ஸ்ரீ தாயுமானேஸ்வரர் கோயில் – திருச்சிராப்பள்ளி
இறைவன் : தாயுமானவர் ,மாத்ருபூதேஸ்வரர்
இறைவி : மட்டுவார் குழலம்மை ,சுகந்த குந்தளாம்பிகை
நுழைவாயில் விநாயகர் : ஸ்ரீ மாணிக்க விநாயகர்
தல விருச்சகம் : வில்வ மரம்
தல தீர்த்தம் : பிரம்மதீர்த்தம் ,சிவகங்கை ,காவேரி
ஊர் : திருச்சிராப்பள்ளி
மாவட்டம் : திருச்சிராப்பள்ளி ,தமிழ்நாடு
- தேவார பாடல் பெற்ற தென்கரை தேவார தலங்களில் 6 வது தலமாகும் . தேவார பாடல் பெற்ற 274 தலங்களில் 69 வது தலமாகும் .
- தென்கயிலாயம் எனப் போற்றப்படும் இத்திருத்தலத்தில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார் .தமிழகத்தில் நான்காவது பெரிய லிங்கமாக மேற்கு நோக்கி அருள்பாளிக்கிறார்.
- இக்கோயிலில் ஜூரகரேஸ்வரர் சன்னதி உள்ளது.அவரை வழிபட்டால் ஜுரம் மற்றும் நரம்பு சம்பந்தமான நோய்களில் இருந்து விடுபடலாம் .
- திருமூலர் மரபில் வந்த சாரமா முனிவர் இறைவனை செவ்வந்தி மலர்களால் வழிபட்ட திருத்தலம் .
- பாதாள அய்யனார் தனி சன்னதியில் இருக்கிறார் ,இவரை வழிபட்டால் பஞ்சம் நீங்கும் .
- புவியியல் ஆய்வுப்படி இம்மலை 3500 பில்லியன் ஆண்டுகள் பழமையானது .இம்மலைமேல் உள்ள பாறைகள் மீது இரண்டு தள கட்டிட அமைப்பை கொண்டு உலகில் வேறு எங்கும் இல்லாத அதிசயமான ,தொன்மையான கட்டிடக் கலைக்கு சான்றாக உள்ளது
- இக்கோயிலின் சிற்பமண்டபத்தில் கற்சிலைகள் ,கற்தூண்கள் ,கற்சங்கிலிகள் ,கல்பந்துகள்,பல யாளிகள் மற்றும் இறைவனின் நுண்ணிய பருப்பொருள் வடிவங்கள் பல வடிவங்களாக வரையப்பட்டுள்ளன . நவீன கருவிகள் இல்லாத அன்றையக் காலத்திலேயே குன்றின் மேல் கலையழகு மிக்க சிற்பங்களுடன் 273 ஆதி உயரத்தில் 417 படைகளுடன் இக்கோட்டை கோயில் அமைந்துள்ளது .இக்கோயிலுக்கு கொடும்பாளூரிலிருந்து கற்களும் ,பிற பொருட்களும் கொண்டுவரப்பட்டு ,இம்மலைக்கோயில் கட்டப்பட்டது என அறியமுடிகிறது .
- மாணிக்க விநாயகர் சன்னதி முதல் தாயுமானவர் சன்னதி வரை படிக்கட்டுகள் கருங்கல்லால் மூடப்பட்ட தள அமைப்பை கொண்டது .
- உச்சிபிள்ளையாரின் சன்னதி வாயில் இருந்து படிக்கட்டுகளும் ,மலையின் தோற்றமும் விநாயகரின் துதிக்கையை போல் இயற்கையாகவே அமைந்துள்ளது .
- மலையின் அடிவாரத்தில் மாணிக்க விநாயகர் சன்னதி ,மலையின் நடுவில் தாயுமானவர் சன்னதி ,மலையின் உச்சியில் உச்சி விநாயகர் என மூன்று சிகரங்களை கொண்டது .
- தெப்ப குளம் கரிகால பெருவளத்தான் அவர்களால் வெட்டப்பட்டது .
- இங்குள்ள முருகப்பெருமானை அருணகிரிநாதர் தன் திருப்புகழில் பாடியுள்ளார் .
- கி.பி 7 ஆம் நூற்றாண்டில் மகேந்திரவர்மனால் குடையப்பெற்ற இரண்டு குடவரை கோயில்கள் இங்கு உள்ளன .
- மூலன் மரபில் வந்த சாரமா என்ற முனிவர் செவ்வந்தி மலர்களை கொண்டு வழிபட்ட காரணத்தால் செவ்வந்திநாதர் என்றும் அழைக்கப்படுகிறார் .
- எளிய பெண்ணின் பேரன்பிற்காக தாயாக இருந்து மருத்துவம் பார்த்ததால் தாயுமானஸ்வாமி என்று அழைக்கப்படுகிறார் .
