ஸ்ரீ சவுந்தரேஸ்வர் கோயில் – திருப்பனையூர்
இறைவன் :சவுந்தரேஸ்வரர் , தாலவனேஸ்வரர்
இறைவி :பிரஹந்நாயகி, பெரியநாயகி
தல விருட்சம்:பனைமரம்
தீர்த்தம்:பராசர தீர்த்தம், அமிர்த தீர்த்தம்
ஊர்:திருப்பனையூர்
மாவட்டம்:திருவாரூர் , தமிழ்நாடு
பாடியவர்கள்:
சம்பந்தர், சுந்தரர்
மாடமாளிகை கோபுரத்தொடு மண்டபம்வள ரும்வளர்பொழில்
பாடல் வண்டறையும் பழனத் திருப்பனையூர்த்
தோடுபெய்தொரு காதினிற்குழை தூங்கத்தொண்டர்கள் துள்ளிப்பாடநின் றாடு மாறுவல்லார் அவரே அழகியரே.
– சுந்தரர்
தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 73வது தலம்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 136 வது தேவாரத்தலம் ஆகும்.
இறைவன் சுந்தரருக்கு நடனக்காட்சி தந்த தலம் மற்றும் கரிகால சோழன் தன் எதிரிகளுடன் இருந்து காத்து கொள்ள தன் குழந்தை பருவத்தில் எட்டு ஆண்டுகள் தங்கியிருந்த இடம் போன்ற பல சிறப்புகளை இத்தலம் கொண்டுள்ளது .
கோயில் அமைப்பு :
ராஜகோபுரம் இல்லை , ரிஷப வாகனத்தில் அமர்ந்தபடி ஈசன் உள்ள சுதை சிற்பத்துடன் கூடிய நுழைவு வாயில் மட்டுமே உள்ளது. எதிரே கோயிலின் திருக்குளம் உள்ளது .
வாயிலை கடந்து உள்ளே சென்றால் மற்றொரு வாயில் இருக்கிறது , இவ்விரண்டு வாயில்களுக்கு இடையே வலது புறத்தில் இறைவி பெரியநாயகி சன்னதி உள்ளது .
இரண்டாவது வாயிலைக் கடந்து உள்ளே செல்லும்போது பலிபீடமும், நந்தி மண்டபமும் உள்ளன. அருகே தல மரமான பனை மரம் உள்ளது. அடுத்து உள்ள கருவறையில் மூலவர் சௌந்தரேஸ்வரர் உள்ளார். அவருக்கு முன்பாக நந்தியும், பலி பீடமும் உள்ளன. கோஷ்டத்தில் பராசர முனிவர், தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, துர்க்கை ஆகியோர் உள்ளனர். திருச்சுற்றில் மாற்றுரைத்த விநாயகர் சன்னதி உள்ளது. அடுத்து வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், மகாலட்சுமி ஆகியோர் உள்ளனர். அடுத்து சண்டிகேஸ்வரர் சன்னதியும், தாலவனேஸ்வரர் சன்னதியும் உள்ளன.
வரலாறு :
கோயில் வாயில் நுழைந்ததும் நாம் துணை இருந்த விநாயகர்,சுந்தரர், திருவாரூர்ப் பங்குனி உத்தரத் திருநாளுக்காகப் பரவையாரின் வேண்டுகோளின்படி, திருப்புகலூர் இறைவனிடம் பொன் பெற்று “தம்மையே புகழ்ந்து ” என்று பாடித் திருப்புகலூர் வணங்கிய பின்பு, திருப்பனையூர் நினைத்து வரலானார். அப்போது ஊரின் எல்லையில் ஈசன் சுந்தரருக்கு நடன காட்சி தந்து அருளினார் , இதை கண்டு மெய்சிலிர்த்த சுந்தரர் ஈசன் எதிர் சென்று தொழுது, விழுந்து வணங்கி, ‘அரங்காடவல்லார் அழகியர் ‘ என்று பதிகம் பாடி, அருள் பெற்றார். இந்நிகழ்ச்சியின் நினைவாக இன்றும், ஊருக்கு வடகிழக்கில் உள்ள மாணிக்க நாச்சியார் திட்டிற்கு அருகே உள்ள குளம் ‘சந்தித்த தீர்த்தம் ‘ என்னும் பெயருடன் திகழ்கிறது.
பனை மரத்தை தலமரமாகக் கொண்ட ஊர்களாக வன்பார்த்தான் பனங்காட்டூர், திருப்பனந்தாள், திருப்பனையூர், திருவோத்தூர், புறவார் பனங்காட்டூர் என்ற ஐந்து ஊர்களும் அமையும். அவை பஞ்சதல சேத்திரங்கள் எனப்படுகின்றன. தலமரங்களாகிய இரு பனைமரங்கள் உள்ளன. இம்மரங்கள் நெடுங்காலமாக இருந்து வருகின்றன. இரண்டின் அடியிலும் முறையே பனங்கன்றுகள் தாமாகவே தோன்றி வளர்ந்து வருகின்றன. பனைமரங்களை மிகுதியாக உடைய ஊரானதால் தாலவனம் என்றும் இத்தலத்திற்கு பெயருண்டு. தாலம் என்பது பனை மரத்தைக் குறிக்கும்.
சுந்தரர் வரலாற்றுத் தொடர்புடைய திருவாரூரில் உள்ள மாற்றுரைத்த பிள்ளையார் நினைவாக, இங்கு பிரகாரத்தில் உள்ள விநாயகரும் ‘மாற்றுரைத்த விநாயகர் ‘ என்று அழைக்கப்படுகிறார் .
பராசர முனிவர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட சிவலிங்கம் தாலவனேஸ்வரர் மேற்கு நோக்கி சிறிய சன்னதியாக உள்ளது இவர் சதுர ஆவுடையார் ஆவார் . இப்பெருமானே தலத்திற்குரிய இறைவனாவார் .
கல்வெட்டு செய்தி :
இக்கோயில் கி.பி.11 -ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கருங்கல் திருப்பணியாகக் கட்டப்பட்டது என்றும், கல்வெட்டில் இக்கோயில் “”இராசேந்திர சோழப் பனையூர்” என்று குறிக்கப் பெறுகின்றது. கல்வெட்டில் இறைவன் திருப்யெர் ‘பனையடியப்பன்’ பனங்காட்டிறைவன்’ என்று குறிக்கப்பெறுகின்றது.
Photos:
https://alayamtrails.blogspot.com/2022/02/sri-soundareswarar-temple.html
திறந்திருக்கும் நேரம் :
காலை 7 .00 முதல் 9 .00 மணி வரை , மாலை 5 .00 மணி முதல் 7 .00 மணி வரை
Contact details: திரு . கல்யாணசுந்தர குருக்கள் – 9942281758 ,9965981574
செல்லும் வழி :
பேரளம் திருவாரூர் சாலையில் சன்னா நல்லுரை அடைந்து மேலும் அங்கிருந்து 1 km சென்றால் பனையூர் அடையலாம் . மற்றும் திருவாரூர் – மயிலாடுதுறை சாலையில் உள்ள ஆண்டிப்பந்தலில் இருந்து கிழக்கே 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பனையூர். நன்னிலத்தில் இருந்தும் சுமார் 3 கி.மி. சென்று இத்தலத்தை அடையலாம்.
Location: