Sri Vamanapureeswarar Temple- Thirumanikuzi

வாமனபுரீஸ்வரர் திருக்கோயில்- திருமாணிக்குழி – கடலூர்

Sri Vamanapureeswarar Temple- Thirumanikuzi

இறைவன் : வாமனபுரீஸ்வரர் , உதவிநாயகர் , மாணிக்கவரதர்

இறைவி : அம்புஜாட்சி , உதவிநாயகி , மாணிக்கவல்லி

தலவிருச்சம் : கொன்றை மரம்

தல தீர்த்தம் : ஸ்வேத தீர்த்தம் , கெடில நதி

ஊர் : திருமாணிக்குழி.

மாவட்டம் : கடலூர் ,தமிழ்நாடு

பாடியவர்கள்: திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற நடுநாட்டுத் தலங்களில் இது 17வது தலம் . தேவார சிவத்தலங்கள் 274 தலங்களில் 228 வது தலமாகும் . அருணகிரிநாதர் தன் திருப்புகழில் இத்தல முருகனை பற்றி பாடியுள்ளார் .

ஆலய வழிபாட்டில் முதல் மரியாதை பீமருத்ரருக்கே. அதன்பிறகே சுவாமிக்கும் , அம்மைக்கும் நடைபெறுகின்றது. இறைவன் எப்போதும் இறைவியுடன் இருப்பதாகச் சொல்லப்படுவதால், இத்தலத்தில் அர்த்தசாம பள்ளியறை வழிபாடு என்பது தனியே கிடையாது.இத்தலத்தில் கார்த்திகையில் (பரணியில் அல்லாமல்) திருவண்ணாமலையில் நடைபெறுவது போல ரோகிணியில் தீபதரிசனம் நடைபெறுகின்றது.

வாமனபுரீஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.வாமனப் பெருமாள் பூஜித்த போது பிரமாண்டமாக இருந்த தன் திருவுருவை சுருக்கி காட்சி அளித்த புண்ணியத் தலம்.விநாயகரின் வாகனமான மூஷிகம் விநாயகரின் எதிரில் இல்லாமல் அருகில் உள்ளது.

உள்ளே கருவறையில் மூலவர் சுயம்பு லிங்க உருவில் காட்சி தருகிறார். இந்த ஆலயத்தின் ஒரு சிறப்பம்சம் இங்கு மூலவரை நாம் நேரடியாக தரிசிப்பது இயலாது. ஏனெனில் எந்நேரமும் மூலவர் சந்நிதியில் திரை போடப்பட்டிருக்கும். இறைவனும், இறைவியும் எப்போதும் சிவசக்தியாக சேர்ந்திருக்கும் தலமாக இது கருதப்படுவதால் அவர்களை தொந்தரவு செய்யாமல் இருக்கும் பொருட்டு திரையிடப்பட்டிருக்கிறது.இறைவன் எப்போதும் இறைவியுடன் இருப்பதாகச் சொல்லப்படுவதால், இத்தலத்தில் அர்த்தசாம பள்ளியறை வழிபாடு என்பது தனியே கிடையாது. மேலும் மகாவிஷ்ணு மாணியாக, அதாவது பிரம்மசாரியாக வழிபடுவதற்கு இடையூறு இல்லாமல் காவலாக பீமருத்திரர் உள்ளார் என்றும் சொல்லப்படுகிறது. தீபாராதனையின் போது மட்டும் திரையை விலக்கி சற்று நேரம் மட்டும் இறைவனை தரிசிக்க அர்ச்சகர்கள் வாய்ப்பு தருவார்கள். அச்சமயம் மட்டுமே சிறிய ஆவுடையார் மீதுள்ள சிறிய சிவலிங்கத் திருமேனியை தரிசிக்கும் பேறு கிடைக்கும். இறைவனை மறைத்திருக்கும் திரைச்சீலையில் பீமருத்திரர் உருவம் சித்திரமாய் தீட்டப்பட்டுள்ளது. ஆலய வழிபாடுகளில் அர்ச்சனை, பூஜை முதலியன முதலில் பீமருத்திரருக்குத் தான் நடைபெறும். பின்னர் அவர் அனுமதி பெற்று மூலவருக்கு தீபாராதனை நடைபெறும்

தலமும் , கோயிலும் கெடிலநதியின் தென்கரையில் கேபர் மலைத்தொடரின் அடிவாரத்தில் அமைந்துள்ளன.கோயிலுக்கு எதிரில் உள்ள மலை செம்மலையாகக் காட்சியளிக்கிறது.விநாயகர் முதல் சண்டிகேஸ்வரர் வரை அனைவருக்கும் ஆதித்ய விமானம் உள்ளது.

