Sri Sowmya Dhamodhara Perumal Temple -Villivakkam, Chennai

ஸ்ரீ சௌமிய தாமோதரப் பெருமாள் கோயில் – வில்லிவாக்கம் – சென்னை

Sowmya Dhomodhara Perumal temple

மூலவர் : தாமோதரப் பெருமாள்

தாயார் : அமிர்தவல்லி தாயார்

தல தீர்த்தம்  : அமிர்த புஷ்கரணி

ஊர் : வில்லிவாக்கம் , சென்னை

வைகுண்டத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீமந்நாராயணன் துவாபரயுகத்தில் கண்ணனாக அவதரித்து, கோகுலத்தில் யசோதை தாயிடம்  வளர்ந்தார். அவர் பால்ய வயதில் பல குறும்புகளை செய்தார் . இவரை அடக்க முடியாமல் திணறிய தயார் அவருடைய இடுப்பில் கயிறை கட்டினார். யசோதை தாயால் கயிற்றினால் கட்டப்பட்ட காரணத்தால் தழும்பு ஏற்பட்டது . இவ் தழும்புடன் இக்கலியுகத்தில் வில்லிவாக்கம் எனும் சேத்திரத்தில் சவுமிய தாமோதரனாக சேவை சாதிக்கிறார்.

இத்திருத்தலம் சுமார் 800 ஆண்டுகள் முற்பட்டதாக தெரிகிறது . ஊரின் நடு நாயகமாக மூன்று நிலை ராஜகோபுரம் அதில் அழகிய சிற்பங்களுடன் கிழக்கு நோக்கி உள்ளது . கோபுரத்தின் வெளியே உயரமான அழகிய நாற்கால் ஊஞ்சல் மண்டபம் அமைந்துள்ளது .பெருமாள் திருவீதி புறப்பாட்டிற்கு எழுந்தருளும் போது இங்குதான் திவ்ய பிரபந்த வேத பாராயண தொடக்கங்களும் , சாற்று முறைகளும் நடைபெறுகின்றன .

ராஜகோபுரத்தை கடந்து உள்ளே சென்றால் முதலில் பலிபீடம் , கொடிமரம் ,கருடன் சன்னதி  உள்ளது , அதற்கு  நேர் எதிராக மகா மண்டபம் ,அர்த்த மண்டபம் உள்ளது , அதை கடந்து சென்றால் ஸ்ரீ சௌமிய தாமோதரப் பெருமாள் கருவறை வருகிறது . கருவறையில் ஸ்ரீ தேவி , பூதேவியுடன் மூலவர் மூலவர் ஸ்ரீ தாமோதர பெருமாள் நின்ற கோலத்தில் நான்கு கரங்களுடன் சேவை சாதிக்கிறார் . மேற்கரங்கள் இரண்டும் சங்கு சக்கரத்துடன் , கீழ் வலது கரம் அபாய ஹஸ்தமாகவும் , இடது கரம் கடிக்க ஹஸ்தமாகவும் உள்ளன . பஞ்சலோக  ஸ்ரீதாமோதரருக்கு  யசோதை தாயார் கயிற்றினால் கட்டியதால் ஏற்பட்ட தழும்பு இறைவனின் இடுப்பில் உள்ளது .

மகாமண்டபத்தின் வெளியே வாயிற்காப்பாளாராக ஜெய, விஜயர்கள் உள்ளனர் . வலப்புறம் நம்மாழ்வார் , இடப்புறம் ராமானுஜர் சன்னதிகள் உள்ளன .எதிரே கருடன் சன்னதி உள்ளது . பலிபீடத்தின் தென் கிழக்கு திசையில் ஆஞ்சநேயர் சன்னதி உள்ளது .அதற்கு  எதிரே தாயார் ஊஞ்சல் சேவை நடைபெறும் சுக்ரவார ஊஞ்சல் மண்டபம் உள்ளது . மண்டபத்தின் இடது புறத்தில் ஆழ்வார் ஆச்சாரியர்கள் தனி தனி சன்னதியில் எழுந்தருளி உள்ளனர் .

பின்பு நாம் ஸ்ரீ அமிர்தவல்லி தாயார் சன்னதியை காணலாம் . தாயார் அமர்ந்த கோலத்தில் நான்கு திருக்கரங்களுடன் மேற்கரம் இரண்டு தாமரை மலர்களுடன் கீழ் கரம் இரண்டும் வராத அபாய முத்திரையுடன் புன்னகை தவழும் முகத்துடன் அருளை வாரி வழங்குகிறார் . தாயார் சன்னதிக்கு வலதுபுறம் ராமர் சன்னதியும் இடது புறம் கண்ணன் சன்னதியும் உள்ளன . பெருமாள் சன்னதிக்கு இடது புறம் ஆண்டாள் சன்னதி உள்ளது .

வில்வணன் வாதாபி என்ற கொடிய அரக்கர்களை அகத்திய மாமுனிவர் சம்ஹாரம் செய்த இடமே வில்லிவாக்கம் . இக்கோயிலுக்கு அருகிலேயே மிக பழமையான அகத்தீஸ்வரர் கோயில் உள்ளது .

Photo:

https://alayamtrails.blogspot.com/2021/10/sri-sowmya-dhamodhara-perumal-temple.html

திறந்திருக்கும் நேரம் :

 காலை 6 .30 முதல் 11 .30 மணி வரை

 மாலை 5 .00 முதல் இரவு 8 .30 மணி வரை

செல்லும் வழி :

 சென்னை மாநகரின் மேற்கு திசையில் அயனாவரம் – பாடி இடையே வில்லிவாக்கம் உள்ளது. ரெயில் மார்க்கத்தில் பெரம்பூர் – அம்பத்தூர் இடையில் வில்லிவாக்கம் உள்ளது. பேருந்து நிலையத்தின் அருகிலேயே உள்ளது .

Location:

Leave a Reply