ஸ்ரீ சங்கமேஸ்வரர் கோயில் -பவானி
இறைவன் : சங்கமேஸ்வரர்
இறைவி : வேதநாயகி
தல விருச்சகம் : இலந்தை
தல தீர்த்தம் : காவேரி ,பவானி ,அமிர்த நதி
புராணப்பெயர் : திருநணா
ஊர் : பவானி
மாவட்டம் : ஈரோடு, தமிழ்நாடு
- தேவார பாடல் பெற்ற 274 தலங்களில் 207 தலமாகும் ,கொங்கு மண்டல தேவார பாடல் பெற்ற தலங்களில் 3 வது தலமாகும் .திருஞானசம்பந்தரால் பதிகம் பாடப்பெற்ற தலம் .
- ஐந்து மலைகள் சூழ்ந்த மையத்தில் அமைந்துள்ளது .வடக்கில் வேதகிரியும் ,வடகிழக்கில் சங்ககிரியும் ,கிழக்கில் நாககிரியும் ,தெற்கில் மங்களகிரியும் ,காவேரியில் பத்மகிரியும் அமைந்துள்ளது .
- காவேரி ,பவானி மற்றும் கண்ணுக்கு புலப்படாத அமிர்தநதி ஆகிய மூன்று நதிகள் கூடும் இடம் என்பதால் “கூடுதுறை ” என்றும் அழைக்கப்படுகிறது . அம்மன் ,நதி ,தலம் மூன்றிற்கும் “பவானி” என்றே அழைக்கப்படுகிறது . இவ் தலத்தை தென் திரிவேணி சங்கமம் என்றும் அழைப்பார்கள்.
- இத்தலத்தில் வந்து நீராடி இறைவனை தரிசிப்பவர்களுக்கு “யாதொரு தீங்கும் நண்ணாது ” என்ற சொல்லுக்கு ஏற்ப இவூருக்கு ‘திருநணா ‘ என்ற புராண பெயர் ஏற்பட்டது .
- மூன்று நதிகள் கூடும் இடத்தில் 5 நிலைகளில் 7 கலசங்களுடன் ராஜகோபுரம் அமைந்துள்ளது . கோபுரமே சிவலிங்கமாக கருதுவதால் நந்தி பெருமான் கோபுரத்தை பார்த்தபடி கோபுரத்திற்கு வெளியே வீற்றியிருப்பது தனி சிறப்பாகும் .
- அம்பிகை வேதநாயகி சன்னதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது .வலதுபக்கம் சுப்பிரமணியர் சன்னதி உள்ளது,அவரை கடந்து சென்றால் மூலவர் சிங்கமேஸ்வரர் சுயம்புவாக வீற்றியுள்ளார். இக்கோயிலின் சுப்ரமணியரை பற்றி அருணகிரிநாதர் தன் திருப்புகழில் பாடியுள்ளார் . மற்றும் இக்கோயிலில் ஆதிகேசவ பெருமாள் சவுந்தரவல்லி தாயாருடனும் மற்றும் கிருஷ்ணன் சன்னதிகளும் உள்ளன . சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ள தலமாக விளங்குகிறது .
- 1804 ம் ஆண்டு கோவை மாவட்ட ஆட்சி தலைவராக இருந்த ஆங்கிலேயர் வில்லியம் காரோ பவானியில் முகம் செய்து பயணியர் மாளிகையில் படுத்துறங்கியபோது ஒரு நாள் மழை கால இரவில் அம்மன் சிறுமியின் வடிவில் வந்து அவரை மாளிகையில் இருந்து வெளியில் அழைத்துவர அவர் தங்கியிருந்த கட்டிடம் இடிந்து விழுகிறது ,தன்னை பெரும் ஆபத்திலிருந்து காப்பாற்றிய அந்த சிறுமிக்கு நன்றி சொல்ல துரை நினைத்து பார்த்தபோது அந்த சிறுமி மறைந்து விடுகிறாள் .கோயிலின் குருக்கள் பூஜையின் போது துரையை காத்தது அம்மன் வேதநாயகி என்று கூறினார் .அம்மன் சன்னதியின் வெளி சுவற்றில் மூன்று துவாரங்கள் செய்து வெளியில் இருந்து துரையை தரிசிக்க ஏற்பாடு செய்தார்,அதன் வழியே துரை தரிசித்தபோது “விந்தை தன்னை இரவு காலனிடமிருந்து காத்தவள் இந்த அம்மனே ” என்று வியந்து தனது கையப்பமிட்டு 11 .1 .1804 ல் காணிகையாக வழங்கிய “தங்க காட்டிலே ” அம்மன் பள்ளியறையில் கட்டில்.அவர் தரிசித்த மூன்று துவாரங்களை இன்றும் மதில் சுவற்றில் உள்ளது .
