ஸ்ரீ பரசுராமலிங்கேஸ்வரர் கோயில் – அயனாவரம் , சென்னை
இறைவன் : பரசுராமலிங்கேஸ்வரர்
இறைவி : பர்வதாம்பிகை
தலதீர்த்தம் : பிரம்ம தீர்த்தம்
ஊர் : அயனாவரம் (அயன்புரம் )
மாவட்டம் : சென்னை , தமிழ்நாடு
சென்னையில் உள்ள பழமையான கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும் . இக்கோயில் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோயிலாகும் . பிப்ரவரி -2022 இல் இக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது .
கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரத்தை கடந்து உள்ளே சென்றால் கொடிக்கம்பத்தை தரிசிக்கலாம் ,பின்பு பலிபீடம் மற்றும் நந்தியை தரிசிக்கலாம் . பின்பு நாம் அர்தமண்டபத்தை அடையலாம் . இங்கு விநாயகர் காட்சிதருகிறார். கருவறை முன்பு உள்ள முகமண்டபத்தில் துவாரகா பாலகர்கள் உள்ளார்கள் . அர்த்தமண்டபத்தில் வலது புறத்தில் வடக்கு பகுதியில் பாலசுப்பிரமணியர் மிக பெரியதாக தனி சன்னதியில் காட்சிதருகிறார் .மற்றும் நடராஜர் சன்னதி ,உற்சவர் மூர்த்தி சன்னதி ஆகியவைகள் இருக்கின்றன .
பரசுராமலிங்கேஸ்வரர் :
இறைவன் சற்று பெரிய லிங்க திருமேனியுடன் பக்தர்ககளுக்கு வேண்டும் வரங்களை அள்ளித்தருபவராக காட்சி கொடுக்கிறார் . இவர் ஒரு தீண்டா திருமேனி ஆவார் . இவர் தீண்டா திருமேனியாக இருப்பதால் இவருக்கு நீர் ,இளநீர் மற்றும் பன்னீர் ஆகிய மூன்றால் மட்டுமே அபிஷேகம் நடைபெறுகிறது . மற்ற அபிஷேகங்கள் ஆவுடையாருக்கே நடைபெறுகிறது .இச்சிவலிங்கம் பருவகாலத்திற்கு தக்கவாறு நிறம் மாறும் தன்மையுடையது. ஆவணி முதல் மார்கழி மாதம் வரை சிவலிங்கம் கருப்பு நிறமாகவும், பங்குனி முதல் ஆடி மாதம் வரை பொன் நிறமாகவும் காட்சியளிக்கிறது.
அம்மன் சன்னதி இறைவனின் கருவறைக்கு அருகில் தனி சன்னதியில் கிழக்கு நோக்கி காட்சி கொடுக்கிறார் .
கோயிலை வலம் வந்தால் கோயிலின் தலவிருச்சகம் மற்றும் இறைவனின் விமானத்தை காணலாம் . இவ் விமானமானது கஜபிருஷ்ட விமானம் ஆகும் . கருவறை கோஷ்ட மூர்த்தங்களாக நர்த்தன கணபதி ,தக்ஷிணாமூர்த்தி ,விஷ்ணு ,ப்ரம்மா மற்றும் துர்கை இருக்கிறார்கள் .
கருவறை பின்புறத்தில் ஸ்ரீ சுயம்பு சன்னதி மற்றும் சண்டீகேஸ்வரர் அருகில் பட்டீசவரர் சன்னதி உள்ளன . பைரவர் ,நவகிரஹ சன்னதிகள் தனியாக உள்ளன .
வரலாறு :
திருமாலின் ஆறாவது அவதாரமாகிய பரசுராமர் அவதாரத்தில் தந்தையாகிய ஜமதக்கினி முனிவரின் கட்டளைக்கேற்ப தம் தாயாகிய ரேணுகா தேவியை கொன்ற பாவத்தை போக்கிக்கொள்ள பரசுராமர் சிவனை வழிபட்ட தலம் இது .அதனாலேயே இவருக்கு பரசுராமலிங்கேஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது .
இக்கோயிலில் உள்ள முருக பெருமான் அமைப்பு பிற்கால பல்லவர்களின் அமைப்பை ஒத்து உள்ளது . இவ்வடிவம் கி. பி 8 -9 ஆம் நூற்றாண்டை சார்ந்த பல்லவர் காலத்து கலை வடிவத்தோடு ஒன்றிபோயிருப்பதால் இக்கோயில் 8 ஆம் நூற்றாண்டை சார்ந்ததாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது .
அயன் என்று அழைக்கப்படும் பிரம்மன் இங்குள்ள குளத்தில் நீராடி சிவனை வழிபட்டதால் இக்கோயில் குளத்துக்கு “பிரம்ம தீர்த்தம் “ என்று பெயர் ஏற்பட்டது , இக்குளமானது கோயிலின் எதிர் புறத்தில் உள்ளது . அதுமட்டும் அல்லாமல் இவ் ஊருக்கு அயன்புரம் என்று பெயர் ஏற்பட்டது ,தற்போது அயனாவரம் என்று அழைக்கப்படுகிறது . இக்கோயில் மிக அழகாக பராமரிக்கப்படுகிறது .
Photos:
https://alayamtrails.blogspot.com/2022/03/sri-parasurama-lingeswarar-temple.html
திறந்திருக்கு நேரம் :
காலை 6 .00 மணி முதல் பகல் 12 .00 மணி வரை , மாலை 4 .00 மணி முதல் 8 .30 மணி வரை
செல்லும் வழி :
வில்லிவாக்கத்தில் இருந்து கொன்னூர் நெடுஞ்சாலைக்கு தெற்க்கே ரயில்வே காலனி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி இக்கோயிலுக்கு செல்லலாம் . கேழ்ப்பாக்கத்தில் இருந்து செல்லும் நியூ ஆவடி சாலையில் வ . உ. சி . நகர் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி வடக்கே சென்றால் இக்கோயிலை அடையலாம் .
Location :
-ஓம் நமசிவாய –