ஸ்ரீ முண்டக்கண்ணி அம்மன் கோயில் – மயிலாப்பூர்
நமக்கெல்லாம் தாயாக இருப்பவள் , நம் குறைகளை அவளிடம் சொன்னால் அதை அன்போடு கேட்டு நமக்கு கஷ்டங்களை போக்கி அருளை வாரித்தருபவள் , நாம் அவளை காணும்போதே நமக்குள் ஒரு பரவசமான உணர்வை உணரலாம் , ஆம் மைலாப்பூரில் சுயம்புவாக நமக்கு அருள்தரும் முண்டக்கண்ணி அம்மனை தான் இந்த பதிவில் நாம் காணப்போகிறோம் .
ரேணுகாதேவியின் அவதாரங்களின் ஒன்றாகவும் , சப்த கன்னியர்களில் ஒருவராகவும் கருதப்படும் முண்டகண்ணியம்மன் சென்னையில் மைலாப்பூரில் சுயம்புவாக நமக்கு அருள்தருகிறார் .
மூன்று நிலை ராஜகோபுரம் கிழக்கு நோக்கி கம்பீரமாக நிற்கிறது. அதன் வலது புறம் சிறிய நுழைவாயிலும் உள்ளது. கருவறைக்கு முன்பாக, இருபுறமும் துவாரபாலகிகள் வீற்றிருக்கின்றனர்.
அன்னையின் திருவுருவம் மலர்வதற்கு முந்தைய தாமரை மொட்டின் வடிவில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. கற்திருமேனியான அன்னையின் முன்புறமும், பின்புறமும் புடைப்புச் சிற்பமாக சூலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வடிவில் அன்னையை நாம் காணும்போது நம் உடம்பில் ஒரு சிலிர்ப்பு அடைவதை உணரலாம் .அன்னைக்கு கவசமாக பெரிய பிரபை அமைப்பு காணப்படுகிறது. இது வெள்ளிக் கவசத்தால் போர்த்தப்பட்டுள்ளது. இதில் ஐந்துதலை நாகம் படம் விரித்து நிழல்தரும் கோலத்தில் அமைந்துள்ளது. இதன் இருபுறமும் துவார பாலகிகள் அமைந்துள்ளனர்.
அம்பாள் மிகவும் எளிமையாக தனக்கு தென்னங்கீற்றால் அமைந்த கூரை மட்டுமே விருப்பம் என்ற நிலையில் தென்னங்கூரை கீழ் மிக எளிமையாக வீற்றியுள்ளார். தன்னை நாடிவரும் பக்தர்கள் எவ்வளவு பெரிய நிலையில் இருந்தாலும், எளிமையாக வாழ்வதே சிறந்தது என்பதை வலியுறுத்தும் வகையிலும் இக்கோலம் அமைந்துள்ளது.
நாகம் வழிபடும் அன்னை :
அன்னையின் வலதுபுற எதிரில் மிகப்பெரிய அரச மரமும், அதனடியில் நாகக் கன்னிகளும் உள்ளன. அன்னையின் பின்புறம் தல மரமான ஆலம் விழுதுகள் இல்லாத அபூர்வ மரமான கல்லால மரமும், புற்றுடன் மூன்றடி உயர கல் நாகமும் அமைந்துள்ளன. பின்புறம் உள்ள புற்றில் வாழும் நாகம், நாள்தோறும் இரவில் அன்னையை வணங்கி வழிபட்டு செல்கிறாள் என்பது ஐதீகம். இதனால் இத்தலத்தை ராகு கேது பரிகார தலம் என்று சொல்வார்கள் .
அன்னையின் இடது புறத்தில் உற்சவர் சன்னதி உள்ளது .உற்சவர் சன்னிதியின் இடதுபுறம் மகேஸ்வரி, வைஷ்ணவி, பிராமி, கவுமாரி, இந்திராணி, சாமுண்டி, வராகி என சப்த கன்னியர் சிறு கல் வடிவில் வீற்றிருக்கின்றனர். இவர்களுக்கு இருபுறத்திலும் ஜமத்கினி முனிவர் மற்றும் பரசுராமர் சுதை வடிவில் உள்ளனர்.
காலை 6 மணி முதல் நண்பகல் 11 .30 வரை அன்னைக்கு அபிஷேகம் நடைபெறும் அப்போது அன்னையை சுயம்புவாக தரிசிக்கலாம் .அன்னையின் திருமுகத்தில் பெரிய மஞ்சள் உருண்டையைத் தட்டையாக்கிப் பதிய வைத்து, கண் மலர், நாசி, அதரம் வைத்து, வேப்பிலை பாவாடை கட்டி, பூமாலை சார்த்தி அர்ச்சனை செய்து தீபாராதனை காட்டுகின்றனர்.
ஞாயிறு, செவ்வாய், வெள்ளி ஆகிய நாட்களிலும், முக்கிய திருவிழா நாட்களிலும் வெள்ளி மற்றும் தங்கத் திருமுகம், நாகாபரணம் மற்றும் கிரீடம் ஆகியவை அம்மனுக்கு சார்த்தி அலங்கரிக்கிறார்கள் .சித்திரைப் புத்தாண்டு பிறப்பு அன்று 108 விளக்கு பூஜை, சித்திரை பவுர்ணமியில் 1,008 பால்குடப் பெருவிழா, ஆடியில் பூரத் திருவிழா, 1,008 கூடையில் பூச்சொரிதல் விழா, ஆடிப்பூரம், விஜயதசமி, தைக் கடைசி வெள்ளி, சித்ரா பவுர்ணமி ஆகிய நாட்களில் சிறப்பு விழாவாக கொண்டாடுகிறார்கள் .
இத்தலத்து அன்னை நாக வடிவத்தை ஒத்திருப்பதாலும், நாகம் இவளை வழிபடுவதாலும், நாக தோஷம் மற்றும் மாங்கல்ய தோஷம் உள்ளவர்களுக்கு இவள் கண்கண்ட தெய்வமாக விளங்குகின்றாள். அம்மை நோய்க்கும், கண் நோய்க்கும் இந்த அம்மனை வழிபடலாம்.
திறந்திருக்கும் நேரம் :
காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை .
செல்லும் வழி:
சென்னையின் கோயம்பேடு ,சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் தாம்பரம் ஆகிய இடங்களில் இருந்து பேருந்து வசதி உள்ளது . தெருவின் பெயரே முண்டக்கண்ணி அம்மன் தெரு என்று பெயர் . மயிலாப்பூர் ரயில் நிலையத்தில் இருந்து 5 நிமிட தூரத்தில் இக்கோயிலை அடையலாம் . இக்கோயிலின் அருகிலேயே மாதவ பெருமாள் கோயிலும் உள்ளது .
Location :