ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோயில் – திருத்தணி
மூலவர் ‐ சுப்பிரமணியசுவாமி
உற்சவர் –சண்முகர்
அம்பிகை – வள்ளி , தெய்வானை
தல விருட்சம் ‐ மகுடமரம்
தீர்த்தம் ‐ இந்திர தீர்த்தம் தவிர சரவணப்பொய்கை , சரஸ்வதி
தீர்த்தம்,மடெசட்டிக்குளம், நல்லாங்குளம்
பழமை ‐ 1000 வருடங்களுக்குமுன்
புராணப்பெயர் – சிறுதணி
ஊர் ‐ திருத்தணி
மாவட்டம் ‐ திருவள்ளூர், தமிழ்நாடு
முருகனை ஆறு படைகளில் ஐந்தாம் படை தலமாகும் .
திருத்தணி முருகன் கோவில் மிகவும் பழமையானது. அருணகிரிநாதர் இத்தலத்தை போற்றி 63 திருப்பாடல்களை பாடினார்.பாம்பன் குமரகுருதாச சுவாமிகள், வடலூர் ராமலிங்க அடிகள், கந்தபைய தேசிகர், கச்சியப்ப முனிவ கச்சியப்ப சிவாச்சாரியார் மற்றும் அருணகிரிநாதர் முதலிய சான்றோர்கள் திருத்தணி முருகனை பெரிதும் புகழ்ந்துள்ளனர்.
ஆண்டின் 365 நாட்களை குறிக்கும் விதமாக 365 படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இக்கோயிலில் அபராஜிதவர்மன்(கிபி 875-893) எனும் பல்லவ மன்னனின் கல்வெட்டும், பராந்தகச்சோழன்(கிபி 907-953) காலத்து கல்வெட்டும் காணப்படுகிறது. மலைக்கோயில் கட்டிடகலையானது சாளுக்கியர் காலக்கட்டிடக்கலையை சார்ந்தது.
திருத்தணி முருகனிடம் வேல் கிடையாது என்பது இன்னும் ஒரு சிறப்பு. ஆறுபடை வீடுகளில் திருத்தணியில்தான் உயரமான கருவறை கோபுரம் உள்ளது. சுவாமிமலை போலவே திருத்தணியிலும் யானைதான் முருகப்பெருமானின் வாகனமாக உள்ளது. இந்த யானை வாகனம் சந்நிதியின் வெளிப்புறத்தைப் பார்த்தவாறு உள்ளது.
தல வரலாறு :
தேவர்களுக்குத் தீராத துன்பம் கொடுத்து வந்த சூரபத்மனுடன் போர் புரிந்து தேவர்களின் துயரத்தை நீக்கி, வள்ளியை மணந்து கொள்ள வேடர்களுடன் விளையாட்டாகப் போர் புரிந்து, முருகப்பெருமான் கோபம் தணிந்து அமர்ந்த தலம் திருத்தணி.அதனாலேயே இத்தலம் தணிகை என்று அழைக்கப்படுகிறது .
தேவர்கள் பயம் நீங்கிய இடம், முனிவர்கள் காமவெகுளி மயக்கங்களாகிய பகைகள் தணியும் இடம், அடியார்களின் துன்பம், கவலை, பிணி, வறுமை முதலியவற்றைத் தணிக்கும் இடமாதலாலும் திருத்தணி என பெயர் பெற்றது. முருகன் இத்தலத்தில் ஒரு தனி மலையில் கிழக்கு நோக்கி எழுந்தருளி உள்ளார்.
