ஸ்ரீ மதுவனேசுவரர் கோயில் – நன்னிலம்
இறைவன் : மதுவனேசுவரர், தேவாரண்யேசுவரர், பிரகாச நாதர்,பிரஹதீஸ்வரர்
இறைவி : மதுவனேசுவரி, தேவகாந்தார நாயகி, பிரகாச நாயகி,பிரஹதீஸ்வரி
தல விருச்சம் : வில்வம், கோங்கு, வேங்கை, மாதவி, சண்பகம்
தல தீர்த்தம் : பிரம தீர்த்தம், சூல தீர்த்தம்,
ஊர் : நன்னிலம்
மாவட்டம் : திருவாரூர் , தமிழ்நாடு
பாடியவர்கள் : சுந்தரர்
வழிபட்டோர் : அகத்தியர்,குபேரன், இந்திரன், யமன், வருணன்
தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் 71 வது தலமாகும்.
தேவார பாடல் பெற்ற 276 சிவ தலங்களில் 134 வது தலமாகும் .
கோச்செங்கட் சோழன் தனது முன்பிறவியில் யானையினால் ஏற்பட்ட துன்பம் காரனமாக, யானை ஏற முடியாத மாடக் கோவில்கள் 70 கட்டினான் அவ்வாறு அவன் இந்த கோயிலையும் யானை எற முடியாத மாட கோயிலாக கட்டியுள்ளான் . சுந்தரர் தனது பதிகத்தில் இக்கோவிலை பெருங்கோயில் என்று அடைமொழி கொடுத்து சிறப்பித்துப் பாடியுள்ளார். தனது பதிகத்தின் கடைசி பாடலில் இக்கோவில் கோச்செங்கட் சோழனால் கட்டப்பட்டது எனபதையும் குறிப்பிட்டுள்ளார்.
தேனீக்கள் வணங்கிய இடம் :
விருத்திராசுரனின் என்ற அசுரனின் துன்பம் தாளாமல் தேவர்கள் தேனீக்களாய் மாறியிருந்து வழிபட்ட தலமாதலின் மதுவனம் என்றும் பெயர் பெற்றது. ஈசனின் சிருஷ்டிகளில் அவனை வழிபட ஈ, எறும்பு, தேனீ, பாம்பு என்று எல்லா ஜீவன் களுக்கும் உரிமையுண்டு என்று காட்டும் தலங்களில் இதுவும் ஒன்று. இக்கோயிலை கட்டிய கோச்செங்கட்சோழன், முந்திய பிறவியில் சிலந்தியாக இருந்ததும், தேனீக்கள் பூஜித்த மதுவனேஸ் வரருக்கு அவன் ஆலயம் எடுத்ததும், பூச்சியினத்தின் பக்தி ஒற்றுமைக்குள் ஒளிரும் அற்புதம். ‘கட்டுமலைக் கோயில்’ தொழில் நுணுக்கத்திலேயே இந்த ஆலயமும் அமைந்துள்ளது.
கோயிலின் கர்ப்பகிரகத்திலும் , கோயிலின் சுற்றுப்பிரகாரத்தில் உள்ள மறைவிடங்களில் யாருக்கும் தீங்கு இழைக்காமல் இன்றும் தேனீக்கள் வாழ்கின்றன .
கோயில் அமைப்பு :
முடிகொண்டான் ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள இத்திருக்கோவில் 270 அடி நீளமும், 135 அடி அகலமும் கொண்டது. கோவிலின் இராஜகோபுரம் 2 நிலைகளைக் கொண்டது. கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்து வெளிப் பிரகாரத்தை அடையலாம். நேர் எதிரில் பிரமன் வழிபட்பிரம்ம்புரீஸ்வரர் சந்நிதியும், பக்கத்தில் அகத்தியர் வழிபட்ட அகத்தீஸ்வரர் சந்நிதியும் உள்ளன.
