Sri Kuzhanthai Velappar Temple – Poombarai

குழந்தை வேலப்பர் கோயில் – பூம்பாறை

Kuzhanthai velappar temple- poombarai

மேற்கு மலை தொடரில் இயற்கை கொஞ்சும் பசுமையான வனப்பகுதியும் எப்போதும் குளிராக உள்ள கொடைக்கானலுக்கு அருகில் 18 km தொலைவில் உள்ள பூம்பாறை கிராமத்தில் இக்கோயில் அமைந்துள்ளது .

இவ்வூரானது இவ் கொடைக்கானல் பகுதியில்  அமைந்துள்ள பழமையான ஊராகும் . இவ்வூரை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும் , பல திரைப்படங்கள் ,நாடகங்கள் இங்கு எடுக்கப்படுகின்றன . இவ்வூரில் விளையும் மலை பூண்டு மிகவும் தனித்துவம் பெற்றது , இவ் பூண்டானது இந்திய புவிசார் பெற்றதாகும் . கோயிலின் வாசலிலேயே கிடைக்கும் . வாருங்கள் இப்போது கோயிலை பற்றி பாப்போம் …

ஊரின் நடுவில் இக்கோயிலானது காணப்படுகிறது . அருணகிரிநாதரால் பாடல் பெற்ற திருப்புகழ் தலமாகும் , பழனிக்கு அருகில் உள்ள தலம்.போகர் மாமுனிவரால் செய்யப்பட்ட நவபாஷான  சிலைகளில் ஒன்று இங்கு உள்ளதாக நம்பப்படுகிறது . 3000 வருடங்கள் பழமையான கோயில் என்று சொல்லப்படுகிறது , பழனி கோயிலின் உபகோயிலாக இக்கோயில் இருக்கிறது . பழனி தண்டபாணி ஸ்வாமியின் திருவருள் தோற்றமாக அமைந்திருப்பது சிறப்பு .

நவபாஷான முருகன் :

புராண காலத்தில் பூம்பாறைக்கு அருகில் உள்ள அடர்ந்த வனப்பகுதியான யானைமுட்டுக்கு வந்த சித்தர் போகர் நவபாஷாணம் மற்றும் மூலிகைகளால் ஆன 3 முருகன் சிலைகளை வடிவமைத்தார். முதல் சிலையை பழநியில் உள்ள மலைக்குன்றில் பிரதிஷ்டை செய்தார். 2வது சிலையை பூம்பாறை பகுதியில் பிரதிஷ்டை செய்தார். 3வது சிலையை பூம்பாறை அருகே மதிகெட்டான் சோலை என அழைக்கப்படும் அடர்ந்த வனப்பகுதியில் பிரதிஷ்டை செய்தார் என்றும் இன்றுவரை எல்லோராலும் கூறப்படுகிறது . ஆனால் இவற்றுக்கு இன்றுவரை கல்வெட்டு ஆதாரங்கள் கிடைக்கவில்லை , இவை அனைத்தும் வாய் மொழி செய்தியாகவே இன்றளவும் மக்களுக்குள் தெரிவிக்கப்படுகிறது . பழநி மலை மீதுள்ள முருகன் சிலையை தண்டம் கொண்டு வடிவமைத்ததால் அதற்கு தண்டபாணி என பெயரிட்டார் என்று சொல்லப்படுகிறது .

கோயில் அமைப்பு :

கோயிலுக்கு நுழைவு வாயிலானது ஒரு வளைவு அமைத்துள்ளார்கள். அதன் வழியே உள்ளே சென்றால் மிகவும் விசாலமான பகுதி உள்ளது , இங்கே நாம் நமது வாகனங்களை நிறுத்திக்கொள்ளலாம் .  கருவறை கோபுரமானது திராவிட கட்டிடக்கலையை எடுத்துரைக்கிறது. கருவறை முன் கொடிக்கம்பம் , பலிபீடம் மற்றும் முருகனின் வாகனமான மயிலின் சிலை உள்ளது .

இப்போது நாம் உள்ளே சென்றால் முன் மண்டபத்தை அடையலாம் பின்பு கருவரையுடன் கூடிய முக மண்டபத்தை அடைந்தால் அங்கிருந்து அழகன் குழந்தை வேலப்பரை தரிசனம் செய்யலாம் .

இறைவன் ராஜஅலங்காரத்துடன் காட்சி தருகிறார் , இவருக்கு இங்கு செய்யும் அபிஷேகம் மிகவும் சிறப்பு வாய்ந்தது , கருணையே வடிவான , கேட்பவர்களுக்கு கேக்கும் வரங்களை அள்ளி தருபவராக, நமக்கு குழந்தையாக, அண்ணனாக, தம்பியாக ,தந்தையாக ,குருவாக என்றும் காட்சி தரும் வேலனை பார்த்து தரிசித்து திரும்ப மனம் இல்லாமல் மனம் வருந்தினேன் .

