சத்தியகிரீஸ்வரர் – பரங்கிரிநாதர் திருக்கோயில் – திருப்பரங்குன்றம்
இறைவன் : சாத்யகிரீஸ்வரர் , பரங்கிரிநாதர்
இறைவி : ஆவுடைநாயகி
தலவிருச்சம் : கல்லத்தி
தலதீர்த்தம் : லட்சுமி தீர்த்தம் , சரவணப்பொய்கை
ஊர் : திருப்பரங்குன்றம்
மாவட்டம் : மதுரை , தமிழ்நாடு
பதிகம் பாடியவர்கள் : திருநாவுக்கரசர் ,திருஞானசம்பந்தர் ,சுந்தரர் ,மாணிக்கவாசகர் ,நக்கீரர் ,அருணகிரிநாதர்
தேவார பாடல் பெற்ற பாண்டியநாட்டு தலங்களில் 3 வது தலமாகும் . தேவார சிவ தலங்கள் 276 இல் 193 வது தலமாகும் . சிவனுக்கே உரிய தலம் என்றாலும் முருகன் கோயில் என்றே எல்லோராலும் அழைக்கப்படுகிறது .
பெயர்க்காரணம்
பரம்பொருளான சிவ பெருமான் குன்றம் எனும் மலை வடிவாகக் காட்சியளிக்கும் இடம் திருப்பரங்குன்றம்.திரு + பரம் + குன்றம் எனப் பிரிக்கப்படுகிறது. பரம் என்றால் பரம் பொருளான சிவபெருமான் குன்றம் என்றால் குன்று (மலை). திரு என்பது அதன் சிறப்பை உணர்த்தும் அடைமொழியாகதச் சேர்த்து திருப்பரங்குன்றம் என ஆயிற்று.இத்தலத்தில் சிவன், மலை வடிவில் அருளுகிறார். பரம்பொருளாகிய சிவன், குன்று வடிவில் அருள் செய்வதால் சிவனுக்கு “பரங்குன்றநாதர்” என்றும், தலம் “திருப்பரங்குன்றம்” என்றும் பெயர் பெற்றது.
ஏழு நிலை ராஜகோபுரத்துடன் ஒரு மலை கோயிலாக இக்கோயில் இருக்கிறது . திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி கோவிலின் கருவறை, ஒரு குகைக் கோவிலாகும். கருவறையில் ஐந்து குகைகள் மலையைக் குடைந்து அமைக்கப்பட்டுள்ளன. சுப்ரமணியசுவாமி சந்நிதி, துர்காதேவி சந்நிதி, கற்பக விநாயர் சந்நிதி, சத்தியகிரீஸ்வரர் சந்நிதி, பவளக்கனிவாய்ப் பெருமாள் சந்நிதி ஆகிய ஐந்து சந்நிதிகள் இங்கு உள்ளன. ஐந்து சந்நிதிகளைத் தவிர, திருப்பரங்குன்றக் கோவிலில் அன்னபூரணிக் குகைக் கோவிலும், ஜேஷ்டா தேவிக்கான குகைக் கோவிலும் உள்ளன.
திருப்பரங்குன்றம் லிங்க வடிவமாகக் காட்சியளிக்கும் ஒரு அற்புத மலை. இந்தத் திருப்பரங்குன்றத்தில் தங்கி சிவசக்தியை நோக்கி ஆறுமுகப் பெருமான் தவமிருந்தார். இக்குன்றமானது சிவலிங்க வடிவிலேயே காணப்படுவதால் சிவபெருமானே குன்றின் உருவில் காட்சியளிப்பதாக எல்லோராலும் வணங்கப்பட்டு வருகிறது. இம்மலையின் உயரம் சுமார் 190 மீட்டராகும். இம்மலையை நித்தம் வலம் வந்து வழிபட்டால் தொழுவாரின் வினைகளெல்லாம் தீர்ந்துவிடும் என்று திருஞான சம்பந்தர் தான் இயற்றிய தேவாரத்தில் பாடியுள்ளார்.
தல வரலாறு :
மகிஷாசுரன் எனும் அசுரன் தேவர்களை தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்தான். அவனை அழிக்க அம்பாள், நவநாயகிகளாக வடிவம் எடுத்து ஒன்பது நாட்கள் அவனுடன் போரிட்டாள். ஒன்பதாம் நாளில் அவள் துர்க்கையம்மனாக மாறி அவனை வதம் செய்தாள். இதனால் அவளுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. தோஷம் நீங்க சிவனை வணங்கினாள். அவளுக்கு காட்சி தந்த சிவன், தான் இத்தலத்தில் மலையின் வடிவில் இருப்பதாகவும், இங்கு தன்னை வணங்கிவர சாபம் நீங்கப்பெறும் என்றார். அதன்படி துர்க்கையம்மன் இங்கு வந்து லிங்க வடிவ மலையாக இருக்கும் சிவனை தவம் செய்து வணங்கினாள். மேலும் மலையிலேயே ஒரு லிங்கத்தையும் பிரதிஷ்டை செய்து பூஜித்தாள். அவளுக்கு காட்சி தந்த சிவன் தோஷத்தை போக்கியருளினார்.
