங்களை மன்னிக்குமாறு வேண்டினர்.அவர்களிடம் அகத்தியர், ‘மகாவிஷ்ணுவை சங்க வீதியின் தென்மேற்குப் பக்கத்தில் வைத்து வழிபடுங்கள்’ என்று கூறினார். அந்த விஷ்ணுவே இன்று, ‘நன்னகரப் பெருமாள்’ என்று அழைக்கப்படுகிறார்.
- நோய் தீர்க்கும் தைலம் : அகத்தியர் தலையைத் தொட்டு அழுத்தியதால் ஈசனுக்கு அவருடைய கை விரல்கள் பதிந்துவிட்டது .அவைகளை இன்றும் லிங்கத்தின் மீது காணலாம் ,அதனால் ஈசனுக்கு தலைவலி நீங்க இங்கு தினமும் காலையில் தைல அபிஷேகம் நடைபெறுகிறது. பசும் பால், இளநீர், சந்தனம் மற்றும் 42 வகையான மூலிகைகளை 90 நாட்கள் வேகவைத்து, அந்தச் சாற்றில் நல்லெண்ணெய் சேர்த்து தைலம் தயாரிக்கிறார்கள். இந்த அபிஷேக தைலம் பக்தர்களுக்கு பிரசாதமாகவும் வழங்கப்படுகிறது. வாதநோய், வாத வலி, உடல் வலி, முதுகு வலி, தீராத தலைவலி, வயிற்று வலி, கண் வலி உள்ளவர்கள், இதனை தடவி வந்தால் சுகம் பெறலாம்.
- சுக்குக் குடிநீர் நைவேத்தியம் : எப்போதும் அடிக்கும் குளிர்ந்த காற்றும் அருவியின் சாரலும் இறைவனுக்கு குளிர்ச்சி கொடுத்து சளி ,குளிர் ஜுரம் போன்றவைகள் வராமல் இருக்க தினமும் அர்த்த ஜாம பூஜையில் குற்றால நாதருக்கு ‘குடுனி நைவேத்தியம்’ செய்யப்படுகிறது. அதாவது சுக்கு, மிளகு, கடுக்காய் மற்றும் சில மூலிகைகளைக் கொண்டு கசாயம் தயாரித்து நைவேத்தியம் செய்கிறார்கள். அர்த்த ஜாம பூஜைக்கு பிறகு வழங்கப்படும் இந்த கசாயத்தை வாங்கிக் குடித்தால் நீரிழிவு, புற்று நோய், அல்சர், சளி, இருமல், வயிறு சம்பந்தமான நோய்கள் குணமாகின்றன என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
திறந்திருக்கும் நேரம் :
காலை 6 .00 -12 .00 வரை மாலை 4 .30 -8 .00 மணி வரை
தொலைபேசி எண்: 9488374077 , 04633 /283318
செல்லும் வழி:
திருநெல்வேலியில் இருந்து தென்காசி சென்று அங்கிருந்து சுமார் 5 km தொலைவில் உள்ளது. தென்காசி கோயில் மற்றும் இலஞ்சி முருகன் கோயில் ஆகியவற்றை தரிசிக்கலாம் மற்றும் குற்றாலத்தில் ஆனந்தமாக ஒரு குளியலையும் போடலாம் .