ஸ்ரீ பள்ளிகொண்டீஸ்வரர் திருக்கோவில் – சுருட்டப்பள்ளி
இறைவன் : ஸ்ரீ பள்ளிகொண்டேஸ்வரர்
இறைவி : மரகதாம்பிகை
தல விருச்சம் : வில்வம்
ஊர் : சுருட்டப்பள்ளி
மாவட்டம் : சித்தூர் , ஆந்திரப்பிரதேசம்
இந்த ஆலயத்தில் அருளும் பள்ளிகொண்டீஸ்வரர், தாயார் மங்களாம்பிகையின் மடியில் தலைவைத்து சயன கோலத்தில் காட்சி தருகிறார். பரந்தாமனை போலவே பரமேஸ்வரன் பள்ளிகொண்ட ஒரே கோவில் இது என்பது சிறப்பாகும்.
மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமையப்பெற்றது இந்தத் திருத்தலம். பள்ளிகொண்டீஸ்வரர் ஆலயத்தில் உள்ள பெரும்பான்மையான மூர்த்திகள் குடும்ப சமேதராக காட்சி தருவது, இந்தக் கோவிலின் முக்கிய அம்சமாகும்.
இந்த ஆலயத்தில் தான், முதன் முதலில் பிரதோஷ வழிபாடு நடத்தப்பட்டதாகவும், அதன்பிறகே மற்ற சிவ ஆலயங்களில் பிரதோஷ வழிபாடு தொடங்கியதாகவும் ஒரு நம்பிக்கை உள்ளது.வழக்கமான விபூதிப் பிரசாதம் இங்கே கிடைக்காது. மாறாக பெருமாள் சன்னதியை போல தீர்த்த பிரசாதமும், தலையில் சடாரி வைத்த ஆசீர்வாதமும் தான்.
தெட்சிணாமூர்த்தி இத்தலத்தில் தான் தன் மனைவி தாராவுடன் தம்பதி சமேதராக அருள்பாலிக்கிறார். வியாழக்கிழமைகளில் இவரை வழிபட்டால் இரட்டிப்பு பலன் கிடைக்கும். பிரகாரத்தில் விநாயர், முருகன், பிருகு முனிவர், பிரம்மா, விஷ்ணு, மார்க்கண்டேயர், நாரதர், சந்திரன், குபேரன், சூரியன், சப்தரிஷிகள், இந்திரன் வீற்றிருக்கிறார்கள்.
வரலாறு :
சர்வேஸ்வரன் சயனித்த ஸ்ரீ பள்ளிகொண்டீஸ்வரராக, திருக்கோல காட்சி தரும் புண்ணியம் பெற்ற ஸ்தலம் தான் சுருட்டப்பள்ளி. விஷத்தை சாப்பிட்ட பகவான் சுருண்டு மயக்க நிலையில் படுத்ததால்தான் சுருட்டப்பள்ளி என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது. தேவர்கள் வாசம் செய்யும் ஊர் ஆகையால் சுருளு பள்ளி, சுருளு: தேவர்கள் பள்ளி, ஊர் என பெயர் பெற்றதாக கூறப்படுகிறது .
துர்வாச முனிவரின் சாபத்தால் இந்திரனுக்கு பதவி பறிபோகிறது. அப்பதவியை பெற அமுதத்தை உண்டு பலம் பெற வேண்டும். அதற்கு பாற்கடலை கடைந்து அதைப் பெறுமாறு தேவகுரு பிரகஸ்பதி ஆணையிடுகிறார். தேவர்களும், அசுரர்களும் மந்தரகிரியை மத்தாகவும், வாசுகி என்ற பாம்மை கயிறாகவும், கொண்டு பாற்கடலை கடைந்தனர்.
பல நாட்கள், கயிறாக விளங்கிய வாசுகி பாம்பு கொடிய வியத்தை கக்க… அந்த விஷம் கடலோடு கலந்து காலகூட விஷமாக மாறி தேவர்களையும், அசுரர்களையும் பயங்கரமாக துரத்தியது. பயந்து நடுங்கிய தேவர்களும், அசுரர்களும் தங்களை காக்க வேண்டி கைலாச நாதரான ஸ்ரீபரமேஸ்வரனின் திருவடிகளில் வீழ்ந்து பணிந்து தஞ்சம் அடைந்தனர்.