கோயிலின் கோஷ்ட சுவர்களில் நிறைய சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன . நடராஜர், தக்ஷணாமூர்த்தி  சிற்பம் கோஷ்டத்தில் உள்ளது .

இவ் கோயிலில் வளாகத்தில் விநாயகர் ,சிவன் ,பைரவர் ,நவகிரகங்கள் ,இடும்பன் , நாகர் சன்னதிகள் உள்ளன .  முருகனுக்கு அருகில் அருணகிரிநாதருக்கு தனி சன்னதி உள்ளது .

இக்கோயிலானது சேரர்கள் கட்டியதாக இங்குள்ள கல்வெட்டின் மூலம் அறியப்படுகிறது.

கோயில் வரலாறு :

மகாபாரத புராணத்தில் பஞ்ச பாண்டவர்கள் தங்களது வனவாசத்தின் ஒரு பகுதியாக  பூம்பாறைக்கு வந்தனர். அங்கு போகரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட குருமூப்பு என அழைக்கப்பட்ட முருகன் சிலையை அவர்கள் வழிபட்டதாக கூறப்படுகிறது. பிற்காலத்தில் இப்பகுதியை ஆண்ட சேர மன்னன், குருமூப்பு முருகன் சிலையை சுற்றிலும் ஒரு மண்டபத்தை எழுப்பினார். சேரன் ஆட்சியின் போது இந்த கோயிலுக்கு வந்த முருகபக்தர் அருணகிரிநாதர் இந்த கோயிலில் தங்கி குருமூப்பு முருகனை வணங்கி வழிபட்டார். ஒருநாள் பகல் முழுவதும் வழிபட்ட அசதியில், இரவில் அவர் நன்கு அயர்ந்து தூங்கினார்.

நள்ளிரவில் அங்கு வந்த ஒரு ராட்சசி அவரை கொல்ல முயற்சித்தாள். இதனை அறிந்த முருகன் குழந்தை வடிவில் வந்து அருணகிரிநாதரை காத்தார் என்பது வரலாறு. மறுநாள் இந்த நிகழ்வுகளை தனது ஞானதிருஷ்டியால் அறிந்த அருணகிரிநாதர் முருகனை மனமுருக வழிபட்டார். இந்த நிகழ்வுக்கு பின்னர் இந்த கோயில் குழந்தை வேலப்பர் கோயில் என அழைக்கப்பட்டது. இதனை நினைவுபடுத்தும் வகையில் கோயில் வளாகத்தில் அருணகிரிநாதருக்கு சிலை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

குழந்தை  வரம் வேண்டி இங்கு எல்லோரும் பிராத்தனை செய்கிறார்கள்

விழாக்கள் :

தாய் திருநாளின் மறுநாள் மகம் நட்சத்திரத்தில் கொடியேற்றம் ,அடுத்து திருவீதி உலா , 10 ம் நாள் அருள்மிகு முருக கடவுளை பழனியம்பதிக்கு வழியனுப்பும் விழா நடைபெறுகிறது .

மலை பகுதியில் அமைந்துள்ள திருக்கோயில்களுள் திருத்தேர் உலா நடைபெறுவது இப்பூம்பாறையில் மட்டுமாம் . தேரின் முன் புறம் மற்றும் பின்புறம் வடம் பிடித்து திருத்தேர் இயக்கப்படுகிறது . இவ் இருவடதேர் இழுக்கும்போது முக அடியார்கள் வரிசையாக நின்று தேரின் அச்சின் மீது 25000 தேங்காய்களை உடைக்கும் வழிபாடு காண்போரை கொள்ளை கொள்ளும் . 

More Photos:

https://alayamtrails.blogspot.com/2023/05/sri-kuzhanthai-velappar-temple-poombarai.html

திறந்திருக்கும் நேரம் :

காலை 6 .00 மணி முதல் இரவு 7 .00 மணி வரை திறந்திருக்கும்

contact Number : 04545 -442266

செல்லும் வழி :

கொடைக்கானலில் இருந்து சுமார் 18 km  தொலைவில் இந்த பூபாறை கிராமம் உள்ளது . கொடைக்கானல் சுற்றுலா செல்பவர்கள் பூம்பாறை  மற்றும் மன்னவனுர் சுற்றுலா செல்வது மிகவும் புதுமையாக இருக்கும் .

Location

திருச்சிற்றம்பலம்

Leave a Reply