- ஸ்ரீ ஜுரஹரேஸ்வரர் : சிவபெருமானின் அஷ்டாஷ்ட (64 ) மூர்த்திகளில் ஒன்றாக ஸ்ரீஜுரஹரேஸ்வரர் விளங்குவதாக சிவமஹாபுராணம் கூறுகிறது .உலக உயிர்கள் இன்புற்று வாழ மருத்துவ ரூபம் கொண்டு 3 முகமும் 3 கரங்களும் 3 கால்களும்,கரத்தில் அக்னியும் ஏந்திய திருவுருவத்துடன் விளங்குகிறார் .உடல் உஷ்ணமாகும் போது எதாவது ஒரு வியாதி உடலுக்கு வந்துவிடுகிறது .பெரு வியாதி உள்ளவர்கள் ,அடிக்கடி காய்ச்சல் ,சரும வியாதி உள்ளவர்கள் மனநோய் உள்ளவர்கள் ஜுரஹரேஸ்வரர் பெருமானுக்கு குளிர்ந்த திரவியங்களால் அபிஷேகம் செய்வித்து,மிளகு சாதம்,மிளகு ரசம் ,அரைக்கீரை கூட்டு ஆகியவற்றை படைத்து பிராத்தனை செய்து கொள்வது மிகுந்த நன்மையை தரும்
- அமிர்தலிங்ககேஸ்வரர் : இந்த பவானியில் பராசர முனிவர் ,சங்கமேஸ்வர பெருமானை வேண்டி தவம் செய்து தங்கியிருந்த காலத்தில் தேவர்களும் ,அசுரர்களும் அமிர்தம் வேண்டி திருப்பாற்கடலை கடைந்தபோது ஆலகால விஷமும் அமிர்தமும் வந்தது .அதில் விஷத்தை சிவபெருமான் எடுத்துக்கொண்டு அமிர்தத்தை தேவர்களுக்கு வழங்கினார்.அந்த அமிர்தத்தை தேவர்கள் உண்டு அசுரர்களுக்கு தெரியக்கூடாது என்று பராசர முனிவரிடம் வழங்கி அதை பாதுகாக்கும்படி கூறினார் .அவர் அந்த அமிர்த கலசத்தை ‘பதரி’என்னும் இலந்தை வனப்புதரில் புதைத்து வைத்திருந்தார் .இதை அறிந்த அசுரர்கள் அமிர்தத்தை எடுக்க முயன்றார்கள் இதை உணர்ந்த பராசர முனிவர் வேத நாயகியுடன் முறையிட்டு ,அந்த அசுரர்களை வதம் செய்தார் .சிறிது காலம் கழித்து ,கலசம் இருந்த இடத்தை தோண்டிப் பார்த்தபோது ,அதிலிருந்து ஒரு ஊற்றாக தோன்றி காவேரி ,பவானி ஆகிய இரண்டு நதிகளுக்கு இடையே கலந்தது அந்த அமிர்த கலசம் லிங்கமாகவே உறைந்தது அதுவே அமிர்தலிங்கேஸ்வரரக அனைவரும் இன்றளவும் வழிபடுகின்றனர் .
- உலகிலேயே வேறு எங்கும் இல்லாத வண்ணம் இங்கு ஆவுடையாரை விட்டு லிங்கத்தை தனியாக எடுக்கலாம் .குழந்தை பேரு இல்லாதவர்கள் மூன்று நதிகள் சங்கமமாகும் இடத்தில கணவன் மனைவி இருவருமாக நீராடி இந்த அமிர்த லிங்கத்தை கையில் எடுத்து இடையில் சுமந்து ஆவுடையாரை மூன்று முறை வலம் வந்தால் குழந்தை பேரு நிச்சயம் . இந்த லிங்கத்தை பலரும் எடுத்து இடுப்பில் சுமந்து குழந்தை பேரு பெற்றுள்ளார்கள் . வளர்பிறையில் வரும் திங்கள் கிழமையில் வழிபாடு செய்வது சிறப்பு
Photos:
https://alayamtrails.blogspot.com/2021/06/sri-sangameswarar-temple-bhavani.html
திறந்திருக்கும் நேரம்
காலை 5 .00 -01 .00 வரை மாலை 4 .00 -08 .00 வரை
செல்லும் வழி:
ஈரோட்டில் இருந்து சுமார் 15 km தொலைவில் பவானி உள்ளது ,பேருந்து நிறுத்தம் உள்ளது .சேலத்தில் இருந்து சுமார் 55 km தொலைவில் பவானி உள்ளது. ரயில்நிலையங்கள் சேலம் மற்றும் ஈரோட்டில் உள்ளது .
Location:
ஓம் நமசிவாய !!