மதுவனேஸ்வரர் சந்நிதி ஒரு கட்டுமலை மீது அமைந்துள்ளது. கட்டுமலைக் கோயிலின் நேர்த்தியான கட்டமைப்பு மனதை ஈர்க்கும்.படிகளேறி மேலே செல்லவேண்டும். கட்டுமலை மீதுள்ள பிராகாரத்தில் சோமாஸ்கந்தர் சந்நிதி அழகாகவுள்ளது. மூலவர் மதுவனேஸ்வரர் சதுர ஆவுடையார் மீது சற்றுயர்ந்த பாணத்துடன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். அமுதத்திற்கு நிகரான, நிவேதனத்தில் சமர்ப்பிக்கப்படும் மதுபர்க்கம் எனும் தேனால் ஈசனை அபிஷேகம் செய்ததால் இவருக்கு மதுவனேஸ்வரர் என்ற திருநாமம் ஏற்பட்டது. தேனில் இனிப்பு தவிர வேறெந்த சுவையும் இருக்காது. அதுபோல மதுவனேஸ்வரர் நம் வாழ்வில் இன்பங்களை மட்டுமே அருள்வார். இவருக்கு தேனால் அபிஷேகம் செய்து, மலர் மாலை சூட்ட, வாழ்வு மணக்கும் என்பது உறுதி. மதுவனேஸ்வரர் எனும் திருநாமமிட்டுள்ளதால் மயங்கவைக்கும் சகல கலைகளுக்கும் அதிபதியாக இவர் விளங்குகிறார். இசையோ, ஓவியமோ, காவியமோ இயற்ற விரும்புவர்கள் இத்தல நாதரை மனதார வணங்கினால் அவர்களுக்கு கலை ஞானம் கண்டிப்பாக கிடைக்கும் . கருவறை கிழக்கு நோக்கி உள்ளது.கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர்.
பின்பு நாம் கிழே இறங்கி கோயிலை வலம் வந்தால் சித்தி விநாயகர், சுப்பிரமணியர், மகாலட்சுமி, சண்டிகேஸ்வரர், சனீஸ்வரர், பைரவர், சூரியன், நவகிரகங்கள் ஆகியவற்றிற்கு தனி சன்னதிகள் உள்ளன. நன்னிலத்து துர்க்கை அம்மன் சக்தி வாய்ந்தவளாகப் போற்றப்படுகிறாள்.
தனி சந்நதியில் அம்பாள் அருளும், அழகும் ஒருங்கிணைந்த திருக்கோலம் காட்டுகிறாள். மதுவனநாயகி என்று அம்பிகையின் பெயரை உச்சரிக்கும் போதே நெஞ்சில் தேன் ஊறுகிறது. வலக்கரத்தில் மணிமாலையும், இடக்கரத்தில் தாமரையும், வரத-அபய ஹஸ்தங்களோடு காட்சி தருகிறாள்.
அனைத்து நவகிரகங்களும் சூரியனை பார்த்திருப்பதும், சூரியனும் குருவும் நேருக்கு நேர் பார்த்திருப்பதும், சனி பகவான் தனி சன்னதியில் அருள் பாலிப்பதும், சித்ர குப்தர் தனி சன்னதியில் அருள்பாலிப்பதும் தலத்தின் சிறப்பம்சமாகும். தெற்கில் எமனும், மேற்கில் வருணனும், கிழக்கில் இந்திரனும், வடக்கில் குபேரனும் லிங்கம் அமைத்து பூஜை செய்துள்ளார்கள். இந்திரன் முதலான தேவர்கள், சூரியன், பிருஹத்ராஜன் ஆகியோர் இத்தல இறைவனை வழிபட்டுள்ளனர்.
பிருஹத்ராஜனின் கோரிக்கைக்கு இணங்கி, சிவபெருமான் ஆலயத்தின் வடக்கே தனது சூலாயுதத்தால் ஒரு குளத்தை உருவாக்கி, தன் தலையில் உள்ள கங்கையை அதில் நிரப்பினாராம். இது சூலதீர்த்தம், பிருஹத் தீர்த்தம், மது தீர்த்தம் என்று பல பெயர்களால் அழைக்கப்படுகிறது.
நாராயண சுவாமிகள், தாண்டவராய சுவாமிகள் எனும் இரு மகான்களின் ஜீவ சமாதிகள் இத்திருத்தலத்தில் அமைந்துள்ளன.
Photos:
https://alayamtrails.blogspot.com/2021/12/sri-madhuvaneswarar-temple-nannilam.html
திறந்திருக்கும் நேரம் :
காலை 7 மணி முதல் பகல் 12-30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
செல்லும் வழி :
கும்பகோணம் – நாகூர் சாலை மார்க்கத்தில் நன்னிலம் ஊர் இருக்கிறது. மயிலாடுதுறை மற்றும் திருவாரூரில் இருந்தும் நன்னிலம் வரலாம். நன்னிலம் பேருந்து நிலையத்திலிருந்து திருவாரூர் போகும் பாதையில் அரசு மருத்துவமனை எதிரில் செல்லும் வழியில் சென்றால் கோயிலை அடையலாம்.
Location :