பரம்பொருளாகிய சிவன் குன்று வடிவில் அருளுவதால் சுவாமி, “பரங்குன்றநாதர்” என்றும், தலம் “பரங்குன்றம்” என்றும் அழைக்கப்படுகிறது. திருப்பரங்குன்றம் சிவன் கோவிலாகவே இருந்துள்ளது. இப்போதும் மூலவர் சிவன் தான். இவரை “சத்தியகிரீஸ்வரர்” என்று அழைக்கின்றனர். முருகன், தெய்வானையை திருமணம் செய்த தலம் என்பதால், முருகனுக்கு முக்கியத்துவம் தரப்பட்டு, சுப்பிரமணிய சுவாமி கோவிலாக மாறிவிட்டது.
சிவனுக்கு நேரே நந்தி இருக்கவேண்டிய இடத்தில் மகாவிஷ்ணு இருக்கிறார். இது அபூர்வமான அமைப்பாகும்.மகாவிஷ்ணுவின் வாகனமாக கருடாழ்வார், அவருக்கு எதிரே வணங்கியபடி இருப்பார். ஆனால், இக்கோயிலில் மகாவிஷ்ணுவிற்கு எதிரே சிவன் இருப்பதால், கருடாழ்வார் சன்னதி இல்லை. அதற்குப் பதிலாக கருடாழ்வார், சண்முகர் மண்டபத்திலுள்ள கார்த்திகை முருகனுக்கு அருகில் வடக்கு நோக்கி இருக்கிறார்.நந்திகேஸ்வரர், அவரது மனைவி காலகண்டியுடன் இருக்கிறார்.
சத்தியகிரீஸ்வரர் சந்நிதி வாயிலிலுள்ள துவாரபாலர்களின் உருவங்களில் காணப்படும் ஆடை மடிப்பு கலையம்சங்களும், இதர சிற்ப அம்சங்களும் நம்மை ஆச்சரியப்படுத்தும் விதமாக உள்ளது
திருப்பரங்குன்றத்தில் சத்தியகிரீஸ்வரர் , பவளக்கனிவாய் பெருமாள், கற்பகவிநாயகர், சுப்பிரமணியர், துர்க்கையம்மன் என பஞ்ச தெய்வங்களும் மூலஸ்தானத்தை ஒட்டியே அருளுகின்றனர். இத்தகைய அமைப்பை காண்பது அபூர்வம்.
கருவறையில் சிவலிங்கத்திற்கு பின்புறம் சிவன், பார்வதி மற்றும் முருகனுடன் “சோமாஸ்கந்தராக’ இருக்கிறார். இது விசேஷமான அமைப்பாகும். துர்க்கை அம்மனுக்கு சிவன், விமோசனம் தந்தபோது சோமாஸ்கந்தராக காட்சி தந்தாராம். இதன் அடிப்படையில் இவ்வாறு அமைக்கப்பட்டிருக்கிறது.
சிவன், பார்வதிக்கு பிரணவ மந்திரத்தை உபதேசித்தபோது, அம்பாளின் மடியில் இருந்த முருகன் அதனைக் கேட்டுக்கொண்டிருந்தாராம். அம்மந்திரத்தை குருவிடம் இருந்து முறையாக கற்காமல், மறைமுகமாக கேட்டது தவறு என எண்ணிய முருகன், இத்தலத்தில் சிவனை வேண்டி தவம் செய்தார். அவருக்கு ஒரு தைப்பூசத்தன்று சிவன் காட்சி தந்தார். இந்த சிவன், சுப்பிரமணியர் கோயிலுக்கு எதிரே ஆதிசொக்கநாதராக அருளுகிறார். திருப்பரங்குன்றம் செல்பவர்கள் முதலில் இவரை வணங்கிவிட்டு செல்ல வேண்டும் என்பது ஐதீகம். இவரே இங்கு பிரதான மூர்த்தி ஆவார். ஆனால், அறுபடை முருக தலங்களில் இத்தலமும் ஒன்று என்பதால் பிற்காலத்தில் முருகன் பெயராலேயே இக்கோயில் பெயர் பெற்றுள்ளது. விழாக்காலங்களில் சிவனுக்கே கொடியேற்றப்படுகிறது. ஆனால், முருகனே வீதியுலா செல்கிறார். முருகன் சிவனது அம்சமானவர் என்பதால் இவ்வாறு செல்வதாக சொல்கிறார்கள். எனவே, இங்குள்ள முருகனுக்கு “சோமசுப்பிரமணியர்’ என்ற பெயரும் உள்ளது.
சிவலிங்கம் துர்க்கை அம்மனால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர் என்பதால், “தேவி லிங்கம்’ என்கின்றனர். சுவாமி, “சாந்தகாரம்’ எனும் மருந்து பூசப்பட்டவர் என்பதால் சாம்பிராணி தைலம் மட்டும் பூசி வழிபடுகின்றனர். வேதவியாசர், பராசர முனிவர் ஆகியோர் சுவாமியை வழிபட்டுள்ளனர்.
பரிகாரம்:
திருமண தடை , குழந்தை பேறு இல்லாதவர்கள் இக்கோயிலில் வந்து வேண்டிக்கொள்கிறார்கள் . ரக்து காலத்தில் இங்குள்ள துர்க்கைக்கு தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள் .
திறந்திருக்கும் நேரம் :
காலை 5 .30 மணி முதல் நண்பகல் 1 .00 மணி வரை
மாலை 4 .00 மணி முதல் இரவு 9 .00 மணி வரை
செல்லும் வழி
மதுரையில் இருந்து சுமார் 8 km தொலைவில் உள்ளது . நிறைய நகர பேருந்துகள் உள்ளன .
Location :