முருகப்பெருமான், ஞானவேல் பெற்றதன் மூலம் ஞானசக்தியும், தெய்வயானையை மணம் புரிந்து கிரியா சக்தியும், வள்ளி மலையில் வேடுவ அரசன் நம்பி அரசனால் வளர்க்கப்பட்ட வள்ளியை வலிந்து சென்று திருவிளையாடல் புரிந்து தமிழ் இலக்கண முறைப்படி திருமணம் செய்து கொண்டதால் இச்சாசக்தியும் பெற்றார். முருகனுக்கு ஞானசக்தி, கிரியாசக்தி, இச்சா சக்தி ஆகிய முழுமை குணம் நிறைந்த வள்ளி, தெய்வானையுடன் காட்சியளிப்பதே திருத்தணியின் சிறப்பாகும்.
திருதணிகை மலையின் வடக்கே உள்ள மலை வெண்ணிறமாக உள்ளதால் பச்சரிசி மலை என்றும், தெற்கே உள்ள மலை கருநிறத்துடன் உள்ளதால் பிண்ணாக்கு மலை என்றும் கூறப்படுகிறது.
முருகர் தானே தேர்ந்தெடுத்து அமர்ந்த தலமாதலால் ஸ்கந்தகிரி , செல்வங்கள் யாவற்றையும் தன்னகத்தே கொண்டுள்ளதால் ஸ்ரீபரிபூர்ணகிரி ,பக்தர்கள் கோரிக்கைகளை நிமிடத்தில் நிறைவேற்றும் தலமாதலால் க்ஷணிகாசலம் ,இங்கு நாள் தோறும் கருங்குவளை மலர்கள் மலர்வதால் அல்லகாத்திரி,இந்திரன் வரம் பெற்ற தலம் என்பதால் இந்திரநகரி , நாரதருக்கு விருப்பமான தலமாதலால் நாரதப்பிரியம் ,அகோரம் என்ற அந்தணன் முக்தி பெற்ற தலமாதலால் அகோரக்கள்வயப்பிரமம் ஆகிய திருப்பெயர்கள் இத்தலத்திற்கு உண்டு .
மகாவிஷ்ணு திருத்தணிகை முருகனை தரிசித்து சூரபத்மனின் சகோதரனான தாரகாசுரனிடம் இழந்த தனது சக்ராயுதத்தை மீண்டும் பெற்றாராம் . திருமாலின் ஆலயங்களை போன்று ,முருகனின் திருப்பாத சின்னத்தை பக்தர்களின் தலையில் வைத்து ஆசி வழங்குவது இக்கோயிலின் சிறப்பாகும் .
இங்கு பள்ளியறை பூஜையின் போது ஒருநாள் வள்ளிதேவியுடன் ,மறுநாள் தெய்வானையுடன் பள்ளியறைக்கு எழுந்தருளுகிறார் முருக பெருமான் .இக்கோயிலில் நாம் தரிசிக்க செல்லும் போது எல்லா சந்நிதிகளும் தரிசித்துவிட்டு பிறகு நிறைவாக இங்குள்ள ஆபத்சகாய விநாயகரை வணங்க வேண்டும் என்பது ஐதீகம் .
Photos:
https://alayamtrails.blogspot.com/2021/06/sri-subramaiya-swamy-temple-thiruthani.html
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 6 மணியிலிருந்து இரவு 9 மணி வரையில் கோயில் தொடர்ந்து திறந்திருக்கும்.
செல்லும் வழி:
அரக்கோணத்தில் இருந்து 18 கி.மீ. தூரத்திலும், சென்னைக்கு வடமேற்கே 84 கி.மீ. தூரத்திலும் இருக்கிறது.
English :A must visit for every Murugan devotee, the Thiruthani Murugan Temple is the fifth out of six Padai Veedus (holy abodes) of Lord Murugan. You simply cannot miss visiting this temple. The hill has 365 steps indicating 365 days of the year. Legend also has it that Indra the king of the Gods gave his daughter Deivayanai in marriage to Skanda, and along with her presented his elephant Airavatam as part of his dowry offering. Upon Airavatam’s departure Indra found his wealth waning. Subramanyar is said to have offered to return the white elephant, however Indra bound by protocol refused to accept a gift that he had made, and insisted that the elephant face his direction, hence the image of the elephant in this temple also faces the east.