சோழர்காலக் கட்டமைப்பிலான கோயில்.திரிசங்கு மகாராஜா, அரிச்சந்திரன் போன்ற சூரிய குல வம்சத்தினரால் இக் கோயில் சீரமைக்கப் பட்டுள்ளது.சோழ, பாண்டிய, விஜயநகர மன்னர்கள் காலத்திய கல்வெட்டுக்களில் இறைவன் பெயர், உதவிநாயகர் , உதவி மாணிகுழி மகாதேவர் என்று குறிக்கப்படுகிறது.

மூலவர் தரிசனத்திற்கு செல்லும் வாயிலில் வாமனாவதார வரலாறு சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன.ஆலய வழிபாட்டில்அர்ச்சனை , தீபாராதனை, பூசை முதலியன முதலில் பீமருத்திரருக்கே நடைபெற்று, பின்னர் சுவாமிக்கு நடைபெறுகிறது.இத்தலத்தில் உள்ள யுகலிங்கங்கள், கஜலட்சுமி, வடுகநாதர் நடராஜர் சப்தமாதர்கள், அறுபத்து மூவர் சன்னிதிகள் விசேஷமானவை.இந்த கிரி க்ஷேத்திரத்தில், மலையில் தீபம் ஏற்றும்போது இறைவனுடைய நெற்றிக்கண் ஒளிர்வதுபோலவே இருக்கும். இந்த மலைக்கு ஜோதிகிரி, ரத்னகிரி, புஷ்பகிரி, ஔஷதகிரி என்ற பெயர்களும் உண்டு.இங்குள்ள தட்சிணாமூர்த்தி, நாகத்தை கையில் ஏந்திய நிலையில் வித்தியாசமான தோற்றத்துடன் காட்சியளிக்கிறார்.

தலபெருமை:
இத்தலம் தேவாரப் பாடல்களில் உதவிமாணிக்குழி“என்று குறிக்கப்படுகிறது. இதனால் உதவி என்பது ஊர்ப் பெயராக இருந்து, காலப்போக்கில் மாணிகுழிஎன்னும் கோயில் பெயரே ஊருக்குப் பெயராகியிருக்கலாம் என்று தோன்றச்செய்கிறது. (இதற்கேற்ப தலபுராணத்தில் வரும் செய்தி வருமாறு:-) வட நாட்டைச் சேர்ந்த ருத்ராட்ச வணிகன் ஒருவன் இருந்தான். அவனது பெயர் அத்ரி என்பதாகும். அவன் இந்த தலத்தின் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது திருடர்கள் அவனிடம் இருந்த பொருட்களை கொள்ளையடிக்க முற்பட்டனர். ஆனால் ஈசன் அந்த வணிகனை திருடர்களிடம் இருந்து காப்பாற்றி அருள்புரிந்தார். எனவே இத்தலத்திற்கு உதவி மாணிக்குழி என்றும் ஈசனுக்கு உதவி நாயகர் என்றும் அம்பாளுக்கு உதவிநாயகி என்றும் பெயர் ஏற்பட்டது. கல்வெட்டிலும் சான்றாக, இத்தலம் ‘உதவி ‘ என்றே குறிக்கப்பெறுகின்றது.

Sri Vamanapureeswarar Temple- Thirumanikuzi

அகத்தியர் சுயம்பு லிங்ககோவில்:
வாமனபுரீஸ்வரர் கோவிலில் அகத்திய முனிவர் வழிபாடு செய்துள்ளார். இந்த திருத்தலத்திற்கு வந்தபோது, அகத்தியரால் உடனடியாக இறைவனைக் காண முடியவில்லை. இறைவனைக் காண்பதற்காக அவர் வெகுநேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாம். இதனால் கோபம் அடைந்த அகத்தியர், அங்கிருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மலையின் அடியில் ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டுள்ளார். இந்த வரலாற்றை மெய்ப்பிக்கும் வகையில், வாமனபுரீஸ்வரர் கோவில் அருகே அகத்தியர் சுயம்பு லிங்கக் கோவில் அமைந்துள்ளது.

