Sri Rajagopala Swamy – Manimangalam

ஸ்ரீ ராஜகோபாலசாமி கோயில் – மணிமங்கலம்

மூலவர்   : ராஜகோபாலசாமி

தாயார்  :  செங்கமலவல்லி

புராண பெயர் : சதுர்வேதி  மங்கலம்

ஊர் : மண்ணிவாக்கம்

மாவட்டம் : காஞ்சிபுரம் , தமிழ்நாடு

என்னுடைய முந்தய பதிவில் கொடுத்துள்ள ஸ்ரீ தர்மேஸ்வரர் கோயில் பற்றிய குறிப்புகளில் கல்வெட்டுகள் பற்றியும் இந்த இடத்தை பற்றியும் ,இதன் புராதன தொன்மைகளை பற்றியும் குறிப்பிட்டுள்ளேன் அதன் தொடர்ச்சியாக இந்த மணிமங்கலத்தை மேலும் அழகு சேர்க்கும் இந்த ராஜகோபாலசாமி கோயிலை பற்றி இப்பொழுது நான் கூறுகிறேன் ! என்னோடு கொஞ்சம் பயணிக்க வாருங்கள் .

சிவன் கோயிலில் இருந்து சுமார் 1 /2 km தொலைவில் சென்றால் சாலையின் வலதுபுறத்தில் ராஜகோபாலசாமி கோயிலின் பலகை நம்மை வரவேற்கிறது . அவ் தெருவின் உள்ளே நுழைந்தால் ராஜகோபுரம் இல்லாத மொட்டை கோபுர வாசல் நம்மை வரவேற்கிறது . வாசலின் முன் பகுதியில் சிறிய  நான்கு கால் மண்டபம் உள்ளது . நுழைவு வாயிலின் உள்ளே நுழைந்தால் பெரிய பசுமையான வெளிபிரகாரத்தை காணலாம் , வெளிப்பிரகாரத்தில் கொடிக்கம்பம் மற்றும் கருடன் சன்னதி உள்ளது , கருடனை நாம் வணங்கிவிட்டு ஒரு சிறிய உள் மண்டபத்தில் நுழைந்து பின்பு பெருமாள் குடிகொண்டிருக்கும் சன்னதியை அடைகிறோம் .

மூலஸ்தானத்தில் நான்கு கைகளுடன் ஸ்ரீதேவி, பூதேவியுடன் ராஜகோபாலர் நின்ற கோலத்தில் பத்ம விமானத்தின் கீழ் காட்சி தருகிறார். இடது கையில் தண்டாயுதம் இருக்கிறது. மார்பில் மகாலட்சுமி இருக்கிறாள். இவருக்கான உற்சவர், வலது கையில் சக்கரம், இடக்கையில் சங்கு வைத்திருக்கிறார்.சுவாமி சன்னதியின் நுழைவு வாயிலின் மேலே, பள்ளி கொண்ட கோலத்தில் கிருஷ்ணரின் சிற்பம் இருக்கிறது. கிருஷ்ணருக்கான தலம் என்பதால், இவ்வாறு வடித்துள்ளனர்.பொதுவாக வலது கையில் சக்கரமும், இடது கையில் சங்கும் பெருமாள் வைத்திருப்பார். ஆனால் இத்தலத்தில் வலது கையில் சங்கும், இடது கையில் சக்கரமும் வைத்த கோலத்தில் அருள் பாலிப்பது மிகவும் சிறப்பாகும்.

பெருமாளை தரிசித்து விட்டு வலம் வந்தால் தாயார் செங்கமலவல்லி சன்னதியை அடையலாம் அவர் சன்னதியின் முன்பும் சிறிய 4 கால் தூண் உள்ளது . அப்படியே கோயிலை வலம் வந்தால் ஆண்டாள் நாச்சியார் சன்னதியை அடையலாம்.

தல வரலாறு:


கிருஷ்ணராக அவதரித்த மகாவிஷ்ணு, குருக்ஷேத்ர போரின்போது, அர்ஜுனனுக்கு தேரோட்டியாக இருந்தார்.போரில் ஆயுதங்களை பயன்படுத்த மாட்டேன் என உறுதி பூண்டிருந்த அவர், போர் அறிவிப்பிற்காக, சங்கு மட்டும் வைத்துக்கொண்டார். அவரது சங்கின் ஒலியைக் கேட்டதுமே, எதிரிப்படையினர் அஞ்சி நடுங்கினர். இவ்வாறு கிருஷ்ணர் குருக்ஷேத்ர போரின்போது, வலது கையில் சங்கு வைத்து ஊதியதன் அடிப்படையில் இங்கு மகாவிஷ்ணு, வலது கையில் சங்கு வைத்தபடி காட்சி தருகிறார்.வலது கையில் இருக்க வேண்டிய சக்கரம், இடது கையில் இருக்கிறது. கிருஷ்ணாவதாரத்தில் இடையனாக இருந்து, பசுக்களை மேய்த்ததால் இவர், “ராஜகோபாலர்’ என்று பெயர் பெற்றார்.

இக்கோயிலில் உள்ள கல்வெட்டுகளில் பல்லவர்கள் மற்றும் சோழர்களின் கல்வெட்டுகள் உள்ளன . அவை இவ்வூரினை இரத்தினகிரஹா என  பல்லவர்கள் சம்ஸ்கிருத மொழியில்  அழைத்தார்கள், இந்த பெயர் மருவி   ராஜகோபாலசாமி என்று இந்த வைணவ ஆலயத்தின் கருங்கற்சுவர்களில் பதிந்துள்ள கி.பி 9ம் நூற்றாண்டினை சேர்ந்த சோழ மன்னர்களது ஆட்சி காலத்தின் கல்வெட்டு எழுத்துக்கள் இன்றளவும் தெளிவாக விளக்குகின்றது.

தொண்டை மண்டலத்திற்குட்பட்ட இத்துவாரகை ஸ்தலத்தில் உள்ள சோழ மன்னர்களது ஆட்சி கால கல்வெட்டு தகவல்களானது, சம்ஸ்கிருத மொழியின் மீது கொண்டுள்ள மொழி பற்றினைக் காட்டிலும், தமிழ் மொழி மீது அதீத பற்று கொண்டிருந்த சோழ மன்னர்களது ஆட்சி காலத்தில் “இராஜகேசரிவர்மன்” எனும் சோழ மன்னரது ஆட்சிக்காலத்தில் “இரத்தினகிரஹாரா” எனவும் “இரத்தினகிராமா” எனவும் சம்ஸ்கிருத மொழியினால் அழைக்கப்பட்டு வந்த இக்கிராமத்தின் பெயரானது அறவே அகற்றப்பட்டு தமிழ் மொழியிலான பெயராகிய “லோகமஹாதேவி சதுர்வேதி மங்கலம்” என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதை சோழ மன்னர்களது ஆட்சி கால கல்வெட்டு எழுத்துகளின் வாயிலாக நமக்கு உணர்த்துகிறது.

Photos:

https://alayamtrails.blogspot.com/2021/06/sri-rajagopala-swamy-manimangalam.html

திறந்திருக்கும் நேரம் :

காலை 6.30 மணி முதல்10.30 மணி வரை, மாலை 3.30 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

செல்லும் வழி:

தாம்பரத்தில் இருந்து சுமார் 10 km  தொலைவில் ஸ்ரீபெரும்புதூர் செல்லும் சாலையில் உள்ளது .

இவ்வளவு பழமையும் ,தொன்மையும் கொண்ட இந்த திருத்தலத்திற்கு நீங்கள் சென்று இறைவனின் அருளை பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன் .

Location Map :

Leave a Reply