பரமேஸ்வரரின் ஆணைப்படி நந்தி தேவரும், சுந்தரரரும் எடுத்து வர ஒரு நாவல் பழம் போல அந்த காலகூட விஷத்தை உருட்டி ஈசன் உட்கொண்டார். பரமேஸ்வரன் அதை உட்கொண்டால் அவன் உள்ளே இருக்கும் பல கோடி உயிர்களும் அழிந்து விடும் என்பதை உணர்ந்த அன்னை பராசக்தி தன் தளிர்க் கரங்களினால் ஈசனின் கண்டத்தைப் பற்றி விஷத்தை அங்கேயே தங்கச் செய்கிறாள்.
விஷம் உண்ட கழுத்தை உடைய ஈசன் திருநீலகண்டரானார். நீலகண்டரான பரமேஸ்வரன் விஷத்தை உண்டதால் ஏற்பட்ட சிரமத்தைத் தணித்து கொள்வதற்காக, சற்று சயனிக்க விரும்பி அமைதியான இடத்தை தேடி சுருட்டப்பள்ளி என்னும் ஷேத்திரத்தை அடைந்தார்.
அமைதி சூழ்ந்த, மரங்கள் நிறைந்த, புங்கை மரங்களும், பூஞ்செடிகளும் நிறைந்த சுருட்டப்பள்ளி என்னும் ஷேத்திரத்தை தேர்வு செய்து அன்னை சர்வ மங்களம்பிகையின் மடியில் படுத்து ஓய்வெடுத்தார்.
சுவாமி பள்ளி கொண்டிருப்பதால், “பள்ளி கொண்டீஸ்வரர்’ எனப்படுகிறார். பிரதோஷ காலத்தில் இத்தலத்து ஈசனை வழிபட்டால் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
கோயில் அமைப்பு :
நாம் கோயிலின் நுழைவு பகுதியை அடைந்தவுடன் நம்மை 5 அடி உயரம் கொண்ட நந்தி பெருமான் நம்மை வரவேற்கிறார் . பின்பு நாம் 5 நிலை ராஜகோபுரத்தை கடந்து உள்ளே சென்றால் நம்மை சங்கநிதி வசுந்தராவுடனும், பத்மநிதி வசுமதியுடனும் காட்சி தருகிறார்கள். துவாரகா பாலகர்கள் இங்கு கிடையாது . உள்ளே சென்றால் நின்ற கோலத்தில் அன்னை மரகதாம்பிகை சிம்ம வாகினியாக காட்சி தருகிறார். கருவறைக்கு வெளியே அர்த்த மண்டபத்தில் வலது பக்கத்தில் கற்பக விருட்சம், இடது பக்கத்தில் காமதேனு பசு காணப்படுகிறது.
மரகதாம்பிகை சன்னிதி முன்பாக சாளக்கிராம கணபதியும், வள்ளி-தெய்வானையுடன் சுப்பிரமணியரும், இடது புறம் அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர் ஆகிய நாயன்மார்களின் திருவுருவச்சிலைகளும், வால்மீகி மகரிஷியின் சிலையும் உள்ளது. அதற்கு அடுத்து ஏகபாத திரிமூர்த்தி காட்சி அளிக்கிறார் .
மரகதாம்பிகை சன்னிதி அருகில் ராஜராஜேஸ்வரி, மகாலட்சுமி, சரஸ்வதி, அன்னபூரணி ஆகிய தேவிகளின் சிலைகள் உள்ளன. கையில் கிளியுடன் அழகிய வடிவில் ஞானதுர்க்கை காட்சி தருகிறார். வடக்கு பிரகாரத்தில் சுப்பிரமணியர் தனது இரு தேவியர்களுடன் தென்திசை நோக்கி நின்ற கோலத்தில் அருள்கிறார். ராஜயோகத்தை தரும் ராஜமாதங்கி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதற்கு கீழே ஒரு சுரங்கப்பாதை காணப்படுகிறது.
பிரம்மா, சப்த கன்னியர் , ஜுரஹரமூர்த்தி,வேணுகோபால சாமி ,ராமர் சீதா தேவியுடன் உள்ள சன்னதி இவர்கள் எல்லோரையும் தரிசித்து விட்டு நாம் கடந்தால் ராமலிங்கேஸ்வரர், பர்வத வர்த்தினியுடன் தனி சன்னிதியில் காட்சி தருகிறார். அருகில் வால்மீகிஸ்வரர் சிலை உள்ளது. உள்பிரகாரத்தில் லவ , குசனுடைய பாதங்கள் உடைய கல்லும் உள்ளது .
பல கோவிலில் பலவிதமான தட்சிணாமூர்த்தியை தரிசிக்கலாம். ஆனால் இங்கு தட்சிணாமூர்த்தி தனது மனைவியுடன் காட்சி தருகிறார். இது வேறு எந்த கோவிலிலும் காணக்கிடைக்காத அற்புதம் ஆகும். இந்த தட்சிணாமூர்த்தியை வணங்கினால் ஞானம், கல்வி, குழந்தைபேறு, திருமண பாக்கியம், மாங்கல்ய பாக்கியம் கைகூடும் என்பது நம்பிக்கை.
பள்ளிகொண்டீஸ்வரர் :
சிவ பெருமான் சயன கோலத்தில் இருக்கும் பள்ளிகொண்டேஸ்வரரின் கருவறை அமைப்பு வித்தியாசமானது. ஆலகால விஷத்தை உண்டு அசதியில் உறங்கும் பரமேஸ்வரனையும், அவருடைய தலைமாட்டில் வீற்றிருக்கும் பரமேஸ்வரியான சர்வமங்களாம்பிகையும் தரிசிக்கலாம்.
அவர்களை சூழ்ந்து சந்திரன், சூரியன், நாரதர், தும்புரு, குபேரன், பிரம்மா, விஷ்ணு மற்றும் சப்த ரிஷிகள் உள்ளார்கள் . நீண்ட செவ்வக வடிவில் அமைந்திருக்கும் மூலக்கருவறையில் தெற்கே தலை வைத்து மல்லாந்த வண்ணம் நெடுந்துயில் கொண்டிருக்கிறார் பள்ளிகொண்டீஸ்வரர்.
இரண்டரை உயர பீடத்தில் பதினாறு அடி நீளத்திற்கு படுத்த வண்ணம் ஈசுவரர் காட்சி அளிக்கிறார். ஈசனின் தலைமாட்டில் அன்னை சர்வமங்களாம்பிகை புன்னகை பூத்தபடி வீற்றிருக்கிறாள். அன்னையின் குளிர்ந்த திருவடி ஈசனின் திருமேனியை சற்றே தொடுகிற மாதிரி அம்பாள் வீற்றிருக்கிறாள். நீண்ட திருமேனியுடன் தாயின் மடியில் படுத்திருக்கும் இந்த ஈசனுக்கு அபிஷேகம் கிடையாது தைல காப்பு மட்டுமே உண்டு .
எங்கும் காணமுடியாத ஒரு அற்புத திருமேனியுடன் காட்சி தரும் இந்த பள்ளிகொண்ட ஈசனையும் மற்றும் இத்தலத்தில் வேறு எங்கும் காணமுடியாத எல்லா தெய்வங்களும் தம்பதி சமேதராக காட்சி கொடுக்கும் ஒரு அருப்புத தலத்திற்கு நாம் சென்று வழிபட்டால் பதவியிழந்தவர்கள் மீண்டும் அடைவர், பதவி உயர்வு கிடைக்கும், திருமணத்தடை விலகும், பிரிந்த தம்பதியினர் ஒன்று சேருவர் என்பது நம்பிக்கை.
மற்றும் இங்கு நடைபெறும் சனிக்கிழமைகளில் வரும் மகாபிரதோஷ தினத்தில் வழிபட்டால் இழந்த செல்வம் மீண்டும் கிடைக்கும்.
Photos:
https://alayamtrails.blogspot.com/2021/05/sri-pallikondeeswarar-temple.html
திறந்திருக்கும் நேரம் :
காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும் .
செல்லும் வழி:
சென்னையில் இருந்து சுமார் 60 km தொலைவில் உள்ள ஊத்துக்கோட்டை அருகில் 3 km தொலைவில் உள்ளது . கோயம்பேட்டில் இருந்து புத்தூர் வழியாக செல்லும் பேருந்துகள் இக்கோயிலுக்கு செல்லும் .
Location:
அருகில் உள்ள கோயில்கள் :
1 . வேத நாராயணப்பெருமாள் கோயில் – நாகலாபுரம்
2 . வாலீஸ்வரர் மற்றும் கால பைரவர் கோயில் – ராமகிரி
3 . கல்யாண வெங்கடேஸ்வரர் கோயில் – நாராயணவனம்
-திருச்சிற்றம்பலம் –