Sri Vamanapureeswarar Temple- Thirumanikuzi

தல வரலாறு:
ஒருமுறை இந்திரனின் தாயார் அதிதி தேவி திருமறைக்காடு (வேதாரண்யம்) திருத்தலத்திற்கு வந்து நெய் தீபம் எற்றி ஈசனை வழிப்பட்டார். அப்போது விளக்கின் சுடர் அணையும் நிலையில் இருந்தது.அந்த நேரத்தில் பசியால் அலைந்து கொண்டிருந்த எலியின் மூக்கு பட்டு விளக்கின் நெய்யை சாப்பிட முயன்றது. எலியின் மூக்கு பட்டு விளக்கின் திரி தூண்டிவிடப்பட்டதில் விளக்கின் சுடர் பிரகாசமாக எரிய அரம்பித்தது.
இது தற்செயலாக நிகழ்ந்தாலும் எலியின் செயலால் மனம் மகிழ்ந்த இறைவன், அந்த எலியை மறுபிறவியில் மகாபலி சக்கரவார்த்தியாக பிறக்கச் செய்தார். மறுபிறவியில் சிவனின் மேல் பக்தி கொண்டு தர்ம வாழ்வை மகா பலி மேற்கொண்டான். இருப்பினும் அவன் அசுர வம்சத்தவன் என்பதால் தேவர்கள் அவனை அழிக்கும்படி விஷ்ணுவிடம் முறையிட்டனர். விஷ்ணுவும், வாமனராக குள்ள அவதாரம் எடுத்தார். பின்னர் மகாபலியின் யாசகசாலைக்கு சென்று மூன்றடி மண் கேட்டார். தர்மத்தின் வழி நின்ற மகாபலி அதை தர ஒப்புக்கொண்டான். முதல் அடியால் பூமியையும், இரண்டாம் அடியால் விண்ணையும் அளந்தார். மூன்றாம் அடியை மகாபலியின் தலையில் வைத்து அவனை பாதாள லோகத்தில் தள்ளி பாதாளலோகத்தையும் அளந்து முடித்தார். மகாபலி தர்மவான் என்பதால், தர்மம் செய்தவனை துன்புறுத்திய பாவம் வாமனரைத் தொற்றிக் கொண்டது. இதையடுத்து அந்த தோஷம் நீங்குவதற்காக திரு மாணிக்குழி தலம் வந்தார் வாமனர். அங்கு ஈசனை வழிபட்டு பாவம் நீங்கப் பெற்றர். இதனால் அத்தல இறைவன் வாமனபுரீஸ்வரா என்று அழைக்கப்படுகிறார். இத்தல அம்பாளின் திருநாமம் அம்புஜாட்சி என்பதாகும்.

திறந்திருக்கும் நேரம் ( Opening Time):
காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை திறந்திருக்கும்.

செல்லும் வழி :
கடலூர் நகரில் இருந்து சுமார் 10 கி.மி. தொலைவில் திருமாணிகுழி உள்ளது.கடலூரில் இருந்து திருவஹீந்திபுரம், பாலூர் வழியாக பண்ருட்டி செல்லும் பேருந்தில் சென்று திருமாணிகுழி நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து ஊருக்குள் செல்லும் சாலையில் சுமார் 1 கி.மி. சென்றால் சாலை ஓரத்திலுள்ள கோவில் அடையலாம்.
கடலூரில் இருந்து குமணங்குளம் செல்லும் நகரப் பேருந்து எண் 14 திருமாணிகுழி வழியாகச் செல்கிறது.

அருகில் உள்ள கோயில்கள் :
இத்தலம் அருகில் திருவதிகை , திருப்பாதிரிப்புலியூர் தேவாரத்தலங்கள் உள்ளன மற்றும் திருவந்திபுரம் திவ்ய தேசமும் உள்ளது.

குறிப்பு : மிகவும் சிறிய கிராமத்தில் இக்கோயில் அமைந்துள்ளதால் கோயிலுக்கு தேவையான தீப எண்ணெய்,அபிஷேக பொருட்களை வாங்கி செல்லுங்கள் .

Sri Vamanapureeswarar Temple, located at Thirumanikuzhi, Cuddalore District . this temple one of Devara hymns place.

It is believed that Lord Shiva here is always present with Goddess Parvathy as “Shivashakti”. The sanctum sanctorum itself is considered to be the bed room of Lord Shiva.

This is the only Shiva temple where you cannot have dharisanam of the lord without the help of a priest. Devotees can worship the lord for a matter of 2 minutes when the screen is removed. 

The temple is situated on the southern banks of river Gadilam and at the foothill of the Capper hills. It is believed that this temple was renovated by the ancient emperors Thirisangu and Harichandra. It was also improved during the time of the Chola kings. 

Location:

தென்னாடுடைய சிவனே போற்றி !

Leave a Reply