- தாயாய் மாறிய ஈசன் : ரத்தினவாதி என்ற பக்தையின் பிரசவத்திற்காக அவளின் தாய் இயற்கையின் சீற்றத்தினால் வர தாமதமாகியதால் அவளின் மன வேதனையைப் பொறுக்க முடியாத ஈசன், ரத்தினாவதியின் தாய் போன்ற நரைத்த தலை, தளர்ந்த நடை என்று, கையில் கோலூன்றியபடி, பேறு கால மருந்து பொருட்களுடனும், தாய் வீட்டுச் சீருடனும் அங்கு வந்து சேர்ந்தார். தன் தாயின் வருகையைக் கண்டு ரத்தினாவதி மனம் மகிழ்ந்தாள்.
தாயைப் போல் வந்த இறைவனும், ரத்தினாவதிக்கு தைலம் தடவி, மருந்து போன்றவற்றைக் கொடுத்து பேறு கால உதவிகள் அனைத்தையும் செய்தார். ஒரு நாள் ரத்தினாவதிக்கு பிரசவ வலி ஏற்பட்டு, அவள் அழகிய ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். தாயுமான இறைவன், ரத்தினாவதிக்கும், அவள் பெற்ற குழந்தைக்கும் வேண்டிய பணிவிடைகளைத் தாயாகவும், தாதியாகவும் இருந்து செய்து வந்தார். குழந்தையை தினமும் குளிப்பாட்டி, தொட்டிலில் இட்டு, கண்ணும் கருத்துமாக காத்து வந்தார். குழந்தை பிறந்து 7 நாட்கள் கடந்துவிட்டன.
அப்போது இயற்கையின் சூழல் மாறிவிட்டது. புயல், மழை நின்று, ஆற்றில் வெள்ளப்பெருக்கும் குறைந்து விட்டது. இதனால் ரத்தினாவதியின் உண்மையானத் தாயார், அவளது வீட்டுக்கு வந்து சேர்ந்தார். ‘ஏற்கனவே வீட்டில் தன்னுடைய தாய் இருக்கும் நிலையில், வந்திருப்பது யார்?’ என்று குழம்பிப்போனாள் ரத்தினாவதி. அவனது கணவன் தனகுப்தனும் திகைத்துப் போய் நின்றான். அப்போது தாயுமானவராக வந்த இறைவன் மறைந்து, ரிஷப வாகனத்தில் அனைவருக்கும் காட்சி கொடுத்து மறைந்தார். இவ்வாறு ஈசனே தாயாக வந்து பிரசவம் பார்த்த சிறப்பான தலம் இது ,அதனால் இத்தலத்தில் சுக பிரசவத்திற்கு வேண்டிக்கொள்வார்கள் .
மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் :
அயோத்தியில் ராமர் பட்டாபிஷேகம் முடிந்து, அவரிடம் விடைபெற்று கொண்டு திரும்புகையில், நினைவுப் பரிசாக ரங்கநாதர் சிலையை பெற்றுக் கொண்டு விபீஷணன் தெற்கே வந்தான். அவன் அகண்ட காவிரியில் சற்று ஓய்வெடுக்க எண்ணிணான்.
அப்போது, அங்கு சிறுவன் உருவில் நின்று கொண்டிருந்த விநாயகரிடம் ரங்கநாதர் சிலையை சிறிது நேரம் வைத்திருக்குமாறு கொடுத்து விட்டு சென்றான். விநாயகர் சிறிது நேரம் பார்த்து விட்டு அச்சிலையை பூமியில் வைத்து விட்டு அருகில் இருந்த மலையில் போய் அமர்ந்து கொண்டார்.
திரும்பி வந்த விபீஷணன் சிறுவனைக் காணாமல் மலைத்து போனான். செய்வதறியாது பூமியில் இருந்த சிலையை எடுக்கப்பார்த்தும் அவனால் சிலையை நகர்த்த முடியவில்லை. இதனால் இலங்கைக்கு செல்ல இருந்த ரங்கநாதர், விநாயகரின் அருளால் ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளினார். சிலையை கொடுத்த அந்த சிறுவன் மலையில் அமர்ந்திருப்பதை பார்த்த விபீஷணன் கோபமடைந்து, விநாயகர் தலையில் ஒரு குட்டு வைத்தான்.
Photos:
https://alayamtrails.blogspot.com/2021/06/sri-malaikottai-vinayagar-temple-trichy.html
கோயில்திறந்திருக்கும் நேரம் :
காலை 5 .00 – 12 .00 வரை மாலை 4 .00 -8 .00 மணி வரை
அமைவிடம்
திருச்சி மாநகரின் மையத்தில் இக்கோயில் அமைந்துள்ளது .படிக்கட்டுகள் வழியாக நடந்துதான் செல்லவேண்டும் .
Location: